சிங்கப்பூரின் அனைத்து எம்ஆர்டி ரயில் பாதைகளையும் ஒரே நாளில் நடந்து தமது சவாலை நிறைவுசெய்தார் 20 வயது இளையர் டிரெவர் காம்.
நண்பர்கள், பின்தொடர்வோர் என நூற்றுக்கும் மேற்பட்டோருடன் மொத்தம் 85.7 கிலோமீட்டர் தொலைவு நடந்து, நவம்பர் 14ஆம் தேதியன்று அவர் இச்சவாலை நிறைவேற்றினார்.
நவம்பர் 13ஆம் தேதியன்று இரவு 9.20 மணிக்குத் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி நள்ளிரவு சாங்கி விமான நிலைய ரயில் நிலையத்தில் பயணத்தை நிறைவுசெய்து அக்குழுவினர் புகைப்படமெடுத்துக் கொண்டனர். ‘ஸ்ட்ராவா’ எனும் உடற்பயிற்சியை அளவிடும் செயலியின் உதவியுடன் அவர்களது நடைப்பயணம் குறித்த தகவல்களைப் பதிவுசெய்தனர்.
குழுவினர் மொத்தம் 15 மணிநேரம் 22 நிமிடம் நடந்து இச்சவாலை நிறைவேற்றியுள்ளனர். இப்பயணத்தை நிறைவுசெய்ய ஓய்வு நேரம் உட்பட மொத்தமாக 27 மணிநேரம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து பல எம்ஆர்டி பாதையில் நடந்து, ‘டெலிகிராம்’ செயலியில் இளையர் டிரெவர் காம் பதிவிடும் காணொளிகளை ஏறத்தாழ 2,800 பேர் பார்வையிடுகின்றனர்.
தொடர்ந்து நடைப்பயணங்கள் மேற்கொண்ட அவர், எதிர்கால நடைப்பயணங்களில் தம்முடன் இணையுமாறு அழைப்பு விடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
அடுத்த ஆண்டில் தமது தேசிய சேவையைத் தொடங்கவுள்ள நிரந்தரவாசியான காம், “சிங்கப்பூரை மேலும் உற்சாகமானதாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன்,” என்றார்.
எஸ்எம்ஆர்டி நிறுவனம், அவரது நடைப்பயணப் பாதையைத் திட்டமிட உதவியதுடன், நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் கிழக்கு-மேற்குப் பாதையில் உள்ள 14 எம்ஆர்டி நிலையங்களில் தாகம் தீர்க்கும் இடங்களையும் அமைத்தது. இரவு நேர நடைப்பயணப் பகுதிகளுக்கு உதவும் வகையில் ஒளிரும் பாதுகாப்பு விளக்குகளையும் நிறுவனம் வழங்கியது.
எம்ஆர்டி வழித்தடங்கள் நடைப்பயணப் பாதைகளாக மாற்றப்பட்டதைப் பார்ப்பது சிறப்பாக இருந்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் லாம் ஷியாவ் காய் கூறினார்.
