போர், வறுமை, மூட நம்பிக்கைகள் போன்ற பல்வேறு காரணங்களால் அன்றைய சிங்கப்பூரில் குழந்தைகள் பல, தத்துக்கொடுக்கப்பட்டு வேறு குடும்பங்களில் வளர்ந்தன.
காலனித்துவ ஆட்சியின்போது 1934ஆம் ஆண்டு தத்தெடுப்புச் சட்டம் இருந்தபோதும் அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு அவை விருப்பத்தின்பேரில் எளிதில் நடந்தன. கடுமையான காலகட்டங்களிலும் கைவிடப்பட்ட பிற இனத்துப் பெண் பிள்ளைகளை மலாயா-சிங்கப்பூரில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அன்புடன் எடுத்து வளர்த்த கதைகள் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தக் கருப்பொருளையொட்டி, ‘பிறப்பால் சீனர்கள், உணர்வால் தமிழர்கள்’ என்ற கட்டுரையை தமிழ் முரசு கடந்த நவம்பர் 3ஆம் தேதியன்று வெளியிட்டது. அந்தக் கட்டுரையைப் போன்று, இங்குமே சில மாதரின் வாழ்க்கைக் கதையின் சுருக்கங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அன்றைய சிங்கப்பூரையும் சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்வியலையும் பற்றிய வரலாற்றுக்குறிப்புகளை இந்த அனுபவக்கதைகளில் அறிய முடிகிறது.
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்பவர்கள், சீன இனத்தவரைப் போல காணப்படும் இந்த மாது, சேலை அணிந்து வழிபாடு செய்வதைப் பார்க்கக்கூடும்.
1950, ஜூன் 10ஆம் தேதி பிறந்த ஜி. நாகம்மாள், சிங்கப்பூர்-மலாயா தமிழ்க்குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சீன இனத்தவர்களில் ஒருவர்.
“எங்கள் அம்மா அப்பாவுக்கு அப்போது இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அதன் பிறகு அவர்கள் என்னை எடுத்து வளர்த்தார்கள். எனக்குப் பிறகு மேலும் மூன்று பிள்ளைகளைத் தத்தெடுத்தனர்,” என்றார் திருவாட்டி நாகம்மாள்.
குடும்பத்தினர் மட்டுமின்றி, சுற்றி வாழ்ந்தவர்களும் தமிழர்கள்.
“புடவை கட்டுவது, பலகாரம் செய்வது, முறுக்கு சுடுவது, தமிழர் முறைப்படி இறைவனை வழிபடுவது ஆகியவற்றை என் தாயார் கற்றுத்தந்தார்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள பர்ச் ரோட்டில் வளர்ந்த திருவாட்டி நாகம்மாள், 12 வயதை எட்டும் வரை தாம் சீனக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.
“எங்களை ஒரு நாள், சீனப் பெண் ஒருவர் தேடி வந்தார். அவரைப் பற்றி என் தாயார் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர் யார் என்பதை சீன இனத்து அண்டைவீட்டார் ஒருவர் என்னிடம் காட்டிக்கொடுத்தார்,” என்றார் திருவாட்டி நாகம்மாள்.
தாம் தத்தெடுக்கப்பட்டவர் என்பதைப் பற்றி அதிகம் எண்ணிடாத திருவாட்டி நாகம்மாளின் வாழ்க்கை காலத்துடன் உருண்டோடியது. தொடக்கநிலைக் கல்வி பெற்றிருந்த திருவாட்டி நாகம்மாள், இல்லத்தரசியாக இருந்தார்.
பொங்கல், தீபவாளி, தைப்பூசம் முதலிய பண்டிகைகளைக் கொண்டாடி வந்த நாகம்மாள், கேரளாவிலிருந்து சிங்கப்பூர் வந்த குத்தகையாளர் ஒருவரை 17 வயதில் திருமணம் செய்து கொண்ட பிறகு, ஓணத்திருநாளையும் கொண்டாடி வருகிறார்.
ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நாகம்மாள், இரண்டு பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டி. தாய் தந்தையர் பூவுலகிலிருந்து மறைந்து பல்லாண்டுகளுக்குப் பிறகும் அவர்கள் கற்பித்த பண்பாட்டுக் கூறுகள் தம்மைவிட்டு அகலவில்லை என்றார் திருவாட்டி நாகம்மாள்.
அடித்தள அமைப்புகளில் தொண்டூழியராக இருக்கும் நாகம்மாள், ‘நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி’ என்ற பாடலைத் தாம் பெரிதும் விரும்புவதாகச் சிரித்த முகத்துடன் கூறினார்.
இரு குடும்பங்களுடனும் நீடிக்கும் உறவு
மற்றொரு குடும்பத்திடம் கொடுக்கப்பட்டபோதும் பெற்ற குடும்பத்தின் தொடர்பு இவருக்குத் துண்டிக்கப்படவில்லை.
