மாணவர்களைக் கவர்ந்த தோல்பாவைக் கூத்து

மாணவர்களைக் கவர்ந்த தோல்பாவைக் கூத்து

2 mins read
67a0d589-2604-4cd1-846d-aeb5b01f60b5
தோல்பாவைக் கூத்து. - படம்: ஆயிஷா ரோஸ்

‘தத்வா’ கலை அமைப்பு, ‘யுக்தி’ எனும் தோல் பாவைக் கூத்து நிகழ்ச்சியை ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் படைத்தது. பாரம்பரியக் கலைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் நோக்குடன் அந்த அமைப்பு இயங்கி வருகிறது.

நிகழ்ச்சியில் சி லிங், ஃபிரான்ட்டியர் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இக்காலத்திற்கு ஏற்ற கதைகளுடன் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை உள்ளடக்கி இக்கலை வடிவம் மாணவர்களுக்குப் புதுமையாகப் படைக்கப்பட்டது.

“இலக்கியக் கதாபாத்திரங்களைக் கொண்ட நான்கு கதைகளை நிகழ்ச்சியில் படைத்தோம்,” என்றார் தத்வா அமைப்பின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் சுரேந்திரன், 50.

“கதைகளை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் மாறுபட்டதாகவும் சுவையாகவும் மாற்ற, இன்றைய மாணவர்கள் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ‘டிக்டாக்’ போன்ற சமூக ஊடகக் கருத்துகளைச் சேர்த்தோம்,” என்றார் அவர்.

“இந்தப் படைப்பை உருவாக்கக் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஆனது. திட்ட யோசனையில் தொடங்கி, பாவைகளை வடிவமைத்து, உருவாக்குவதுவரை அனைத்தையும் நாங்கள் செய்தோம். அவை யாவும் எங்களது நிறுவனத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டன.” என்று சுரேந்திரன் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கக் கற்றுக்கொடுத்தார் ஈஸ்வரி.
மாணவர்களுக்கு சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கக் கற்றுக்கொடுத்தார் ஈஸ்வரி. - படம்: ஆயிஷா ரோஸ்

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, மாணவர்கள் திரைக்குப் பின்னால் சென்று பாவைகளை இயக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.

“மாணவர்கள் தோல்பாவைக் கூத்தில் பொம்மைகளை இயக்கக் கற்றுக்கொள்வதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்,” என்று கூறினார் நிகழ்ச்சிப் படைப்பாளர் ஈஸ்வரி, 37.

“தொடக்கத்தில் நான் குரல் கொடுத்தாலும், பின்னர் மாணவர்கள் சிலர் சொந்தக் குரலில் கதை சொல்லத் தொடங்கியது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தியது,” என்றார் அவர்.

பாரம்பரியக் கலையை நவீன உத்திகளுடன் மாணவர்களிடம் கொண்டுசேர்த்த முயற்சி, பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

குறிப்புச் சொற்கள்