தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரலாற்றுத் திருப்பங்கள் கண்ட ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு

6 mins read
ba32f836-634f-456d-85fc-aee36aff7039
கோலாலம்பூரில் அக்டோபர் 27ஆம் தேதியன்று 47வது ஆசியான்  மாநாட்டில் மலேசியப் பிரதமர் அன்வார், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்  தொடக்கவுரை ஆற்றுகிறார்.  - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

வட்டார அளவில் நிலைத்தன்மையை வளர்ப்பதற்கான முக்கிய முன்னெடுப்புகள் கோலாலம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை வார்த்தைகளாலும் வர்த்தகத்தாலும் ஒன்றோடு ஒன்று உரசும் நேரத்தில் தங்கள் நிம்மதிக்கும் வளர்ச்சிக்கும் இதர நாடுகள் தாங்களே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழலில் உள்ளன.

உலகின் அமைதிக் காவலராகப் பொறுப்பேற்று எந்த நாடும் செயல்படாத சூழலில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் ஓரளவு நிலவி வந்த அனைத்துலக ஒழுங்கைச் சிதற விடாமல் காக்கும் பொறுப்பு, உலக அரங்கில் விரிந்துள்ளது.

58 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைந்த ஆசியான் எனப்படும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தின் தொலைநோக்கு மெச்சத்தக்கது.

சிங்கப்பூர், இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் என ஐந்து நாடுகள் இணைந்து நிறுவிய இந்த ஆசியான் அமைப்பு, காலனித்துவத்திற்குப் பிந்திய சூழலில் வட்டாரப் பொருளியல் முன்னேற்றத்திலும் கம்யூனிசத்தை வட்டார அளவில் எதிர்கொள்வதிலும் கவனம் செலுத்தியது.

1967 ஆகஸ்ட் 8ல் தாய்லாந்தில் நடைபெற்ற முதல் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
1967 ஆகஸ்ட் 8ல் தாய்லாந்தில் நடைபெற்ற முதல் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். - படம்: asean.org

ஒத்துழைப்பு, உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட்டின்மை என பேங்காக்கில் அந்நாடுகள் முதன்முதலாக இணைந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

சில கட்டங்களின் ஆசியானின் செயல்திறனில் பற்றாக்குறை இருப்பதாக அவ்வப்போது குறைகூறப்படுகிறது. 1997ல் நிலவிய ஆசிய நிதி நெருக்கடிக்கு ஆசியான் நாடுகள் முறையாக, ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கையை எடுக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது.

தற்போது நிலவும் தென் சீனக் கடல் சர்ச்சை, மியன்மார் உள்நாட்டுப் பூசல் உள்ளிட்ட விவகாரங்கள் முறையாகக் கையாளப்பட்டால் ஆசியான் வட்டாரம் பயனடையும். என்றாலும், உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடப்போவதில்லை என்ற கடப்பாடு, பல நேரங்களில் அமைப்பின் செயல்திறனுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

நிலையான அமைதிக்கான அடித்தளம்

மாநாட்டின்போது எட்டப்பட்ட தாய்லாந்து-கம்போடியா உடன்பாடு, பதற்றத்தை உடனடியாகக் குறைப்பதற்கு உதவும் என்றாலும் நூறு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் அவ்விரு நாடுகளின் எல்லைப் பதற்றம் தணிவதற்குக் கூடுதல் முயற்சிகள் தேவைப்படும்.

இதன் பிறகும் பூசல் நீடித்தால் ஆசியானின் அமைதிக்கான நற்பெயர் பாதிக்கப்படலாம் என்பதால் உறுப்பினர்கள் எல்லாரும் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் காட்டுவது நல்லதாகும் என்பது கவனிப்பாளர்களின் கருத்து.

சர்ச்சைக்குரிய கம்போடியா தாய்லாந்து எல்லைப்பகுதியில் தாய்லாந்தின் ராணுவமும் காவல்துறையும்  முள்கம்பிகளைப் பொருத்துவதை  கம்போடியத் தரப்பு எடுக்கப்பட்ட படம் காண்பிக்கிறது. 
சர்ச்சைக்குரிய கம்போடியா தாய்லாந்து எல்லைப்பகுதியில் தாய்லாந்தின் ராணுவமும் காவல்துறையும்  முள்கம்பிகளைப் பொருத்துவதை  கம்போடியத் தரப்பு எடுக்கப்பட்ட படம் காண்பிக்கிறது.  - படம்: ஏஎஃப்பி

‘அமைதி உடன்பாடு’ என்று ஆங்கில ஊடகங்களில் கூறப்பட்டு வந்தாலும் தாய்லாந்து மொழி ஊடகங்களில் நிலவரம் சற்று மாறுபட்ட விதமாகக் காண்பிக்கப்படுகிறது.

