சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் முரசின் ‘இன்னொரு டே, இன்னொரு சிலே’ (Innoru Day Innoru Slay) வலையொலியில் மூன்று இளைஞர்கள் தேசிய தினம் பற்றியும் ஒரு சிங்கப்பூரராகத் தங்கள் அடையாளத்தைப் பற்றியும் பகிர்ந்துகொண்டனர்.
‘உணவு, செருக்கு, பாதுகாப்பு’ என்று மூன்று சொற்களில் தம் தாய்நாடான சிங்கப்பூரை விவரித்தார் சுந்தரவடிவேல் ப்ரபவ், 19. மற்ற நாடுகளைவிட தம் நாடு பல கூறுகளில் சிறப்பாக இருக்கிறது என்ற எண்ணமே அந்தச் செருக்கிற்கான காரணம் என்கிறார் அவர்.
தேசிய தினக் கொண்டாட்டங்கள்
ஒவ்வோர் ஆண்டும் தொலைக்காட்சியில் தேசிய தின அணிவகுப்பைக் குடும்பத்தோடு கண்டு ரசித்தாலும், நேரில் சென்று தேசிய தின அணிவகுப்பின் முன்னோட்ட நிகழ்ச்சியை அனுபவித்தது மறக்க முடியாத நினைவாக இருந்தது என்றார் சத்தியமூர்த்தி சர்வேஷ்வரமூர்த்தி, 16.
அதே போல, தமது தொடக்கக் கல்லூரியின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் பேச்சைக் கேட்டுப் புல்லரித்துப் போன அனுபவத்தை நினைவுகூர்ந்தார் ப்ரபவ்.
ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தேசிய தினப் பாடல்கள் ஒருவித மகிழ்ச்சியையும் பூரிப்பையும் கொடுக்கின்றன என்றும் அவர்கள் கூறினர்.
அதே நேரத்தில், ‘முன்னேறு வாலிபா’, ‘சிங்கை நாடு’ ஆகிய தேசிய தினத் தமிழ்ப் பாடல்களைப் புதுப்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற தமது கருத்தை ப்ரபவ் பதிவிட்டார்.
“ஏராளமான உள்ளூர்த் தமிழ் எழுத்தாளர்களும் இசையமைப்பாளர்களும் இருக்கின்றனர். அவர்கள் முன்வந்து புதிய தமிழ் தேசிய தினப் பாடல்களை இயற்றலாம்,” என்பது அவரது கருத்து.
நாட்டைப் பிரதிநிதித்த அனுபவம்
கடந்த 2024ஆம் ஆண்டு சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, இலங்கை என நான்கு நாடுகள் கலந்துகொண்ட சிலம்பப் போட்டியில், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார் ரூபனேஸ்வர், 13.
தொடர்புடைய செய்திகள்
போட்டியில் கலந்துகொண்ட நேரத்தில் பயமாக இருந்தாலும், நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக அவர் கூறினார்.
அதே போல, அனைத்துலக அளவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து தமிழ் விவாதப் போட்டியில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் ப்ரபவ்.
“ஒரு நாட்டையே பிரதிநிதிக்கிறோம் என்ற எண்ணத்தையும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் அகற்றிவிட்டுத்தான் போட்டியில் கலந்துகொண்டோம்,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் தனிச் சிறப்பு
அனைவரையும் அரவணைக்கும் நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது என்ற ஒருமித்தக் கருத்தை வலையொலியில் பங்கேற்ற மூன்று இளையர்களும் பதிவிட்டனர்.
செக்குமாடு போல தொடர்ந்து ஒரே வேலையைச் செய்வது இந்தத் தலைமுறைக்குப் பிடிப்பதில்லை என்றும், பிடிக்காதவற்றைச் செய்யாமல் இருப்பதற்கான துணிச்சலும் அவர்களுக்கு உண்டு என்றும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
“இன்றைய இளையர்கள் தங்களுக்கு விருப்பமான, பிடித்த வேலையைச் செய்வதற்கான வாய்ப்புகள் நம் நாட்டில் கடல்போல குவிந்து கிடக்கின்றன,” என்றார் பிரபவ்.