ஒழுங்கற்ற நிலையில் உள்ள வீடுகளில் வசிக்கும் மூத்தோருக்கு உதவும் வண்ணம் 300 தொண்டூழியர்கள் இணைந்து 66 வீடுகளைச் சுத்தம் செய்துள்ளனர்.
‘புளாசம் வேர்ல்ட் சொசைட்டி’ பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் ஏற்பாடு செய்த ‘புளாசம் ஹோம் ரிஃபிரெஷ்’ எனும் இத்திட்டத்தின்கீழ் மே 24ஆம் தேதி மார்சிலிங்கில் வாடகை வீடுகளில் வசிக்கும் மூத்தோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான துப்புரவுப் பணிகள் செய்து கொடுக்கப்பட்டன.
பள்ளி, பலதுறைத் தொழிற்கல்லூரி, நிறுவனங்களைச் சேர்ந்த இளையர்கள் ஒன்றிணைந்து பணியாற்றிய இத்திட்டத்தில் 35 வீடுகளைச் சுத்தம் செய்தும் 31 வீடுகளுக்கு வண்ணம் தீட்டியும் உதவினர்.
இளையர்களைத் தொண்டூழியம் தாண்டி சிந்தனையாளர்களாகவும் சமூக ஈடுபாடு, பிரதிபலிப்பு கொண்டோராகவும் உருவாக்கும் நோக்கில் செயல்படும் ‘புளாசம் வேர்ல்ட் சொசைட்டி’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன் முதன்மைத் திட்டமான ‘புளாசம் ஹோம் ரிஃபிரஷ்’ திட்டத்தை அவ்வமைப்பு 2018லிருந்து முன்னெடுத்து வருகிறது.
திட்டத்தின் எட்டாவது ஆண்டில், சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆண்டு முழுவதும் 600 வீடுகளைச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற மார்சிலிங் திட்டத்தில் கூடுதல் தொண்டூழியர்கள் இணைந்து பல வீடுகளைச் சுத்தம் செய்தனர்.
பணிகளைத் தொடங்கும் முன் தொண்டூழியர்களிடம் பேசிய அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி யென் ஷெங் சியாங், “மூத்தோர் வாழும் நிலையில் வேறுபாடு இருக்கலாம். அவர்களது பழக்கங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவர்களுடன் பழகுவது சிறந்த அனுபவத்தைத் தரும்,” என்றார்.
மேலும், சில மணி நேரம் செலவிட்டு தொண்டூழியர்கள் மேற்கொள்ளும் பணி அவர்களிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் சொன்னார்.
தாமாக முன்வந்து முதன்முறையாக தொண்டூழியம் செய்த மாணவி மித்ரா மகேந்திரா,18, “இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். என்னால் ஒருவரது நாளைச் சிறந்ததாக்க முடிகிறது எனும் எண்ணம் மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
“பொதுவாக என்னை ஒத்த வயதுடையோரிடம் பேசிப் பழகும் எனக்கு இளையர்களின் வருகை மனமகிழ்வைத் தருகிறது. அவர்களால் இயன்றவற்றை அனைவருக்கும் செய்ய முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது,” என்றார் இத்திட்டத்தின் பயனாளியான மார்சிலிங் குடியிறுப்பாளர் லட்சுமி நாயர், 76.