தாய்லாந்திலுள்ள தீவிர தேசியவாதிகளைச் சினப்படுத்துவதைத் தவிர்க்க அதனை அமைதி ஒப்பந்தம் என்று நேரடியாகக் குறிப்பிட்டதைத் தவிர்த்ததாக தாய்லாந்தின் காவ்சோட் தளத்தின் மூத்த செய்தி ஆசிரியர் பிரவிட் ரொஜனாப்ருக், தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

ஆங்கில செய்தி ஊடகங்களில் அமைதி எட்டப்பட்டது போன்ற வர்ணனைகள் இருந்தாலும் உண்மைநிலை தொடர்ந்து சிக்கலாக இருப்பதாக அவர் கூறினார்.

ஒப்பந்தம் தாய்லாந்து மக்களுக்கு எந்த விதத்திலும் பாதகத்தை ஏற்படுத்தாது என்று கையெழுத்திடுவதற்கு முன்னதாகப் பிரதமர் அனுத்திம், ஃபேஸ்புக் நேரலை வழி மக்களிடம் தெரிவித்ததைத் திரு பிரவிட் சுட்டினார்.

“திரு அனுட்டின் பதில் சொல்லவேண்டிய செல்வாக்கு மிக்க பலர் தீவிர தேசியவாதிகளாக மாறியுள்ளனர். கம்போடியாவை அவர்கள் சந்தேகத்துடன் காண்கின்றனர். இரு பக்கத்திலுமே தீவிர தேசியவாதிகள் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

கம்போடிய தலைநகர் நோம் பென்னில் கம்போடிய பெளத்தத் துறவிகள், அமைதிக்காக ஆகஸ்ட் 10ல் ஊர்வலம் நடத்தினர். 
கம்போடிய தலைநகர் நோம் பென்னில் கம்போடிய பெளத்தத் துறவிகள், அமைதிக்காக ஆகஸ்ட் 10ல் ஊர்வலம் நடத்தினர்.  - படம்: ஏஎஃப்பி

தாய்லாந்தின் அடுத்த தேர்தல் அடுத்தாண்டின் முற்பகுதியில் நடத்தப்படலாம் என்ற அனுமானங்கள் நிலவும் வேளையில் தேசியவாத உணர்வுகள் கொளுந்துவிட்டு எரியலாம் என்று பிபிஏஏ பொதுக்கொள்கை ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் புஷ்பநாதன் சுந்தரம் தெரிவித்தார்.

உள்நாட்டில் ஆதாயம் அடைய நினைக்கும் அரசியல்வாதிகள், பிற நாடுகளுடனான பூசல்களின் தொடர்பில் மக்களின் உணர்வைத் தூண்டக்கூடும் என்றார் டாக்டர் சுந்தரம். இதனை ஒப்புக்கொண்ட திரு பிரவிட், செய்தி ஊடகங்களுமே இதனைச் செய்துவருவதாகவும் சுட்டினார்.

ஆசியானில் பெரும்பாலான நாடுகள் அமைதியை இயன்றவரை கட்டிக்காக்கிற நிலையில் தாய்லாந்து, கம்போடியா, அண்மைய கரும்புள்ளிகளில் ஒன்றாக விழுவதாக சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் பில்வீர் சிங் தெரிவித்தார்.

இருந்தபோதும், கையெழுத்திட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம், ஆயுதத்தைப் பயன்படுத்திய பூசலில் ஈடுபட்ட உறுப்பு நாடுகளுக்கு இடையே ஆசியான் வெற்றிகரமாக சமாதான நடுவராகச் செயல்பட்டதாக டாக்டர் புஷ்பநாதன் சுந்தரம் கூறினார்.

கடும் புவிசார் அரசியல் போட்டிக்கு இடையே ஆசியான் தொடர்ந்து நிலையான அரசியல் சக்தியாகத் தன்னை நிறுவ முடிந்தது ஆசியானுக்கு வலுசேர்த்துள்ளதாக அவர் கூறினார்.

