கவிஞரும் கலை இலக்கியச் செயல்பாட்டாளரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, 56, இன்றைய முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர். தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக கட்சிக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பரபரப்பான சூழலிலும் தமிழ் முரசுடன் தனது பிணைப்பை மறவாது, தமிழ் முரசுக்கு நேர்காணல் அளித்தார். பெயருக்கேற்றால்போல் எப்போதும்போல மிகுந்த கனிவோடு மொழி, அடையாளம், பெண்கள், இளையர்கள் போன்ற பலவற்றைக் குறித்தும் தனது பார்வையை முன்வைத்தார்.
பாரம்பரியக் கலைகளைக் கொண்டாடிய ஆனந்தக் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்காக சிங்கப்பூருக்கு வருகையளித்த அவர், அடையாளம் குறித்த விழிப்புணர்வு தமிழ் இளையர்களிடம் அதிகரித்துள்ளது எனக் கூறினார். மொழி உணர்வு, அடையாளத்தை மீட்டெடுக்கும் துடிப்பும் அவர்களிடம் உள்ளதையும் அவர் சுட்டினார்.
நாட்டார் கலைகள் உள்ளிட்ட சாமானிய மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கிய, பிரதிபலிக்கும் கலை, இலக்கியப் படைப்புகளில் நாட்டம் கொள்கிறார்கள். தொடக்கத்தில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களின் பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று வந்து, அக்கலைகளை நிபுணத்துவத்தோடு முன்னெடுக்கிறார்கள். வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் அவற்றில் ஈடுபாட்டுடன் செயல்படுவதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் இதைக் காணமுடிகிறது. உதாரணமாக, மலேசியாவில் உறுமி மேளம் வாசிப்பதில் பெரிய அளவில் இளையர்கள் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ் முரசு படியுங்கள்
தமிழ் அதிகாரத்துவ மொழியாக உள்ள சிங்கப்பூருக்கு வரும்போதெல்லாம் தனி மகிழ்ச்சி ஏற்படுவதாகச் சொன்னார் அவர். தமிழ் முரசில் சில காலம் பணிபுரிந்துள்ள கனிமொழி, 90ஆம் ஆண்டை எட்டும் தமிழ் முரசின் வளர்ச்சியையும் செயலியையும் பாராட்டினார். தமிழ் மொழியையும் அடையாளத்தையும் பேணுவது தமிழர்களின் கடமை என்ற அவர், தமிழ்நாட்டு, சிங்கப்பூர்ச் செய்திகளைத் தமிழில் வாசிக்க கடல்கடந்து வாழும் தமிழர்களையும் தமிழ் முரசைப் படிக்குமாறு ஊக்குவித்தார்.
மொழி, இலக்கியம், அடையாளம்
மொழி என்பது தொடர்பாடலுக்கான ஒரு கருவி. ஒரு சமூகத்தினர் தங்கள் கருத்துகள், சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்ள மொழி உதவுகிறது. தன்னைப் புரிந்துகொள்ளவும் உலகத்தைப் புரிந்துகொள்ளவும் இலக்கியம் உதவுகிறது.
மொழி நிலப்பரப்பைச் சார்ந்த மக்களுடன் உறவைத் தக்கவைக்க உதவியாக உள்ளது. வேறு ஓர் உலகத்தில் இருந்தபடி, வேறு நிலத்து மக்களின் வாழ்க்கைமுறை, மன அழுத்தம், மனச்சிக்கல்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இலக்கியம் தருகிறது.
தொடர்புடைய செய்திகள்
மொழியும் இலக்கியமும் ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு அப்பால், சமூகத்தினர் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பைத் தருகிறது. அறிமுகமில்லாத, எல்லாருமே உணரமுடியாத பல வாழ்க்கைச் சூழல்களைக் கொண்டுவந்து சேர்ப்பது இலக்கியம். அதன்வழியாக மனித மனங்களையும் மனிதர்கள் வெவ்வேறுபட்ட வாழ்க்கைகளையும், அதிலிருக்கும் சிரமங்களையும் மகிழ்ச்சியையும் புரிந்துகொள்ள முடிகிறது. மற்றவர்களைப் புரிந்துகொள்வதற்கு, வேறு வாழ்க்கைகளை, நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருப்பதுதான் இலக்கியம்.
