காப்புறுதியும் உரிமமும் இன்றி போதையில் கார் ஓட்டிய இளையர் கைது

1 mins read
78782045-54fc-4868-80b2-d0ef4040bb40
போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டிய 17 வயது இளையரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். - படம்: எஸ்ஜிஆர்வி / ஃபேஸ்புக்

பாய லேபார் சாலையில் போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டிய 17 வயது இளையரை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) கைதுசெய்துள்ளனர்.

அப்பர் பாய லேபார் சாலையை நோக்கிச் செல்லும் பாய லேபார் சாலைக்கு அருகே ஜனவரி 16ஆம் தேதி இரவு 10.50 மணியளவில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஓட்டுநர்களிடம் வழக்கமாக நடத்தப்படும் சோதனைகளுக்காக காரை நிறுத்தும்படி அதிகாரிகள் கூறியபோது 17 வயது இளையர் அவ்வாறு செய்ய மறுத்ததுடன் சம்பவ இடத்திலிருந்து காரை வேகமாக ஓட்டிசென்றார்.

அதிகாரிகள் தொடர்ந்து சென்றபோது இளையரின் கார் நான்கு கார்கள்மீதும் ஒரு வேன்மீதும் மோதியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதையடுத்து அதிகாரிகள் பிடோக் சவுத் அவென்யூ 1ஐ நோக்கிச் செல்லும் மரின் பரேட் சாலையில் காரைக் கண்டனர். இளையரின் கார் அங்கு ஐந்தாவது கார்மீது மோதியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

காரிலிருந்து தப்பியோட முயன்ற ஓட்டுநரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

அனுமதிக்கப்பட்ட வயது வரம்புக்குக்கீழ், காப்புறுதி இல்லாமல், பதிவுசெய்யப்படாத காரை ஓட்டிய குற்றங்களுக்காக இளையர் விசாரிக்கப்படுகிறார். இளையர் ஓட்டிய காரின் சாலை வரியும் காலாவதியாகி இருந்தது என்றும் இளையர் முறைகேடான உரிமத்தை வைத்திருந்தார் என்றும் அதிகாரிகள் கூறினர்.

காரில் மின்சிகரெட் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதால் விசாரணை சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்