இரு நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து திசைத்திருப்பும் வகையில் இந்தப் பிரச்சினை அமைவதாகவும் அவர் கூறினார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அமைதியால் அவை ஓரளவுக்கு பொருளியல் ஆதாயத்தைப் பெறலாம் என்றார் இணைப் பேராசிரியர் சிங்.

திமோர் லெஸ்டேயால் ஆசியான் முழுமை 

ஆசியானின் புதிய சேர்க்கையான திமோர் லெஸ்டே, வளர்ந்து வரும் பொருளியலைக் கொண்டது. சுதந்திரத்தை அடைவதற்காக அந்நாடு கடந்து வந்த பாதை கரடுமுரடானது, ரத்தம் தோய்ந்தது.

24 ஆண்டுகள் நீடித்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்தோனீசியாவிடமிருந்து பிரிந்துச் சுதந்திரம் அடைந்த திமோர் லெஸ்டே, 2011ல் ஆசியானில் சேர விண்ணப்பித்தது.

ஆசியானில் திமோர் லெஸ்டே  சேர்க்கப்பட்ட உச்சநிலைக்கூட்டத்தில் பிரதமர் ஸனானா குஸ்மாவ், கேமரா முன் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். 
ஆசியானில் திமோர் லெஸ்டே  சேர்க்கப்பட்ட உச்சநிலைக்கூட்டத்தில் பிரதமர் ஸனானா குஸ்மாவ், கேமரா முன் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரைப் பொறுத்தவரையில், திமோர் லெஸ்டேக்கு திறன்சார்ந்த உதவித்திட்டங்களை வழங்கி அதன் மனிதவளத்தைப் பெருக்க உதவியது.

திமோர் லெஸ்டேயின் இணைவு, ஆசியானுக்கு முழுமையைத் தருவதாகத் திரு அன்வார் கூறியது பொருத்தமாக உள்ளது.

ஆசியான் உறுப்பியம் வழி திறன் மேம்பாடு, தொடர்பு வட்டம், முன்னேறுவதற்கான உற்சாகம் ஆகியவற்றைப் பெற மக்களும் காத்திருக்கின்றனர்.

“அரசியலையும் அனைத்துலக உறவுகளையும் பொறுத்தவரை, இது எங்களுக்கு ஆதாயத்தைத் தருகிறது. ஆசியான் சிறந்த தளமாக இருக்கும். நமது குரல் இனி கூடுதல் வலுவுடன் ஒலிக்கும்,” என்று உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமோர் லெஸ்டே அரசாங்க உதவியாளரும் முன்னாள் செய்தியாளருமான ரெய்முண்டோஸ் ஒக்கி, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தினர், எதிர்க்கட்சி, பொதுமக்கள் என தமது நாட்டில் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் அத்தனையும் மறந்து கொண்டாடியதாக அவர் தெரிவித்தார்.

இருந்தபோதும், இந்தக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கடுமையான உழைப்பு காத்திருப்பதாகத் திரு ஒக்கி கூறினார்.

“நாம் உழைக்கிறோம். ஆனால் பின்தங்கி இராதிருக்க, இன்னும் வேகமாக ஓடவேண்டிய நிலையில் உள்ளோம். நாம் உள்கட்டமைப்பைச் சரிசெய்து வருகிறோம். அது தற்போது எங்களுக்குச் சிரமமாக உள்ளது. 2028ல் ஆசியானுக்குத் தலைமை ஏற்பது எங்கள் கனவு,” என்றார் திரு ஒக்கி.

முன்வந்த அமெரிக்கா, தள்ளி நின்ற இந்தியா

ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது நிலவிய குதூகலச் சூழலில் உளமகிழ்ந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஆசியான் தலைவர்கள் தொடுவதெல்லாம் பொன்னாவதாக, தமக்குரித்தான மிகைப்படுத்திப் பேசும் பாணியில் கூறினார்.

திரு டிரம்ப்பைப் பொறுத்தவரை, தாய்லாந்து, கம்போடியா பிரச்சினையின் தணிவுக்கு அவர் முக்கிய காரணமாவார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வரவேற்கும் ஆசியான் நடனம்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வரவேற்கும் ஆசியான் நடனம். - படம்: ஏஎஃப்பி

நான் சிறை சென்றேன், நீங்கள் அதன் விளிம்பில் இருந்தீர்கள் என்று திரு டிரம்ப்பிடம் திரு அன்வார் நகைச்சுவையாகக் கூறும் அளவுக்கு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே தராளமான உறவு இருப்பதைக் காண முடிந்தது.

