இளையர் நீதிமன்ற வழக்குகளில், அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் புதிய அணுகுமுறை

2 mins read
a10a0b0c-0112-4a53-b187-06143ea94ca4
குடும்ப நீதிமன்றங்கள் கட்டடத்தின் அதிகாரபூர்வ திறப்புவிழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் அமைச்சர்கள், சிறப்பு விருந்தினர்கள். - The Straits Times
multi-img1 of 2

இளையர் நீதிமன்றத்தில் ஒருவர் நீதிமன்றம் வருவதற்கான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் புதிய அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சிகிச்சை அடிப்படையிலான இந்த அணுகுமுறையின் கீழ், குறிப்பிட்ட வழக்குகளைத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கையாள, ஒரே நீதிபதி, ஒரே ஆலோசகர் அல்லது உளவியாலாளர் போன்றோரைக் கொண்ட தனிப்பட்ட பலதுறைக் குழுவைக் குடும்ப நீதிமன்றங்கள் (எஃப்ஜேசி) நியமிக்கும்.

இதன்மூலம், ஒவ்வொரு வழக்கையும் அது தொடர்பான பிரச்சினைகளையும் அக்குழுவினால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.

அத்துடன், நம்பிக்கையை வளர்த்து, சம்பந்தப்பட்டவர்கள் அல்லது குடும்பங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க முடியும்.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் குடும்ப நீதிமன்றங்களின் கட்டடத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் புதன்கிழமை (ஜூலை 23) இவ்விவரங்களை அறிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் குடும்பங்கள் சார்ந்த பிரிவான குடும்ப நீதிமன்றங்களையும் இளையர் நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய குடும்ப நீதிமன்றங்கள், அரசு நீதிமன்றங்கள் இருந்த ஹாவ்லக் ஸ்குவேரில் உள்ள எண்கோண கட்டடத்திற்கு மாறியுள்ளது.

இத்தகைய அணுகுமுறை விவாகரத்து வழக்குகளில் ஏற்கெனவே பயன்படுத்தப்படுகிறது. முன்னைய ஆலோசனை அடிப்படையிலான அணுகுமுறைக்குப் பதிலாக, சிக்கல்களைத் தீர்ப்பதிலும், மோதல்களை நிர்வகிக்கப் பெற்றோருக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

அதே கொள்கைகள் இளையர் நீதிமன்ற வழக்குகளை வழிநடத்தும் என்று திரு சுந்தரேஷ் மேனன் கூறினார்.

ஓர் இளைஞரின் நடத்தையையும் சூழ்நிலைகளையும் வடிவமைக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு முடிந்தவரை, அவை நீதிமன்றத்தின் சட்டப் பிரச்சினைகளுடன் சேர்த்து தீர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.

குற்றவியல் நடத்தை, குடும்பப் பிரச்சினை, பெற்றோர் புறக்கணிப்பு எனப் பிரச்சினை எதுவாக இருந்தாலும், பிள்ளைகளையும் இளையர்களையும் பாதுகாத்து, அடிப்படையில் இருக்கும் தேவைகளைக் கண்டறிந்து உதவி, அவர்களின் சிறந்த எதிர்காலத்துக்கான பாதையை அமைத்துக்கொடுக்கும் ஆதரவுக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இளம் குற்றவாளிகளுடன், பெற்றோரால் துன்புறுத்தப்படுதல் போன்ற பிள்ளைகளின் பாரமரிப்பு, பாதுகாப்பு தொடர்பான வழக்குகளையும் இளையர் நீதிமன்றம் கையாள்கிறது.

இளையர்கள் தங்கள் கடந்த காலத் தெரிவுகள் குறித்து சிந்தித்து, மாற்றம் காண ஊக்குவிக்க, இளையர் நீதிமன்றங்கள், தொலைநோக்குப் பார்வையுடனான வரைபட அணுகுமுறை கையாளப்படும்.

அத்துடன், நீதிமன்றங்கள் பெற்றோர், சமூகநலத் துறை பணியாளர்கள், கல்வியாளர்கள், சமூகப் பங்காளிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒவ்வொரு இளையருக்கும் ஆதரவளிக்கும் வகையில், ‘ஒட்டு மொத்த சமூக’ அணுகுமுறையை இளையர் நீதிமன்றங்கள் கைக்கொள்ளும் என்றார் திரு சுந்தரேஷ் மேனன்.

விவாகரத்து வழக்குகளில் பராமரிப்பு தொகையைப் பற்றிய சச்சரவுகளுக்கு இணையம் வழி தீர்வுகாணும் புதிய ஏற்பாடு குறித்தும் திரு சுந்தரேஷ் மேனன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்