தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைத் திருட்டு, ஏமாற்று, பாலியல் குற்றங்களில் அதிகம் ஈடுபடும் இளையர்கள்

3 mins read
aaf4fb3b-1fff-482e-8dda-edcf40c3551b
கடந்த 2023ஆம் ஆண்டில், பத்து முதல் 16 வயதிற்குட்பட்டோர் ஈடுபட்ட குற்றச்செயல்களில் அதிகமானவை கடைத் திருட்டு தொடர்பானவை. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடைகளில் திருடுதல், ஏமாற்றுதல், பாலியல் குற்றங்கள் - இவையே 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இளையர்கள் அதிகம் ஈடுபட்ட குற்றச் செயல்கள்.

பத்து முதல் 21 வயதிற்குட்பட்ட இளையர்களில் 509 பேர் கடைத் திருட்டிலும், 422 பேர் ஏமாற்று நடவடிக்கைகளிலும், 250 பேர் பாலியல் குற்றங்களிலும் ஈடுபட்டனர்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட இளையர் மறுவாழ்வு ஆதரவுப் போக்கு அறிக்கையில் இத்தரவுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2019 முதல் 2023 வரை, இளையர் மறுவாழ்வு, குற்றவியல் போக்கு குறித்த முக்கிய விவரங்களை அவ்வறிக்கை வழங்குகிறது.

இளையர்களில் 16-18 வயதிற்குட்பட்டோரே குற்றச் செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்பிருந்ததாக அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஆகையால், 16-18 வயதுப் பிரிவு இளையர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், அவர்கள் மீதான வழக்குகளை இளையர் நீதிமன்றம் கையாளும் வகையில் சிறுவர் மற்றும் இளையர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இம்மாற்றம் 2025 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இப்போதைக்கு, 16 வயதிற்குட்பட்ட இளையர்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே இளையர் நீதிமன்றம் கையாண்டு வருகிறது. அவ்வயதிற்கு மேற்பட்ட இளையர்கள் மீதான வழக்குகள் அரசாங்க நீதிமன்றம் அல்லது சமூக நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன.

“மூத்த இளையர்கள் தங்கள் வயதிற்குப் பொருத்தமான மறுவாழ்வு ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்வதே இந்தச் சட்டத்திருத்தத்தின் நோக்கம். தாங்கள் இழைக்கும் குற்றங்களின் தீவிரத்தை அறியும் அளவிற்கு அவர்களுக்கு அறிவு முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம்,” என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அதே நேரத்தில், பொதுப் பாதுகாப்பு, குற்றத் தடுப்பைப் பேணும் நோக்கில், பாலியல் குற்றங்கள், உரிமமின்றி கடன் வழங்குதல், போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடும் மூத்த இளையர்கள் மீதான வழக்கு விசாரணைகள் அரசு நீதிமன்றங்களில் இடம்பெறும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த 2019 முதல் 2023 வரை, சிங்கப்பூரில் 1,000 இளையர்களில் 5.2 பேர் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். இதே காலகட்டத்தில் இவ்விகிதமானது நியூசிலாந்தில் 1,000 பேருக்கு 7.6 பேராகவும், ஜப்பானில் 1,000 பேருக்கு 2.8 பேராகவும் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் ஏமாற்றுதல் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்ட இளையர்களின் எண்ணிக்கை கூடியது. அதாவது, அந்த எண்ணிக்கை 260 பேரிலிருந்து 422 பேராக அதிகரித்தது.

அதுபோல, முறைகேடான கணினிப் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் கையாளப்பட்ட இளையர்களின் எண்ணிக்கை 53லிருந்து 195 ஆகவும், அரித்தழிக்கும், வெடிபொருள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் கையாளப்பட்ட இளையர்களின் எண்ணிக்கை 92லிருந்து 133 ஆகவும் அதிகரித்தது.

கடந்த 2023ஆம் ஆண்டில், பத்து முதல் 16 வயதிற்குட்பட்டோர் ஈடுபட்ட குற்றச்செயல்களில் அதிகமானவை கடைத் திருட்டு தொடர்புடையதுதான். 16 முதல் 18 வயதிற்குட்பட்டோரைப் பொறுத்தமட்டில், ஏமாற்றுவது தொடர்பான குற்றங்களே அதிகம்.

இந்நிலையில், 21 வயதிற்குட்பட்ட இளம் குற்றவாளிகளைச் சீர்திருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது முக்கியம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தகைய இளையர்களுக்கு ஆதரவளித்து, அவர்களை மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்