ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸாக் சலாம் இந்தியா’ விற்பனைத் திருவிழா சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் மார்ச் 5ஆம் தேதி தொடங்குகிறது.
சிங்கப்பூரில் 41வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், கண்கவரும் விற்பனைக் கண்காட்சி சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கு 5A-ல் மார்ச் 8 வரை நான்கு நாள்கள் நடைபெற இருக்கிறது.
மார்ச் மாதம் நோன்புப் பெருநாளும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டும் கொண்டாடப்பட உள்ள வேளையில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நவீன ஆடை அணிகலன்களை வாங்க நல்லதொரு வாய்ப்பாக ஸாக் சலாம் விற்பனைக் கண்காட்சி அமையும்.
கலாசாரம், வர்த்தகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் அதேநேரம் விழாக்காலச் சிறப்புகளையும் தாங்கி சீருடன் நடைபெற உள்ளது அந்த நான்கு நாள் விற்பனைத் திருவிழா.
மணப்பெண் அலங்காரம், விழாக்கால நவீன ஆடை அணிகலன்கள், கைவினை நகை வேலைப்பாடுகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், அன்றாட வாழ்க்கைபாணிக்கு அழகூட்டும் அம்சங்கள் ஆகியவற்றோடு சுவைமிகு உணவு வகைகளும் ஸாக் சலாம் அரங்கில் கிடைக்கும்.
அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வண்ணம் கண்காட்சி கலந்த விற்பனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்திய துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும் நேரடிச் சந்தை அனுபவத்தை இந்தக் கண்காட்சி வழங்கும்.
உள்ளூர் மக்களுக்கு ஏற்ற இந்தியத் தயாரிப்புகளை இங்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்ய கடந்த 2007ஆம் ஆண்டு ஸாக் சலாம் இந்தியா கண்காட்சி முதன்முதலாக நடைபெற்றது. சிங்கப்பூர் பயணக் கழகத்தின் ஆதரவோடு தொடங்கப்பட்ட அந்தக் கண்காட்சி, உள்ளூர் மக்களுடன் தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அப்போது தொடங்கிய விற்பனைக் கண்காட்சி, இருபதாண்டுகளுக்கு மேலாக 40 முறை அரங்கேறிய பின்னரும் இடைவிடாது தொடர்கிறது.
சமூக ஈடுபாட்டுடன் பன்முகக் கலாசாரத்தை ஈர்க்கக்கூடிய நம்பகமான விற்பனைத்தளமாக ஸாக் சலாம் விளங்குகிறது.
விற்பனை மட்டுமல்லாது மக்களுடன் இருதரப்பு தொடர்புகொள்ளக்கூடிய நேரடி நிகழ்ச்சிகளும் கண்காட்சியை நிறைக்கும்.
பணம் திரும்பப்பெறும் சலுகைகள், விலைத் தள்ளுபடிகள், அன்றாடப் பரிசுகள் ஆகியனவும் விற்பனைத் திருவிழாவுக்கு வருவோரை மகிழ்விக்கும்.
அவற்றுடன், முதல்முறையாக ஒவ்வொரு நாளும் இரண்டு விமானப் பயணச்சீட்டுகளை வெல்லக்கூடிய வாய்ப்பும் அவ்விழாவுக்கு வருகை தருவோருக்குக் கிடைக்கும்.
தோக்கியோ, பாலி, புக்கெட், இந்தியா போன்ற இடங்களுக்குச் சென்று திரும்புவதற்கான இருவழி விமானப் பயணச்சீட்டுகளை, பங்கேற்போர் வெல்லலாம்.
பரோட்டா சாப்பிடுவதற்கான போட்டியுடன் கேரம் மற்றும் சதுரங்க விளையாட்டுப் போட்டிகளும் ஸாக் சலாம் விற்பனைத் திருவிழாவில் இடம்பெறும். அம்மா, பிள்ளைகளுக்கான ‘ஃபேஷன் ஷோ’ மற்றொரு சிறப்பம்சம்.
குடும்பங்களோடு சென்று வேடிக்கைகளைக் காண்பதோடு விற்பனையிலும் பங்கேற்கலாம்.
ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, ‘ஹார் யாசின் திருமண பிரியாணி’ ஏற்பாடு செய்யும் இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி, விற்பனைத் திருவிழாவின் முதல்நாளான மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து சிறந்த சமூகப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஸாக் சமூக விருது நிகழ்ச்சி அரங்கேறும்.
இந்த நிகழ்வுக்கு இந்திய முஸ்லிம்கள் கூட்டமைப்பின் (FIM) ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.
அனைத்துத் தரப்பு மக்களும் ஸாக் சலாம் விற்பனைத் திருவிழாவுக்கு வருகை தரலாம். அனுமதி இலவசம்.
உலக நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி இருக்கும் ‘ஸாக்’ அமைப்பு, சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரச் சூழலில் பாரம்பரியம், தொழில்முனைவு மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தைக் கொண்டாடும் ஒரு துடிப்பான தளமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

