பாடல், ஆடல், குறும்படத் தயாரிப்பு என உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி கோலாகலமாக அரங்கேறியது ‘உச்சம் 2025’ போட்டிகளின் இறுதிச் சுற்று.
சிங்கப்பூர்த் தமிழ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக நடைபெறும் போட்டிகள் இவ்வாண்டின் இளையர் விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதி.
மூன்று அங்கங்களில் கிட்டத்தட்ட 100 இளையர்கள் பங்கேற்றனர். அதிலிருந்து 47 இளையர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
இறுதிச் சுற்றில் ஆறு பாடல்கள், ஐந்து நடனங்கள் மற்றும் மூன்று குறும்படங்கள் மக்கள் பார்வைக்குப் படைக்கப்பட்டன.
புகழ்பெற்ற உள்ளூர்த் தொலைக்காட்சி கலைஞர்கள் பாரதி ராணி அருணாசலம், எபி ஷங்கரா, சரவணன் அய்யாவு மற்றும் வின்சேனிட்டி (Vindsanity) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த்குமார் ஆகியோர் போட்டிகளின் நடுவர்களாகச் செயல்பட்டனர்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற போட்டிகள் பிரபலமாக இருந்ததையும், அதன் பிறகு சற்று குறைந்ததையும் சுட்டிக்காட்டினார் குமாரி பாரதி.
“இது போன்ற தளங்கள் மீண்டும் இளையர்கள், அவர்களுடைய திறன்களை வெளிப்படுத்துவதற்காக அமைவது சிறப்பான ஒன்று,” என்று அவர் பாராட்டினார்.
திறன்களை வெளிக்காட்டியதோடு நின்றுவிடாது, தொடர்ந்து மேடையைத் தாண்டி தொலைக்காட்சியிலும் மிளிர வேண்டும் என்றும் இளையர்களைக் கேட்டுக்கொண்டார் திரு எபி.
தொடர்புடைய செய்திகள்
‘சிங்கப்பூர்க் கலைத்துறையில் எல்லாருக்கும் கண்டிப்பாக ஓர் இடமுண்டு,” என்று ஊக்கமளித்தார் திரு அரவிந்த்.
குறும்படங்கள், அவற்றின் பின்னால் உள்ள சவால்களை எடுத்துக் கூறிய திரு சரவணன், “நாளடைவில் உள்ளூர்த் தொலைக்காட்சி மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் முத்திரை பதிக்கும் திறன் இன்று பங்கெடுத்த எல்லாப் போட்டியாளர்களிடமும் தெரிந்தது,” என்றார்.
இறுதிப் போட்டிகளுக்கான முதற்கட்ட தேர்வுச்சுற்றுகளில் உள்ளூர்க் கலைஞர் விக்னேஸ்வரி வடிவழகனும் அவாண்ட் நாடகக் குழுவின் நிர்வாகி செல்வாநந்தனும் நடுவர்களாக இருந்தனர்.
இதுபோன்ற போட்டிகள் இளையர்களிடைய தமிழார்வத்தையும் பண்பாடு குறித்துப் பெருமைகொள்ளவும் ஊக்குவிப்பதோடு அவர்களின் தன்னம்பிக்கை, ஆற்றல், திறன்களையும் வளர்க்க வழிவகுக்கிறது என்று சிங்கப்பூர்த் தமிழ் இளைஞர் கழகம் குறிப்பிட்டது.
மௌக்திகா, 21, கனகாம்பாள், 19, இருவரும் பாடல் அங்கத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
சிங்கப்பூர் இந்திய இசைக்குழுப் பாடகர்களான தங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்று தமிழ் முரசிடம் அவர்கள் தெரிவித்தனர்.
“போட்டியில் பங்கேற்றது எங்களது திறன்களை விரிவடையச் செய்தது. அதுமட்டுமின்றி, பள்ளிப் பாடங்களுக்கு இடையே ஓய்வெடுக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது,” என்றும் அவர்கள் கூறினர்.

