ரயில் தண்டவாளத்தில் நடமாடிய இளையருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

1 mins read
9fefb2fe-c353-4048-a0e6-211fb633380f
தானா மேரா, சீமெய் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தில் அந்த இளையர் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: ஃபேஸ்புக் காணொளி/கம்ப்ளைண்ட் சிங்கப்பூர்

பெருவிரைவு ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நடமாடிய இளையருக்கு 18 மாதங்கள் நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு உத்தரவின் ஒரு பகுதியாக, தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை அவர் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்துடன், அந்த இளையர் 80 மணி நேரம் சமூகச் சேவை செய்ய வேண்டும்.

மேலும், அந்த 17 வயது சிங்கப்பூரரின் நன்னடத்தையை உறுதிப்படுத்த அவரது பெற்றோர் $5,000 பிணைத் தொகையைச் செலுத்த வேண்டியிருந்தது.

அவர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அந்தப் பதின்ம வயது ஆடவர் மனநல, உளவியல் சிகிச்சைக்கும் செல்ல வேண்டும்.

ரயிலில் அவ்வழியாகச் சென்றவர்களின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்த குற்றத்தையும் அனுமதிக்கப்படாத இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்தையும் அவர் முன்னதாக ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி அச்சம்பவம் நடந்தது.

தானா மேரா, சீமெய் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தில் அந்த இளையர் சுற்றித் திரிந்ததாகவும் அப்போது ரயில் கடந்து சென்றதை அவர் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜூன் 9ஆம் தேதி அதைத் தம் இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டார். மறுநாள் அதைக் கண்ட எஸ்எம்ஆர்டி ஊழியர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்