திரு டிரம்ப்பிற்கு நோபல் அமைதிப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்போவதாகக் கம்போடிய தரப்பு விடுத்த அறிவிப்பு, இந்த விவகாரத்தில் திரு டிரம்ப் கொண்டுள்ள ஈடுபாட்டை அந்நாடு அறிந்து வைத்திருப்பதைக் காண முடிகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வராதது குறித்தும் பேசப்பட்டதாக அனைத்துலக ஊடகங்கள் சில குறிப்பிட்டன. பாகிஸ்தான் குறித்து திரு டிரம்ப்புடன் பேச திரு மோடி தயங்குவதாகக் கூறப்படுகிறது.

ஆசியான் மாநாட்டில் மெய்நிகர் வழியாகக் கலந்துகொண்டபோது, நேரடியாக வராதிருந்தது இந்தியாவுக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான தெளிவின்மையையும் கணிக்க இயலாத தன்மையையும் பிரதிபலிப்பதாக சோலாரிஸ் ஸ்டெட்டஜீஸ் சிங்கப்பூரின் அனைத்துலக ஆய்வாளர் முஸ்தஃபா இசுடின் தெரிவித்தார்.

“ஆசியானுடன் இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினை இல்லை என்றாலும் மாநாட்டின்போது திரு டிரம்ப்பைச் சந்திக்க திரு மோடி தவிர்க்க நினைத்திருக்கலாம். திரு மோடிக்கும் அவரது கூட்டணியினருக்கும் எதிர்வரும் பீகார் தேர்தல் முக்கியமாக இருப்பதால் எதிர்வினைகளைத் தவிர்க்க திரு மோடி இவ்வாறு செய்திருக்கலாம்,” என்று டாக்டர் முஸ்தஃபா கூறினார்.

அதிக சுமையுடன் பொறுப்பேற்கும் பிலிப்பீன்ஸ்

மலேசியாவின் தலைமைத்துவத்தில் வலியுறுத்தப்பட்ட ஒற்றுமை, கலந்துரையாடல், பன்னாட்டு உறவுகளுக்கான முக்கியத்துவம் ஆகியவை அதிகம் பேசப்பட்டன.

வட்டாரப் பிரச்சினைகளைக் களைவதற்கு இந்தப் பேச்சுகள் அதிகம் உதவவில்லை என்று கவனிப்பாளர்கள் சிலர் நினைத்தாலும் ஆரம்பப் படிநிலைகள் தேவைப்படுகின்றன.

அக்டோபர் 28ல் நிகழ்ந்த ஆசியான் உச்சநிலைக்கூட்ட நிறைவுவிழாவில் ஆசியானின் தலைமைத்துவத்தைப் பிலிப்பீன்சிடம் ஒப்படைப்பதைப் பிரதிபலிக்க அதன் தலைவரும் மலேசியாவின் பிரதமருமான அன்வார் இப்ராஹிம், பிலிப்பீன்ஸ் அதிபர் பொங்பொங் மார்க்கோஸிடம் சுத்தியலைத் தருகிறார். 
அக்டோபர் 28ல் நிகழ்ந்த ஆசியான் உச்சநிலைக்கூட்ட நிறைவுவிழாவில் ஆசியானின் தலைமைத்துவத்தைப் பிலிப்பீன்சிடம் ஒப்படைப்பதைப் பிரதிபலிக்க அதன் தலைவரும் மலேசியாவின் பிரதமருமான அன்வார் இப்ராஹிம், பிலிப்பீன்ஸ் அதிபர் பொங்பொங் மார்க்கோஸிடம் சுத்தியலைத் தருகிறார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

உலக அளவில் தலைவர்களின் வார்த்தைகள் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் நேரத்தில் திரு அன்வார் போன்றோரின் சமாதான, நம்பிக்கையான வார்த்தைகளுக்கும் ஓரளவுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

தென் சீனக் கடல் விவகாரத்திற்கு மத்தியில் பிலிப்பீன்ஸ், ஆசியான் தலைமைத்துவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

தென்சீனக் கடலில் சீனாவுடன் எல்லைப் பிரச்சினை கொண்டுள்ள நான்கு ஆசியான் நாடுகளில் ஃபிலிப்பீன்சும் ஒன்று. முக்கியமான இந்தப் பிரச்சினையில் ஃபிலிப்பீன்சின் செயல்பாடு திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்புச் சொற்கள்