வயது வரம்புக்கு ஏற்ற சமூக ஊடக பயன்பாட்டை விரும்பும் இளையர், பெற்றோர்

வயது வரம்புக்கு ஏற்ற சமூக ஊடக பயன்பாட்டை விரும்பும் இளையர், பெற்றோர்

படம்: ராய்ட்டர்ஸ்

24 Oct 2026 - 3:45 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள இளையர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் சமூக ஊடக தடைக்குப் பதிலாக வயது வரம்புக்கு ஏற்றவாறு அனுமதிக்கப்படும் பயன்பாட்டை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். அதே கருத்தைக் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுப் பெற்றோரும் வரவேற்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பெற்றோர், இளையர் என 2,000க்கும் அதிகமானோரிடம் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஆய்வு நடத்தியது.

வயது வரம்புக்கு ஏற்ப சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இளையோர் அனுமதிக்கப்படவேண்டும் என்ற அரசாங்கத்தின் பரிந்துரையை ஆய்வின் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அமைச்சு தெரிவித்தது.

வலுவான பாதுகாப்புடன் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தால் இளையர்கள் பயன் பெறுவர் என்ற கருத்தும் உறுதிப்படுத்தப்பட்டது.

வயது வரம்பு, இளையருக்காகப் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட சமூக ஊடகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சட்டத்தை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய அமைச்சு உத்தேசம் கொண்டுள்ளது.

அந்த அணுகுமுறையின் அடிப்படையில், இளம் பயனீட்டாளர்களுக்கான வயது வரம்பைச் சமூக ஊடகத் தளங்கள் நடைமுறைப்படுத்தவேண்டும்.

அத்துடன், வடிவமைப்புகள் வழியாகவும் சேவைகளை அவை பாதுகாப்பானவையாக மாற்றவேண்டும் என்று தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இளம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவேண்டும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கூறினார்.

விவோசிட்டியில் நடைபெற்ற ‘டிஜிட்டல் ஃபோர் லைஃப் ஃபெஸ்டிவல்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

“ஒட்டுமொத்தமாக சமூக ஊடகத் தடையை இளையரிடம் விதிக்காமல், வயது வரம்புக்கு ஏற்ற பயன்பாட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என்று யோசிக்கிறோம்,” என்றார் ரஹாயு.

வயதுக்கு அப்பாற்பட்ட உள்ளடக்கம், தேவையில்லாத தொடர்புகள் ஆகியவற்றுடன் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது போன்றவை அவற்றுள் அடங்கும் என்று அவர் விவரித்தார்.

தென்கிழக்காசியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தடைவிதித்த முதல் நாடு இந்தோனீசியா. அதையடுத்து, மலேசியாவும் அதனைப் பின்பற்றியது.

குறிப்புச் சொற்கள்