தங்களின் முன்னாள் சக மாணவரை இழிவுச் செயல்களை மேற்கொள்ளச் செய்ததாக நம்பப்படும் 17 வயது ஆடவர்கள் இருவர் மீது புதன்கிழமை (ஜூன் 17) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சந்தேக நபர்கள் இருவரும், பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் முன்னாள் சக மாணவரைத் தகாத செயல்களை மேற்கொள்ள வைத்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த ஆண் மாணவரைத் தனது சிறுநீரை அருந்த வைத்தது அதுபோன்ற செயல்களில் அடங்கும்.
அந்த மாணவரைத் தகாத முறையில் காட்டும் காணொளிகளைப் பிறரிடம் தரப்போவதாக மிரட்டி சந்தேக நபர்கள் இருவரும் அவரிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவர்களின் முன்னாள் சக மாணவர் ஆகியோரின் அடையாளங்களை வெளியிட அனுமதி இல்லை. பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் ஆடவரின் வயதும் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்ட இளையர்களில் ஒருவர் மீது நான்கு குற்றச்சாட்டுகளும் இன்னொருவர் மீது இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் இளையர், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் சக மாணவரைத் தகாதச் செயல்களில் ஈடுபடச் செய்ததாகவும் நம்பப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் சிங்கப்பூரர்கள்.

