யூனோஸ் முதியவர்களின் நலன் காக்க ‘நாற்காலி ஸும்பா’

நடனம் முதல் நடைப்பயிற்சி வரை: நலத்துடன் மூப்படைய புதிய செயல்திட்டங்கள்

யூனோஸ் முதியவர்களின் நலன் காக்க ‘நாற்காலி ஸும்பா’

2 mins read
e6440bb7-7c99-4e54-9a02-3376eeb062cc
யூனோஸ் வட்டார மூத்த குடியிருப்பாளர்களுடன் ‘நாற்காலி ஸும்பா’ நடனப் பயிற்சியில் ஈடுபட்ட மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (முன்வரிசையில் வலமிருந்து இரண்டாமவர்), அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு (முன்வரிசையில் வலமிருந்து மூன்றாமவர்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிடோக் ரெசவோர் ரோட்டின் அருகில் உள்ள சமூக நிலையக் கூடத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் ஏறக்குறைய 100 முதியவர்கள் முழு உடற்பயிற்சி உடைகளுடன் உற்சாகமாகக் கூடுகின்றனர்.

அவர்கள் ‘ஜெய் ஹோ’ ‘மாம்போ 5’ போன்ற துள்ளலான பாடல்களுக்குத் தாளமிடுகின்றனர்.

ஆனால், இது ஒரு சாதாரண நடன வகுப்பு அன்று; இது ஒரு ‘நாற்காலி ஸும்பா’ பயிற்சி வகுப்பு. நடப்பதற்கோ நீண்ட நேரம் நிற்பதற்கோ சிரமப்படும் முதியவர்கள், நாற்காலிகளில் அமர்ந்துகொண்டே கைகளையும் உடலின் மேல் உறுப்புகளையும் துடிப்புடன் அசைத்து, இசையின் தாளத்திற்கு ஏற்பக் கால்களைத் தட்டி இப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

தனிமையைத் தவிர்க்கும் முயற்சி

யூனோஸ் பகுதியில் வசிக்கும் முதியவர்களின் உடல்நலத்தையும் சமூக ஈடுபாட்டையும் மேம்படுத்துவதற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடங்கப்பட்ட ஏழு புதிய திட்டங்களில் இந்த ‘நாற்காலி ஸும்பா’வும் ஒன்றாகும். இவற்றுடன் உடற்பயிற்சி வகுப்புகள், விறுவிறுப்பான காலை நேர நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முதியவர்களுக்காகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

யூனோஸ் வட்டாரத்தில் நடத்தப்படும் அத்தகைய திட்டங்களில் மாதந்தோறும் சராசரியாக 1,200 முதியவர்கள் பங்கேற்பதாக மக்கள் கழகம் தெரிவித்தது.

இதற்கிடையே மனிதவள அமைச்சரும் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் டான் சீ லெங் சனிக்கிழமை (மே 30) காலையில் நடைபெற்ற நாற்காலி ஸும்பா பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டார். 

யூனோஸ் பகுதி, அல்ஜுனிட் குழுத்தொகுதியின்கீழ் வருகிறது. இத்தொகுதி, 2011 பொதுத்தேர்தலிலிருந்து எதிர்த்தரப்பான பாட்டாளிக் கட்சியின் வசம் உள்ளது. 

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு பிரித்தம் சிங், சனிக்கிழமை தொகுதி உலா சென்றிருந்தபோது, டாக்டர் டானையும் அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜுவையும் சந்தித்தார்.

திரு. சிங் குடியிருப்பாளர்களுடன் மாதாந்தரத் தொகுதி உலாவை முடித்துவிட்டு, அவர்களுடன் காலை உணவு அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தார்.

இந்த வருகையின்போது ஊடகங்களிடம் பேசிய திரு ஜெகா, “எங்கள் யூனோஸ் சமூகத்தில், ‘ஒரே யூனோஸ், ஒரே இதயம்’ என்ற எண்ணத்தை மையமாகக் கொண்டு சமூக ஒற்றுமையை வளர்த்துவருகிறோம். இன்றைய நிகழ்வில் இரண்டு முக்கிய நோக்கங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. ஒன்று, சமூகத்தில் ‘செயல்மிகு முதியோர் வாழ்வு’ குறித்து ஊக்குவிப்பதும், மற்றொன்று, நிலைத்த வாழ்வியல் முறைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமாகும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்