சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் விமானச் சேவைகளை அதிகரிக்க இருதரப்பும் ஆர்வமாக உள்ளன என்றும் அடுத்த பத்தாண்டு வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு விமானச் சேவை உடன்பாடுகளை விரிவாக்க வேண்டும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் விமானங்கள் முழுக் கொள்ளளவுடன் இயங்கி வருகின்றன. இரு நாடுகளின் பொருளியல்களுக்கும் பலனளிக்கும் வகையில் விமானச் சேவை உடன்பாடுகளை விரிவாக்க வேண்டும் என்று கூறினார்.
கடைசியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த உடன்பாடு மறுஆய்வு செய்யப்பட்டது.
இந்தியாவுக்கு தாம் மேற்கொண்டிருந்த அரசுமுறைப் பயணத்தின் இறுதியில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சனிக்கிழமையன்று (ஜனவரி 18) சிங்கப்பூர் - இந்தியா செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமது பயணத்தில் கலந்தாலோசித்த அம்சங்கள் பற்றிப் பேசினார். புதுடெல்லியில் இந்தியாவின் தலைவர்களுடனான தமது சந்திப்புகளின்போது இதுகுறித்த உரையாடல் நடந்ததாக அதிபர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் அரசதந்திர உறவுகளின் 60ஆம் ஆண்டைக் கொண்டாடுகின்றன. அதனைக் குறிக்கும் வகையில் அமைந்த அதிபரின் பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் இணைந்தனர்.
தமது இந்தியப் பயணத்தின் நோக்கங்கள், ஒடிசாவைப் பயணத்தின் அங்கமாக இணைத்ததற்கான காரணம், இருநாட்டுக்கும் இடையிலான எதிர்காலத் திட்டங்கள், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளின் தாக்கம், சிங்கப்பூரிலுள்ள இந்திய வம்சாவளியினரின் பங்களிப்புகள் குறித்து அதிபரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
“பலவாறாகப் பிரிந்துகிடக்கும் உலகில் இந்தியா தனக்கே உரிய வகையில் அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் ஆற்றால்மிக்க நாடாக உருவெடுக்க முனைகிறது. இந்தியாவின் மக்கள்தொகை, அதன் மேம்பாடுகளில் தற்போதைய நிலை, திறன்கள் அடிப்படையிலும் மதிப்புகளின் அடிப்படையிலும் தரத்தை உயர்த்திக்கொள்ளும் திட்டம், ஏற்றுமதியில் அதற்குள்ள குறிப்பிடத்தக்க ஆற்றல் வளம் போன்றவற்றால் அடுத்த 10, 20 ஆண்டுகளில் மாபெரும் பொருளியல் சக்தி கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்,” என்றார் அதிபர்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் உள்ள முன்னுரிமைகள் ஒருமித்துள்ள நிலையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் விரும்புகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பிட்ட தொழில்துறைகளில் மட்டும் இணைந்து பணியாற்றுவது நோக்கமன்று என்றும் வெவ்வேறு திட்டங்களில் கூட்டாக ஈடுபடும்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பகத்தன்மை மேம்படுகிறது என்றும் திரு தர்மன் சொன்னார்.
உலகளவில் நம்பகத்தன்மை குறைந்துவரும் நிலையில் நம்பிக்கையைக் கட்டிக்காப்பதன் எடுத்துக்காட்டாக சிங்கப்பூர் - இந்தியா உறவு விளங்கமுடியும் என்றார் அவர்
இந்தியர் அல்லாத சிங்கப்பூரர்கள் இந்தியாவில் நாட்டம் கொள்ளவேண்டும் என்று அதிபர் அறைகூவல் விடுத்தார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையும் சிதறிக்கிடக்கும் வாய்ப்புகளும் பல பரிமாணங்களும் பொருளியல் வாய்ப்புகளைத் தாண்டி ஒருவரின் உலகக் கண்ணோட்டத்தையும் விரிவுபடுத்தும் என்று அவர் சொன்னார்.
ஆசியான் நாடுகளிலும் இந்தியாவிலும் சீனாவிலும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என்று கூறிய திரு தர்மன், அந்நாடுகளை அணுக்கமாக அரவணைக்காமல் சிங்கப்பூர் எதிர்காலத்தில் சிறந்தோங்க முடியாது என்றார்.
