ஒளியின் சிறப்பைப் போற்றும் சிறுபான்மைச் சமூகம்

ஒளியின் சிறப்பைப் போற்றும் சிறுபான்மைச் சமூகம்

3 mins read
7e3d239c-66c5-422a-8190-d07201b0a572
சரதுச சமூகத்தைச் சேர்ந்த நவாஸ் பாவாடம், 52, தில்நவாஸ் ஸவேரி, 56, இருவரும் தங்கள் வீட்டுக்கு வெளியே ரங்கோலி கோலமிட்டு தீபமேற்றுகின்றனர். - படம்: கி.ஜனார்த்தனன்

தீபாவளியை முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடும் இந்துக்களுடன் சீக்கியர்கள், சமணர்கள் உள்ளிட்ட பிற சமயத்தவரும் இணைகின்றனர்.

சிங்கப்பூரின் மிகச் சிறுபான்மை சமயச் சமூகமான சரதுசர்கள் (Zorostrians) பலர், தீபவாளியைச் சமயப் பண்டிகையாகக் கொண்டாடவில்லை என்றாலும் அதனை இந்தியப் பண்பாட்டு விழாவாகக் கருதுகின்றனர்.

சிக்லாப் ரோட்டில் தங்கியுள்ள இரண்டு பார்சி குடும்பத் தலைவிகளுக்கு தீபாவளிப் பண்டிகை, குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் காலமாகும்.

“நானும் என் உறவினரும் எதிரெதிரே வசிக்கிறோம். எங்கள் வீட்டு வாசலில் நாங்கள் ரங்கோலி இடுவோம். தீபங்கள் ஏற்றுவோம். பலகாரம் செய்து பரிமாறிக்கொள்வோம்,” என்றார் இல்லத்தரசி நவாஸ் பாவாடம், 52.

ஹைதராபாத், கொச்சி, சென்னை போன்ற தென்னிந்திய நகர்களில் பார்சி சமூகத்தினர் வாழ்வதாக அவர் கூறினார்.

“பெங்களூரில் பிறந்து வளர்ந்தேன். மும்பையைச் சேர்ந்த என் கணவர் 1993ல் சிங்கப்பூருக்கு வந்தார். 1999ல் நாங்கள் திருமணம் செய்தபின் நான் இங்கு வந்தேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்,” என்றார் திருவாட்டி நவாஸ்.

கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளைத் தெரிந்துள்ள இவருக்கு பேச்சுத்தமிழ் ஓரளவு புரியும்.

பாரசீகத்தில் (இன்றைய ஈரான்) சரதுசர் என்ற போதகரால் கற்பிக்கப்பட்ட இவர்களது சமயம், உலகின் மிகப் பழமையான சமயங்களில் ஒன்றாகும்.

புராதன இந்தியாவின் வைதீகச் சமூகங்களில் வேள்வித் தீக்கு அளிக்கப்படும் புனிதத்தன்மைக்கு நிகராக, சரதுசர்கள் தீயைப் புனிதமாகக் கருதுகின்றனர்.

“இருந்தபோதும் நாங்கள் தீயையோ விக்கிரங்களையோ வழிபடுவதில்லை. நல்ல எண்ணம், நல்ல வார்த்தைகள், நல்ல செயல்கள் என்பதே எங்கள் சமயத்தவரின் கோட்பாடுகள்,” என்று திருவாட்டி நவாஸ் கூறினார்.

நெருப்புக்கும் தீபங்களுக்கும் தங்கள் சமயத்தவர் கொடுக்கும் மரியாதை, தீபாவளியின் உள்ளர்த்தத்துடன் இயைவதாக இவர்கள் கூறுகின்றனர்.

(இடமிருந்து) நவாஸ் பாவாடம், பரினஸ் பாவாடம், கர்மீன் அவாரி, தில்நவாஸ் ஸவேரி ஆகியோர் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
(இடமிருந்து) நவாஸ் பாவாடம், பரினஸ் பாவாடம், கர்மீன் அவாரி, தில்நவாஸ் ஸவேரி ஆகியோர் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். - படம்: பரினஸ் பாவாடம்

10ஆம் நூற்றாண்டில் சமயத் துன்புறுத்தலில் இருந்து தப்பிப்பதற்காக குஜராத்தில் கரையிறங்கிய சரத்துஸ்திர பாரசீகர்களின் வம்சாவளியினராகப் பார்சி சமூகத்தினர் உள்ளனர்.

பார்சி சமூகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 350 பேர் தற்போது சிங்கப்பூரில் வசிக்கின்றனர். டெஸ்கர் சாலையில் உள்ள ‘சரத்துஸ்திர இல்லம்’ எனும் இடத்தில் இச்சமூகத்தைப் பற்றிய ஓர் அரும்பொருளகம் ஈராண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பார்சி சாலை, பார்சி செமெட்டரி ஆகிய இடங்கள், இச்சமூகத்தின் பெயரைக் கொண்டுள்ளவை.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 10 சமயங்களில் ஒன்றாக சரதுஸ்ரத்தை சிங்கப்பூர் சேர்த்துக்கொண்டது, தங்கள் சமூகத்திற்குப் பேருதவியாக இருப்பதாக திருவாட்டி நவாஸ் கூறினார்.

“சிங்கப்பூர் அடையாள அட்டையில் எனது சமயத்தைச் சேர்க்க முடிகிறது. இந்தியாவுக்கு வெளியிலுள்ள வெகு சில நாடுகளில்தான் இது சாத்தியம். இந்தப் பெரும் நற்பேற்றைச் சிங்கப்பூர் எங்களுக்கு அளித்துள்ளது,” என்றார் திருவாட்டி நவாஸ்.

தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்படும் ‘தந்தேராஸ்’ திருநாளுக்காக குஜராத்திகள், மர்வாடிகள் எப்படி புதிய நகைகளை வாங்குகிறார்களோ தாங்களும் வாங்குவதாக திருவாட்டி நவாசின் உறவினர் திருவாட்டி தில்நவாஸ் ஸவேரி கூறினார்.

சமண சமயத்தைச் சேர்ந்த கணவரைத் திருமணம் செய்து ஒரு பிள்ளைக்குத் தாயாரான திருவாட்டி தில்நவாஸ், 56, ஆண்டுதோறும் மாமியாருடன் பலகாரங்களைச் செய்வார்.

“எங்கள் நண்பர் ஒருவர் ஆண்டுதோறும் தீபவாளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்வார். சரதுஸ்ரரான அவர், பாலக்காட்டைச் சேர்ந்த இந்துக் கணவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆடல், பாடல், பலகாரம் என நாங்கள் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்,” என்றார் திருவாட்டி தில்நவாஸ்.

ஒளிநிறைந்த இல்லங்களில் இன்பம் சூழ, தீபாவளி கொண்டாடும் எல்லோரையும் வாழ்த்துவதாக இவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்