சாலை விபத்தில் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரி உயிரிழந்ததற்குக் காரணமாக இருந்த குற்றத்தை, சந்தேக நபரான பதின்ம வயது மோட்டார்சைக்கிளோட்டி 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி ஒப்புக்கொள்ளவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விபத்து கடந்த ஜூன் மாதம் நான்காம் தேதியன்று நிகழ்ந்தது. அப்போதிருந்து அந்த 19 வயது மோட்டார்சைக்கிளோட்டி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 15) தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் வழக்கறிஞரான ஃபூ ஹோ சியூ வழக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. நீதிபதி அதற்கு ஒப்புதல் அளித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் 13 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அபாயகரமான முறையில் மோட்டார்சைக்கிளை ஓட்டியது, ஆயுதம் வைத்திருந்தது, போதைப்பொருள் உட்கொண்டது தொடர்பிலான குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.
அவர் வைத்திருந்ததாக நம்பப்படும் ஆயுதம் 40 சென்டிமீட்டர் நீளம் கொண்ட சமுராய் வாளாகும். அவர், 300 வெள்ளித் தொகையைப் பெற டெலிகிராம் செயலிலில் அடையாளம் தெரியாத நபரிடம் தனது சிங்பாஸ் விவரங்களை விற்றதாகவும் நம்பப்படுகிறது.
17 வயதில் அந்த ஆடவர் மெத்தம்ஃபெட்டமின் (methamphetamine) எனப்படும் போதைப்பொருளை அவர் உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர் பெயரை வெளியிட அனுமதி கிடையாது.
சிறார், இளையர் சட்டத்தின்கீழ் 18 வயதுக்குக்கீழ் உள்ள சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட முடியாது.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் மாதம் நான்காம் தேதி காலை அவர், புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிய சிலேத்தார் விரைவுச்சாலையில் தகுந்த உரிமமின்றி மோட்டார்சைக்கிளை ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரியான ஸ்டுஃபிக்கா அஹகாசா, மோட்டார்சைக்கிளை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் சந்தேக நபர் அவ்வாறு செய்ய மறுத்ததாக நம்பப்படுகிறது.
திரு ஸ்டுஃபிக்காவிடமிருந்துத் தப்பியோட அவர் அபாயகரமான முறையில் மோட்டா சைக்கிளை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
அதனையடுத்து திரு ஸ்டுஃபிக்காவின் மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளானது. அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