1962ல் பிறந்த ராமநாதன் தேவி, சிறு வயதில் குடும்பத்தினரால் எடுத்து வளர்க்கப்பட்ட பிறகு முறையாகத் தத்தெடுக்கப்பட்டார். ஆறு மாதக் குழந்தையாகத் தத்தெடுக்கப்பட்ட ராமநாதன் தேவியின் இயற்பெயர், டான் சியூ எங்.
கேலாங் வட்டாரத்தில் முன்பிருந்த கம்பத்து வீட்டில் அவரைப் பெற்ற குடும்பம் வசித்தது.
“என்னைப் பெற்ற தந்தை, நிலக்கரி வியாபாரம் செய்தவர். ஏழு பெண் பிள்ளைகள், ஓர் ஆண் பிள்ளை என்ற வரிசையில் நான் ஐந்தாவது பிள்ளை,” என்று அவர் கூறினார்.
நா. ராமதான்-மா. மாரியம்மாள் தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டார் திருவாட்டி தேவி.
“தமிழகத்தில் காரைக்காலில் பிறந்த என் வளர்ப்புத் தந்தை, இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக சிங்கப்பூருக்கு வந்தார் என நினைக்கிறேன். கடல்துறை, துறைமுக ஆணையத்தில் அவர் கண்காணிப்பாளராக வேலை செய்தார்,” என்றார் திருவாட்டி தேவி.
பல ஆண்டுகளாகத் தம்மைப் பெற்ற குடும்பத்தாரை, குடும்ப நண்பர்கள் என நினைத்த காலத்தில் ஒருநாள் உண்மையைப் பற்றித் தாயாரிடம் கேட்டறிந்த தருணத்தை நினைவுகூர்ந்தார்.
“நான் அதிர்ச்சி அடைந்ததாக என்னால் சொல்ல முடியாது. எனக்குச் சிரிப்புதான் வந்தது. என்ன சொல்வதென்று அப்போது எனக்குத் தெரியவில்லை,” என்றார்.
தாம் தத்தெடுக்கப்பட்டது பற்றி அதிகம் பேசாமல் பெற்ற குடும்பத்துடன் இன்றளவும் உறவை நல்ல முறையில் தக்கவைத்துக்கொள்வதாக திருவாட்டி தேவி கூறினார். திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு இரு குடும்பங்களும் தொடர்ந்து ஒன்றிணைந்தன.
இருந்தபோதும், மற்ற பிள்ளைகள் பெற்ற குடும்பத்தில் தொடர்ந்து வாழும்போது தாம் ஏன் தத்துக்கொடுக்கப்பட்டேன் என்ற கேள்வியை ஒருமுறை கேட்டதாகக் குறிப்பிட்டார்.
தம்மை மட்டுமின்றி, தம் மூன்றாவது அக்காவும் தத்துக்கொடுக்கப்பட்டதாக என்னைப் பெற்ற தாயார் கூறினார்.
“இருந்தபோதும் குழந்தையாக இருந்த என் அக்காவுக்குப் பால் ஊட்டப்பட்டபோது மூக்கிலிருந்து பால் வழிந்ததால் தத்துக் குடும்பம் அவளைப் பெற்ற குடும்பத்திடம் மீண்டும் ஒப்படைத்ததாக அவர் கூறினார். அந்தப் பதில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
தீபாவளியின்போதும் சீனப்புத்தாண்டின்போதும் திருவாட்டி தேவியின் இரண்டு குடும்பங்களும் இணைவது வழக்கம்.
அன்பும் அரவணைப்பும் நிறைந்த வளர்ப்புக் குடும்பச் சூழல், கட்டுக்கோப்பு மிக்கது என்றார் திருவாட்டி தேவி.
“நெற்றிப்பொட்டைச் சிறிதாக அணிந்தாலும் அதை இன்னும் பெரிதாக வைக்கும்படி தந்தை சொல்வார். நானும் அப்படியே செய்வேன்,” என்று அவர் கூறினார். சீன மொழி கற்கும் முயற்சியைக் கைவிட்டதாக திருவாட்டி தேவி கூறினார்.
“சீன மொழி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. சீனத்தில் தொடர்ந்து பேசுவதற்கு ஆள் இல்லாததால் ஆங்கிலம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளைத்தான் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது,” என்றார்.
“இருந்தபோதும் என் சொந்தக் குடும்பம் என்னை அந்நியமாகக் கருதவில்லை. நான் செய்யும் பிரியாணியையும் குழம்பு வகைகளையும் அவர்கள் விரும்பிக் கேட்பார்கள்,” என்று திருவாட்டி தேவி மகிழ்ச்சியுடன் கூறினார்.
தமிழைத் தாயாகக் கருதுபவர்
சீனக் குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த திருவாட்டி தேவகி சீனிவாசராஜம், 74, தாம் பிறந்த இரண்டு வாரங்களில் தந்தையை இழந்தார்.
