சிறப்புத் தேவையுடையோரைக் கைபிடித்து முன்னேற்றும் இளையர்

சிறப்புத் தேவையுடையோரைக் கைபிடித்து முன்னேற்றும் இளையர்

படம்: செல்வ ராஜு ஆறுமுகம்

16 Nov 2026 - 6:10 am

2 mins read

சிறப்புத் தேவை உடையவர்கள் எதிர்நோக்கும் சவால்களை உலகிற்கு எடுத்துரைக்கும் செல்வ ராஜு ஆறுமுகம், சிறார் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். 

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறப்புத் தேவையுடையோரின் நலனுக்காக 34 வயது செல்வ ராஜு மும்முரமாக உழைத்து வருகிறார். 

சேவையாற்றும் இந்த இளையரின் வேட்கைக்கு வித்திட்டது இளம் வயதில் தாயாரின் மறைவு. மாரடைப்பால் தாயார் இறந்தபோது செல்வ ராஜுவுக்கு 15 வயதுதான். 

கடுந்துயரத்தில் வாடிய காலகட்டத்தில் அந்தச் சம்பவம் அவரைச் சமூகத்தின் பக்கம் திருப்பியது. பள்ளிப் பருவத்தில் கிடைத்த கல்வி உதவித்தொகைகளும் சமூக அமைப்புகளின் ஆதரவும் அவருக்குள் நன்றியுணர்வை விதைத்திருந்தன.

“கல்வி உபகாரச் சம்பளங்கள், உதவித்தொகைகள் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறேன். அதனால் எனக்குக் கிடைத்ததை இந்தச் சமூகத்திற்குத் திருப்பித்தர வேண்டும் என்ற நோக்கில் சமூகச் சேவை மன்றத்தில் இணைந்து முதியோருக்கான திட்டங்களைத் தொடங்கினேன்,” என்று அவர் கூறினார்.

பின்னர் தேசியச் சேவையை முடித்தவுடன் அவர், ‘யூத் கார்ப்ஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் தலைமைத்துவத் திட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.

அந்த அமைப்பின் மூலம் ‘மைண்ட்ஸ்’ அமைப்பிலுள்ள சிறப்புத் தேவையுடைய சிறாருடன் இணைந்து பணியாற்றியது திரு செல்வ ராஜுவின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. 

நாணயங்களை அடையாளம் காண்பது, எண்களைக் கூட்டுவது போன்ற அன்றாடக் கணிதத் திறன்களை அவர்களுக்கு ஓராண்டு காலம் கற்பித்த திரு செல்வ ராஜு, பின்னர் அவர்களைச் சந்தைக்கு அழைத்துச் சென்று  பொருள்களைச் சொந்தமாக வாங்கப் பயிற்சியளித்தார்.

அத்துடன், சிறப்புத் தேவையுடையோரை விளையாட்டிலும் ஈடுபட அவர் கைகொடுத்து வருகிறார். ‘சிறப்பு ஒலிம்பிக்ஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் மூலம் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்குத் தற்போது அவர் நெட்டோட்டப் பயிற்சியாளராக இயங்கி வருகிறார். 

சவால்களும் மனமாற்றமும்

தொடக்கத்தில் சிறப்புத் தேவையுடையோரை அணுகுவதில் தமக்குத் தயக்கம் இருந்ததாகத் திரு செல்வ ராஜா கூறினார். 

“அவர்களைப் பார்த்தால் ஒதுங்கிப் போக வேண்டும் என அப்போது தோன்றியது. அவர்களால் சுயமாக வாழ முடியாது என்ற தவறான எண்ணமும் இருந்தது,” என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அவர், காலப்போக்கில் அந்த எண்ணங்கள் மாறியதாகக் கூறுகிறார்.

ஒருமுறை வண்ணந்தீட்டும் புத்தகத்தில் கோடுகளுக்குள் வண்ணம் தீட்ட முடியாமல் விரக்தியடைந்த சிறுவன், பென்சில்களை உடைத்தெறிந்து கத்திக்கொண்டே ஓடிய அனுபவத்தை அவர் நினைவுகூர்கிறார். 

“பதற்றமடையாமல் சொந்த நிதானத்தைக் காத்துக்கொண்டு, அவனை ஓர் அறைக்கு அழைத்துச்சென்று அமைதிப்படுத்த வேண்டும் என்பதை அங்கிருந்த பணியாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

இத்தகைய அனுபவங்களும் ‘ரெயின்போ சென்டர்’ (Rainbow Centre) போன்ற அமைப்புகள் வழங்கிய தொடர் பயிற்சிகள் வழியாக அவர் சிறப்புத் தேவை உடையோரை உற்று நோக்கி அவர்களைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தைப் பெற்றார்.

குறிப்புச் சொற்கள்