மணிலா: ஆசியான் வட்டாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளையர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற 49வது ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி, ஆசியான் இளையர் பிரதிநிதிகளுடனான தலைவர்கள் சந்திப்பில் அவர் உரையாற்றினார்.
இளையர் தலைவர்களின் இளமைத் துடிப்பு தங்களுக்குப் புதிய உற்சாகத்தை அளித்ததாகக் கூறிய திரு வோங், கலந்துரையாடலுக்கு அவர்கள் அளித்த பங்களிப்புகளுக்கும் அறிக்கையில் இடம்பெற்ற பயனுள்ள ஆலோசனைகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
இன்றைய உடனடிப் பிரச்சினைகளை மட்டுமன்றி, இளையர்கள் வழிநடத்தப்போகும் நீண்டகால எதிர்காலம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கவலைகளையும் கேட்டறிய தலைவர்கள் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
உலகின் பல பகுதிகளில் நிகழும் பூசல்கள், உலக அரசியல் போட்டிகள், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் குறித்து இளையர்களுக்குக் கவலை எழுவது இயல்புதான் என்று அவர் கூறினார்.
ஆயினும், ஒவ்வொரு தலைமுறையும் சவால்களை எதிர்கொண்டுள்ளது என்றும் சவால்களைக் கடந்து செல்லும்போதே வலிமை பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, அவற்றைக் கண்டு மலைத்துவிடாமல் கற்றுக்கொள்ளவும் வளரவும் சிறந்த மனிதர்களாக உருவாகவும் கிடைக்கும் புதிய வாய்ப்புகளாக ஏற்றுக்கொள்ளுமாறு அவர் ஊக்குவித்தார்.
750 மில்லியன் மக்கள்தொகையும் வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கமும் கொண்ட அமைதியான, நிலைத்தன்மைமிக்க தென்கிழக்காசிய வட்டாரத்தில் இளையர்கள் வளர்வதை அவர் குறிப்பிட்டார்.
ஆசியானின் சிறந்த நாள்கள் இனிமேல்தான் வரவுள்ளன என்பதால், இளையர்கள் நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்நோக்க வேண்டும் என்றார் அவர். இளையர்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் மிகவும் மதிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள சிங்கப்பூர், சிங்கப்பூர் ஆசியான் இளையர் நிதி, ஆசியான் இளையர் நட்புறவுத் திட்டம், உறுப்பு நாடுகளுடனான இருதரப்பு இளையர் பங்காளித்துவங்கள் மூலம் இளையர் பங்கேற்பைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு வோங் தெரிவித்தார்.
இத்திட்டங்கள் வழியாக ஆசியான் இளையர்களிடையே பாலங்களை அமைத்து, தடைகளைத் தகர்த்து, நீடித்த தொடர்புகளை ஏற்படுத்த இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இளையர்கள் முன்வைத்த ஆலோசனைகள் ஆராயப்படும் என்றும் இத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி நாடு திரும்பியதும் மற்ற இளையர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறந்த ஆசியானை உருவாக்க உதவுமாறும் அவர் வலியுறுத்தினார்.
