மோசடிகளைக் கண்டுகொள்ள முடியுமென இளவயதினர் கூறினாலும், குற்றச்செயல் புள்ளிவிவரங்கள் காட்டுவதோ வேறு

மோசடிகளைக் கண்டுகொள்ள முடியுமென இளவயதினர் கூறினாலும், குற்றச்செயல் புள்ளிவிவரங்கள் காட்டுவதோ வேறு

2 mins read
1c474b04-6857-4dbe-90e9-9afaf91faf04
எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தினார் அமைச்சர் ஜோசஃபின் டியோ (இடமிருந்து இரண்டாவது) - படம்: எஸ்பிஎச் மீடியா

தொடர்பு, தகவல் அமைச்சு அண்மையில் நடத்திய ஓர் ஆய்வு, தகவல் தளங்களில் மோசடிகளைக் கண்டுகொள்ள முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறதா என 1,052 பேரிடம் கேட்டது.

அவர்களில் 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டோரில் 67 விழுக்காட்டினர் ஓரளவு அல்லது அதிக நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

ஆனால், இளவயதினருக்கு மோசடிகளைக் கண்டுகொள்ளும் திறன் அந்த அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை நிலை.

காவல்துறை கடந்த புதன்கிழமை வெளியிட்ட அரையாண்டு மோசடி புள்ளிவிவரங்களின்படி, மோசடிக்கு உள்ளானோரில் 50.8 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், மோசடிகளுக்கு உள்ளானோர் கிட்டத்தட்ட $1.9 பில்லியன் பணத்தைப் பறிகொடுத்தனர்.

பதினைந்து வயது முதலான சிங்கப்பூர்வாழ் மக்களிடையில் அமைச்சு நடத்திய ஆய்வின் முடிவுகள், வியாழக்கிழமை எஸ்பிஎச் மீடியா நியூஸ் சென்டரில் நடைபெற்ற உரையாடலில் வெளியிடப்பட்டன.

தொடர்பு, தகவல் அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இளவயதினர் நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக்கொண்டாலும் மோசடிகளுக்கு ஏன் உள்ளாகிறார்கள் என்பது பற்றி பேசிய திருவாட்டி டியோ, “இளவயதினர் மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் அதிகம் என்பது இதற்கான ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அவர்கள் இணையத்திலும் அதிகமான நேரமும் செலவிடுகின்றனர்,” என்று கூறினார்.

“இதன் விளைவாக, குறிப்பாகச் சேவைகளை விரைவில் முடிப்பதில் அவர்கள் அதிக ஆர்வமாக இருக்கும்போது, கவனம் குறையக்கூடும். எனவே, எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அமைச்சு நடத்திய ஆய்வில் பங்கெடுத்த அனைத்து வயதினரிலும் 56 விழுக்காட்டினர் மோசடி அழைப்புகளைக் கண்டுகொள்வதில் ஓரளவு அல்லது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால், ஃபேஸ்புக் விளம்பரங்கள் உள்ளிட்ட சமூக ஊடக மோசடிகளைக் கண்டுகொள்வதில் 45 விழுக்காட்டினரே நம்பிக்கை கொண்டிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்