தமது முதல் வெளிநாட்டுப் பணிக்காக சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரக அதிகாரியாக (அரசியல்) நியமிக்கப்பட்டபோது, வைஷ்ணவி வாசுதேவனுக்கு உணர்ச்சி பெருக்கெடுத்தது.
தமிழ்நாடு, கேரள மாநிலங்களிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த தம் முன்னோர்களின் மண்ணுக்கே பணி நிமித்தமாகத் திரும்புவது, வெளியுறவு அமைச்சு அதிகாரியான அவருக்கு விளக்கமுடியாத உற்சாகத்தைத் தந்தது.
அதேவேளை, சிங்கப்பூர்க் குடியரசின் பிரதிநிதியாக, இருதரப்பு அரசியல் பகுப்பாய்வு, கொள்கை ஆலோசனைகள், அரசாங்கங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முக்கியப் பொறுப்புகளும் அவர் கைகளில் இருந்தன.
உற்சாகம் ஒருபுறமிருக்க, குடும்பச் சூழல் அத்தருணத்தில் அவருக்குச் சவாலாக அமைந்தது. கர்ப்பமாக இருந்ததால், சென்னை பயணத்தை ஆறு மாதங்கள் தள்ளிப்போட அவர் முடிவெடுத்தார்.
சென்னைக்கான துணைத் தூதர் எட்கர் பாங், இந்தியாவுக்கான சிங்கப்பூர்த் தூதர் சைமன் வோங் என இரு தலைமை அதிகாரிகளின் முழு ஆதரவும் அவருக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தம் கணவருடனும் ஆறு மாதக் குழந்தையுடனும் 2024 மே மாதம் வைஷ்ணவி சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
“சிங்கப்பூரில் உள்ள குடும்பத்தினரைப் பிரிந்து, குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற அச்சம் எனக்கு இருந்தது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
மருத்துவராகப் பணியாற்றும் கணவர் ஆதித்யா சங்கமேஷ்வரின் பங்களிப்பு, புரிந்துணர்வுடன் நடந்துகொண்ட மேலதிகாரிகள், சென்னைத் துணைத் தூதரகக் குழுவினரின் ஆதரவு தமது பயணத்தைச் சுமுகமாக்கியதாக வைஷ்ணவி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தமிழ் அமைத்த பாலம்
சிங்கப்பூரில் 10 ஆண்டுகள் தமிழ் பயின்றிருந்தாலும், இங்கு ஆங்கிலமே தனது முதன்மைப் பேச்சுமொழியாக இருந்ததை வைஷ்ணவி ஒப்புக்கொண்டார். ஆனால், சென்னை வாழ்க்கை அவருக்குத் தமிழை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக அமைந்தது.
“இங்குள்ள மக்களிடம் நான் தமிழில் பேசும்போது, அவர்கள் முகத்தில் அன்பையும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கண்டேன். உலகின் பழைமையான செம்மொழியாகவும் கலாசாரப் பெருமையாகவும் தமிழ் திகழ்வதால், துணைத் தூதரக அதிகாரி ஒருவர் சில வார்த்தைகள் தமிழில் பேசினாலும் அது உடனே அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறது,” என்றார் அவர்.
வைஷ்ணவி வணக்கம் சொல்வது, அங்கிருப்பவர்களுடனான நெருக்கத்தை உடனடியாகக் கூட்டியது. சிங்கப்பூரர் ஒருவர் எப்படி இவ்வளவு இயல்பாகத் தமிழ் பேசுகிறார் என்று வியப்புடன் கேட்கும் உள்ளூர் மக்களிடம், சிங்கப்பூரின் வரலாற்றையும் சுதந்திரத்தின்போது தமிழ் அங்கு நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டதையும் பெருமையோடு விளக்குவதற்கு இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்கிறார்.
கலாசாரம் மூலம் அரசதந்திரம்
கர்நாடக இசையின்மீது சிறுவயது முதலே ஆர்வம் கொண்ட வைஷ்ணவிக்கு, இந்தியாவின் கலாசாரத் தலைநகர் எனப் போற்றப்படும் சென்னை ஒரு சிறந்த தளமாக அமைந்தது. ஏழு வயதில் அவரின் பெற்றோர் அவரைச் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் சேர்த்ததிலிருந்து இசைப் பயணம் தொடங்கியது.
சென்னையின் புகழ்பெற்ற மார்கழி இசை விழாவின்போது, கடந்த 2025 டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற ஹம்சத்வனியின் 30வது வெளிநாடுவாழ் இந்தியர் இசை மற்றும் நடன விழாவை வைஷ்ணவி அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
அங்கு உரையாற்றிய அவர், கல்விக்கும் நுண்கலைகளுக்கும் இடையே சமநிலையைப் பேண உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்திய இளையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசினார்.
இருப்பினும், கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூர்-இந்தியா இருதரப்பு உறவுகளின் 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கூட்டு நிகழ்ச்சியே அவருக்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
சென்னை கலாசேத்ரா அறக்கட்டளையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் ‘அப்சராஸ் ஆர்ட்ஸ்’ நடன நிறுவனம் வழங்கிய ‘ராமாயணா’ நடன நாடகம் அரங்கு நிறைந்த காட்சியாக அரங்கேறி, இரு நாடுகளின் கலாசாரப் பாரம்பரியத்தைப் பறைசாற்றியது.
அணுக்கமாகக் கவனித்த வரலாற்று அரசியல் திருப்பங்கள்
கலைகளுக்கு அப்பாற்பட்டு வைஷ்ணவியின் பணி, தமிழ்நாட்டின் நவீன வரலாற்றின் மிக முக்கிய அரசியல் நிகழ்வான அண்மைய சட்டமன்றத் தேர்தலை மிக அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியது. அத்தேர்தல், தமிழக அரசியல் களத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவந்தது.
“தேர்தல் நாளன்று ஒருவித பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் மக்களிடையே உணர முடிந்தது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அதிக வாக்குகள் பதிவான அத்தேர்தலைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவில், துணைத் தூதர் எட்கர் பாங்குடன் வைஷ்ணவியும் கலந்துகொண்டார்.
அதன்பின், இருநாடுகளின் பொருளியல், மக்கள் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில், தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களை நேரில் சந்தித்து, சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகக் குழுவினர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இளையர்களுக்கு அழைப்பு
ஜூலை 3ஆம் தேதியுடன் தமது வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைத் துணைத் தூதரகப் பணியை நிறைவுசெய்யும் வைஷ்ணவி, இளம் சிங்கப்பூரர்கள், குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
“உலக அரங்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க, ஒருவர் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம், கூர்மையான அறிவாற்றல், உணர்வுபூர்வமான நுண்ணறிவைக் கொண்டிருக்க வேண்டும்,” என்றார் அவர்.
உலக அரங்கில் வெற்றிபெற, நடைமுறைச் சிந்தனையும் ஆழமான கலாசார விழிப்புணர்வும் அவசியம் என்றும், நெருக்கடி நேரங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூர் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், நம்முடைய தனித்துவம் நம் எல்லைகளைத் தாண்டியது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். உலகை வலம் வருவது தனிமனிதத் திறனை வளர்க்கும். இளைய தலைமுறைக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன,” என்று வைஷ்ணவி கூறினார்.

