பிரபல இந்தியப் பாடகர் ஸுபீன் கார்க் உயிரிழந்தது குறித்து வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி சிங்கப்பூரில் மரண விசாரணை தொடங்கும்.
இந்த விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடக்கும். மரண விசாரணை நிறைவடைந்த பிறகு முடிவுகள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.
கார்க், கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி சிங்கப்பூரில் உயிரிழந்தார். அவருக்கு வயது 52. சிங்கப்பூர் கடற்கரைக்கு அருகே நீந்திக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்தார்.
செயின்ட்ஸ் ஜான்ஸ் தீவில் உதவி தேவைப்படுவதாக அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததென்று காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது. சுயநினைவுடன் இருந்த கார்க், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
சிங்கப்பூரில் உள்ள அசாமிய சமூகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கார்க் இங்கு வந்திருந்தார்.
அவரின் மரணத்துக்குப் பிறகு இந்தியாவில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று பலர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியது. சிங்கப்பூரில் அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ஷியாம்கானு மஹந்தாவும் அவர்களில் ஒருவர்.
கார்குடன் பணியாற்றிய சித்தார்த்தா ஷேகர் ஜியோதி கோஸ்வாமி, அமித்பிரவா மஹந்தா ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