உலகத்தின் தெரியாத பல சமூகங்களையும் சிந்தனைகளையும் வாழ்க்கைகளையும் இலக்கியம் அறியத் தருகிறது என்ற அவர், தன்னைப் பொறுத்தவரை இலக்கியம் பல்வேறு மனிதர்களையும் வாழ்க்கைகளையும் புரிந்துகொள்ள உதவியுள்ளது என்றார் கனிமொழி.
சிறந்த வாசகருமான கனிமொழி தற்போது ஆர். கண்ணனின் ‘தி டிஎம்கே இயர்ஸ்’ என்ற நூலை வாசிப்பதாகக் கூறினார்.
பெண்கள் தொடர்பு வட்டத்தை வளர்க்க வேண்டும்
இந்த நவீன உலகத்திலும் பெண்களுக்குக் கண்தெரியாத தடை (Glass ceiling) உள்ளதா என்ற கேள்விக்கு, கான்கிரீட் தடையே உள்ளது என்று பதிலளித்தார் கனிமொழி.
ஆண் - பெண் சம உரிமையும் நிலைமையும் சில நாடுகளில் இருந்தாலும், எல்லா இடத்திலும் போராட வேண்டிய நிலைமை பெண்களுக்கு இன்னமும் உள்ளது. தன் கனவை அடைய பெண் முதலில் தன் வீட்டின் ஆதரவைப் பெற வேண்டும். தன் குடும்பம், சமூகம் என்று பல அழுத்தங்களைக் கடக்க வேண்டும். ஒரு துறையில் எல்லாத் தகுதியும் திறனும் பெற்றிருந்தாலும் ஆணுக்குச் சமமான நிலையைப் பெற பெண் 10 மடங்கு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
குழந்தை பெற்றுக்கொள்வதும் பேறுகால விடுப்பு, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு என எடுப்பதும் பெண் ஊழியரின் குறைகளாகப் பார்க்கப்படுகிறது இந்நிலை மாற சமூக மனப்போக்கும் பார்வையும் இன்னும் நிறைய மாற வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் சமூக ஊடகப் பக்கங்களில் சக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான புகைப்படங்களும் அதிகம் இருக்கும். அரசியல் மட்டுமின்றில்லை, பொதுவாக எந்தத் துறைகளிலும் ஆண்களே பெரிய அளவில் தொடர்பு வட்டத்தையும் கட்டமைப்பையும் உருவாக்கி, அதன்மூலம் பயன்பெற்று ஒருவருக்கொருவர் கைகொடுத்து உயர்த்திக்கொள்வார்கள். பெண்களும் பொதுவெளியில் அதிகம் புழங்கும் சூழலில், இது குறித்த அவரது பார்வை பற்றிக் கேட்டபோது, எந்தத் துறையிலும் தொடர்பு வட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமானது என்றார்.
பெண்களுக்கு திருமணமானதும் அல்லது ஒரு கட்டத்தில் தொடர்புகளைக் குறைத்துக் கொள்கின்றனர். நட்பு வட்டம், துறை சார்ந்த தொடர்புகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். மாறுபட்ட கருத்துகள், சிந்தனைகளை அறிந்துகொள்ள முடியும். வாய்ப்புகளைக் கண்டறிய முடியும். தங்கள் திறன்களை மேலும் பெருக்கிக்கொள்ளலாம். தொடர்பு கட்டமைப்புகளை வளர்த்துக்கொள்வதில் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்று கனிமொழி குறிப்பிட்டார்.
உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்தும் கலைஞரின் பண்பு
திரு எம்.இலியாஸ் எழுதித் தொகுத்த கருணாநிதியின் சிங்கப்பூர் பயணம் குறித்த நூலையும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) வெளியிட்டுப் பேசும் கனிமொழி, அமரர் மு.கருணாநிதியின் 1999ஆம் ஆண்டு சிங்கப்பூர் வருகை குறித்துப் பேசினார்.
“இங்குள்ள பலர் அவருக்குத் தெரிந்தவர்கள். திராவிடக் கட்சி, கொள்கை மீது பற்றுக்கொண்டவர்கள். மு.கருணாநிதியுடன் பணிபுரிந்தவரும் அவரது நண்பருமான முன்னாள் தமிழ்முரசு ஆசிரியர் வை.திருநாவுக்கரசு கலைஞரின் பொது நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றிருந்தார். இப்படி முதல் தலைமுறையில் பலரும் ஏதோ ஒருவகையில் தொடர்புகொண்டிருந்தனர். அந்த வகையில் சிங்கப்பூர் பயணம் அவருக்கு நெகிழ்ச்சியானதாக இருந்தது.
சிங்கப்பூரின் ஒழுங்கும் சுத்தமும் அவரைக் கவர்ந்தன. பல இனமக்கள் ஒன்றிணைந்து வாழும் பண்பை அவர் மெச்சினார் என்று நினைவுகூர்ந்தார் கனிமொழி.
சிங்கப்பூரில் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் பிரதிநிதிக்கும் பண்புகளுடனுமான உணர்வுபூர்வமான பிணைப்பு இன்றுவரையிலும் தொடர்வதன் தேவை, பயன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கலைஞரின் திராவிடக் கொள்கையின் அடிப்படை மனிதநேயம். மனிதநேயம் எல்லாருக்கும் எப்போதும் தேவையானது. அதுவே எல்லாரையும் பிணைக்கிறது என்றார்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவ நிலை. எந்தப் பாகுபாடுமின்றி, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் முதல் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சம உரிமையுடன் மனிதநேயத்துடன் நடத்தும் பண்பு எல்லாக் காலத்திலும் தேவையான ஒரு பண்பு. எல்லா மக்களும் கல்வியும் வாய்ப்புகளும் கருத்துரிமையும் பெற்றவர்களாக வாழ வேண்டும் என்ற திராவிடச் சிந்தனை, எந்தச் சமூகமும் எந்தக் காலத்திலும் மேன்மையடையக் கைகொடுக்கும் என்றார் அவர்.
சின்ன சின்ன விஷயங்களையும் அக்கறையுடன் கவனிக்கும் பண்பு, தந்தையுமான கலைஞரிடம் தமக்குப் பிடித்தது, தாம் கற்றுக்கொண்டது என்றார். எடுத்துக்காட்டாக, முதல்வராக, ஒரு நிகழ்ச்சியில் இருக்கை வரிசையைக் கூர்ந்து கவனிப்பார். அதனால் கூட பெரிய விளைவுகள் ஏற்படலாம் என்பதை இப்போது உணர்ந்துள்ளேன் என்றார் அவர்.
அதிர்ச்சி, ஆச்சரியம்
இளையர்களுடன் செயல்படுவது பற்றிப் பேசிய அவர், அவர்களது போக்கும் சிந்தனையும் செயலும் சில நேரங்களில் அதிர்ச்சியளிக்கும், சில நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கும். மாற்றி யோசிக்கும் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்றார்.
சில நேரங்கள் அவர்களின் வழிமுறைகள் மூத்த தலைமுறைக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து கடமைகளை முடிக்க வேண்டும் என்பது நாம் பழகியது. அதனால், இரவு நேரத்தில் வேலை செய்யும் இளையர் போக்கு புரியாததாக இருக்கும். ஆனால், அவர்கள் பொறுப்புடன் செயலாற்றுபவர்கள் என்று கூறினார்.
நாளைய உலகம் இளையர்களுடையது. அதனால் அவர்களின் போக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் கனிமொழி.

