இளையர்கள் படைக்கும் முரசு360

இளையர்கள் படைக்கும் முரசு360

2 mins read
2379c16d-a755-46b9-bbf4-a29e2589d00f
ஞாயிற்றுக்கிழமை (26 ஏப்ரல்) மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் ‘முரசு360’ நிகழ்ச்சியைத் தமிழ் முரசு இணையத்தளத்திலும் சமூக ஊடகப் பக்கத்திலும் நேரலையில் காணலாம்.   - வரைகலை: தமிழ் முரசு
Google News Preferred Icon

தமிழ்மொழி விழா 2026ல் படைக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக, இளையர்கள் முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (26 ஏப்ரல்) மாலை நடைபெற உள்ளது. தமிழ் முரசு நாளிதழின் ஏற்பாட்டில், வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இளையர்களை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு நேரடி வருகையாளர்களாக இளையர்களும் இதர நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். சமூகத்தினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியைத் தமிழ் முரசு இணையத்தளத்திலும் சமூக ஊடகப் பக்கத்திலும் நேரலையில் காணலாம்.   ஏப்ரல் மாதம் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளில் தமிழ் முரசு செய்தியாளர்களுடன் மாணவச் செய்தியாளர்கள் ஏறத்தாழ 10 பேர் இணைந்து செய்தி திரட்டினர்.  தமிழ் முரசு செய்தித்தாளுக்காக மட்டுமல்லாமல் அதன் இணையத்தளம், சமூக ஊடகப் பதிவுகளுக்கும் மாணவச் செய்தியாளர்கள் செய்திகளைத் தனித்தனியே திரட்டினர். ‘இளைய தலைமுறை’ (IT) எனும் இளையர்க்கான தமிழ் முரசின் சிறப்புச் சமூக ஊடகத் தளத்திற்கும் வேறுபட்ட பாணியில் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திப் பதிவுகளைத் தயாரித்தனர். அத்துடன் புகைப்படம் எடுத்தலையும் காணொளித் தயாரிப்பையும் அவர்களே கையாண்டனர்.  இதன்மூலம் இளையர்களிடையே செய்தித்துறை மீதான ஆர்வத்தை வளர்ப்பதும் செய்தித்துறை ஈடுபாட்டின்மூலம் தமிழார்வத்தை மேலோங்க வைப்பதும் தமிழ் முரசின் இந்த முயற்சிக்கான நோக்கங்கள்.  இவ்வாண்டுத் தமிழ்மொழி விழாவின் கருப்பொருளான ‘ஈடுபாட்டை’ ஒட்டி, இளையர்களை மாதம் முழுவதும் தமிழ் ஊடகத்துறையில் ஈடுபடுத்தியது தமிழ் முரசு. அந்த இளையர்கள் தங்கள் வளர்ச்சியைப் பதிவுசெய்யும் களமாக விளங்கவிருக்கிறது ‘முரசு360’ நிகழ்ச்சி.  முதன்முறையாக இத்தகைய பாணியில் அரங்கேறும் இந்த நிகழ்ச்சியை https://www.youtube.com/live/uZvzlhe5d00?si=Tkojr4kOPiqcxAYV எனும் இணைப்பில் மாலை 6.45 மணி முதல் நேரலை ஒளிபரப்பாகக் காணலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்