அப்படிச் செய்வதால் ஆசியாவின் வளர்ச்சிக்கும் நீடித்த நிலைத்தன்மைக்கும் பங்களிக்கும் உணர்வை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும அவர் கூறினார்.
அண்மையில் சிங்கப்பூருக்கு வந்த குடியேறிகள், இருநாட்டு உறவுகளுக்கு தனித்துவமான வழிகளில் பங்களிக்கின்றனர் என்று கூறிய அதிபர், இந்தியாவிலுள்ள அவர்களது நட்புறவுகளும் தொடர்புகளும் அறிவாற்றல்களும் சிங்கப்பூரர்களுக்குத் தேவையான ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் வந்தவர்கள் மற்ற சிங்கப்பூரர்களைவிடவும் இந்திய சிங்கப்பூரர்களைவிடவும் மாறுபட்டவர்களாக இருப்பார்கள் என்பதால் அவர்கள் சிங்கப்பூரர்களுடன் ஒன்றிணைய காலம் எடுக்கும் என்றார் திரு தர்மன்.
சிங்கப்பூருடன் அவர்களை ஒன்றிணைக்க கூடுதல் முயற்சியையும் நாம் எடுக்கவேண்டும் என்றும் அதிபர் அறிவுறுத்தினார்.
இதுவரை விரிவான வகையில் ஒடிசா மாநிலத்துடன் தொடர்பு இருந்ததில்லை என்றாலும் அதைத் தமது பயணத்தின் அங்கமாகத் தெரிவுசெய்ததற்குக் காரணம் ஒடிசாவின் முன்னுரிமைகள் சிங்கப்பூரின் பலத்துடன் ஒத்துப்போனதே காரணம் என்று அவர் சொன்னார்.
தன்னடக்கமான மாநிலம் என்று ஒடிசாவை வருணித்த அதிபர், இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானத்திற்குக் கீழ் ஒடிசா இருந்தாலும் கல்வி நிலைகள் சராசரியிலும், கணிதம், உயிரியல் போன்ற துறைகளில் சராசரியைத் தாண்டி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். வளர்ச்சி குன்றியிருந்தாலும் கல்வியிலும் திறன் வளர்ச்சியிலும் மேம்படவேண்டும் என்ற கவனம் அவர்களுக்கு உள்ளதாகக் கூறினார். சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்ற அவர்கள் விரும்புவதாகவும் சுட்டினார்.
தொழில்பூங்காக்கள், நீடித்த நிலைத்தன்மை, பசுமை எரிசக்தி, காப்புறுதிக்கான நிதித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், பகுதி மின்கடத்தி, செயற்கை நுண்ணறிவு, விமானத்துறையைச் சார்ந்த தொழில்நுட்பச் செயல்பாடுகள் போன்றவற்றில் அந்த மாநிலம் முனைப்புடன் செயல்பட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
சுற்றுப்பயணத் துறையில் ஏராள வாய்ப்புகளுள்ள மாநிலமாக ஒடிசா விளங்குவதாகக் கூறிய அதிபர், “தனித்துவமிக்க வகையில் இந்து, புத்த சமய பாரம்பரியங்கள் சங்கமிக்கும் தலமாக ஒடிசா உள்ளது,” என்றார்.
சம்பல்பூர் பட்டுச் சேலைகள், நுணுக்கமான பனையோலை ஓவியங்கள் உட்பட கைவினைகளுக்கும் கலைகளுக்கும் மையமான ஒடிசாவில் சுற்றுலாத் துறையிலுள்ள வாய்ப்புகளை அரவணைக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வாய்ப்புள்ளது என்றார் திரு தர்மன்.
ஒடிசா பயணத்தின் அங்கமாக அவர், பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முதல் தடுப்பூசி உற்பத்தி ஆலைக்குச் சென்றார்.
கடந்த 14ஆம் தேதி இந்தியாவிற்குச் சென்ற அதிபர், தமது அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு சனிக்கிழமை சிங்கப்பூர் புறப்பட்டார்.