திருமணத்தைக் காட்டிலும் தங்களது வாழ்க்கைத்தொழிலுக்கும் நிதிப் பாதுகாப்பிற்கும் இளையர்கள் முன்னுரிமை அளிப்பது புதிய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் நல்ல வேலையிலும் உடல்நலத்துடனும் இருப்பதற்கு இளையர்கள் அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். அவற்றுக்குப் பிறகே, திருமணம், சொந்த வீடு போன்றவை அவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டில் 22 முதல் 29 வயதிற்குட்பட்டிருந்த ஐந்தில் இரண்டு இளையர்களில் காதலிலோ திருமண உறவிலோ இருந்ததில்லை என்பதும் ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
இளமைப் பருவத்திலிருந்து பெரியவர்களாகும்போது இளையர்களின் விருப்பங்கள் தொடர்பில் தேசிய இளையர் மன்றம் கொள்கை ஆய்வுக் கழகத்தின் சமூக ஆய்வகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன.
‘யூத் ஸ்டெப்ஸ்’ என்றழைக்கப்படும் இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டது இதுவே முதன்முறை.
கடந்த 2017 - 2022 காலகட்டத்தில், 17 முதல் 24 வயதிற்குட்பட்ட இளையர்களிடம் நடத்தப்பட்ட மாதிரி ஆய்வைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தங்கள் இலக்குகளை நோக்கிய பயணத்தில் சிங்கப்பூர் இளையர்களுக்கு எவ்வகையில் உதவலாம் என்பதை அறிய உதவுவதற்கு, அரசாங்கத்திற்கும் இளையர் மேம்பாட்டில் ஈடுபாடு கொண்டுள்ள மற்ற அமைப்புகளுக்கும் இந்த ஆய்வு முடிவுகள் கைகொடுக்கும் என்று தேசிய இளையர் மன்றத்தின் தலைமை நிர்வாகி டேவிட் சுவா திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 5) செய்தியாளர்களிடம் சொன்னார்.
ஆய்வில் பங்கேற்ற இளையர்களில் 80 விழுக்காட்டினர், தங்கள் இலக்குகளை அடையத் திட்டமிட்டு வருவதாகக் கூறினர். அத்துடன், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் தங்களது திறன்களை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் பத்தில் ஏழு பேர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இளையர்களில் மூவரில் இருவர், வாழ்க்கை மனநிறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டனர். ஆயினும், அவ்விகிதம் ஆண்டுதோறும் சரிவுகண்டு வருகிறது. 2017ல் 74 விழுக்காடாக இருந்த அவ்விகிதம், 2020ல் 60 விழுக்காடாகக் குறைந்தது. கொவிட்-19 பரவல் குறைந்ததால் பின்னர் 2022ல் அவ்விகிதம் 64 விழுக்காடாகச் சற்று மீண்டது.