“குடும்பத்தில் வறுமை இருந்ததால் நான் வேறு குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டதாக என் தந்தை கூறியிருக்கிறார்,” என்றார் திருவாட்டி தேவகி.
“என்னை வளர்த்தெடுத்த குடும்பத்தில் நான் இரண்டாவது பிள்ளை. என்னை வளர்த்த தந்தை எனக்கு முன்னதாகவும் எனக்குப் பிற்பாடும் பிள்ளைகளைத் தத்தெடுத்தார்,” என்றார் திருவாட்டி தேவகி.
1951ல் பிறந்த தேவகி, தெலுக் பிளாங்காவிலுள்ள காலனித்துவ வீட்டுக் குடியிருப்பில் வளர்ந்தார். தற்போது ஹார்பர்ஃபிரண்ட் உலக வர்த்தக மையம் நிற்கும் இடத்தில் தாம் முன்னதாக வளர்ந்த வீடு இருந்ததாக அவர் கூறினார்.
கடல்துறை, துறைமுக ஆணையம் எனத் தற்காலத்தில் அழைக்கப்படும் துறைமுக வாரியத்தில் தமது தந்தை அளவாய்வாளராகப் பணியாற்றியதாக திருவாட்டி தேவகி கூறினார்.
“என்னை வளர்த்த குடும்பத்தில் ஒரே ஒரு பையன். பெண் குழந்தைகள் இல்லாததால் வறுமைக்குள்ளான பெற்றோர் பிள்ளையைத் தத்துக்கொடுக்க முன்வரும்போது அவர்களை எடுத்து வளர்ப்பார்,” என்றார் திருவாட்டி தேவகி
தத்துக்கொடுத்த குடும்பத்தினர் சிறு வயதில் சீனப்புத்தாண்டு சமயத்தில் தம்மைப் பார்க்க வீட்டுக்கு வந்துபோனதாக திருவாட்டி தேவகி குறிப்பிட்டார்.
“என்னைப் பெற்ற சீனத் தாயார் அப்போது வந்து துணிமணிகளையும் இனிப்புப் பண்டங்களையும் எனக்கு வாங்கித் தருவார். அவர் யார் என்பது அப்போது எனக்குத் தெரியாது,” என்று அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 12 வயதாக இருந்தபோதுதான் தேவகிக்கு உண்மை தெரிந்தது.
“தத்தெடுப்பு குறித்து நான் பெற்ற குடும்பத்தினரிடம் பேசியதில்லை. அவர்களுடன் நான் நெருக்கமாக இருந்ததில்லை. அவர்கள் விருந்தாளிகளாகத்தான் வந்து போவார்கள்,” என்றார் திருவாட்டி தேவகி.
21 வயதுக்குப் பிறகு, பெற்ற அன்னையுடனான தேவகியின் தொடர்பு தேயத் தொடங்கியது.
“நான் பிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது எனக்குத் தெரியாது. எந்தத் தொடர்பும் இப்போது அவர்களுடன் இல்லை,” என்று அவர் கூறினார்.
தமிழ்ப்பண்பாட்டையும் பண்புகளையும் இறுகப் பற்றும் இவர், குழந்தைப் பிறப்பு, மகளிர் பூப்பு உள்ளிட்ட பாரம்பரியச் சடங்குகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுபவர். இந்தப் பண்பாட்டைத் தமது இரண்டு பிள்ளைகளும் தொடர்ந்து கட்டிக்காக்கவேண்டும் என்பது திருவாட்டி தேவகியின் விருப்பம்.
பெற்றவர்களால் மறக்கப்படவில்லை
தம்மைக் கருவாகச் சுமந்தபோதே, பெண் பிள்ளைக்காக ஏங்கிய தம் வளர்ப்புப் பெற்றோர் தம் பெற்ற தாயாரை அணுகியதாக 74 வயது பக்கிரி தையாள் கூறினார்.
“நல்ல பெயரும் குணமும் உள்ளவர்கள் என்பதால் என் சீனப்பாட்டி அவர்களுக்குத் தத்துக்கொடுக்க முடிவு செய்தனர். என்னைப் பெற்ற தாயார் மிகுந்த வருத்தத்துடன் அந்த முடிவுக்கு இணங்கினார்,” என்று தையாள் கூறினார்.
கோ கிம் நியோ என்ற அண்டைவீட்டார் ஒருவர், இந்தத் தத்தெடுப்புக்குத் துணைபுரிந்ததாகவும் திருவாட்டி தையாள் குறிப்பிட்டார்.
இருந்தபோதும் பெற்ற குடும்பத்துடனான தொடர்பு விட்டுப்போகவில்லை. சிறு வயது முதல் இரண்டு குடும்பத்தினரையும் பார்த்து வளர்ந்த பசுமையான நினைவுகள், திருவாட்டி தையாளின் மனத்தில் இன்றளவும் மகிழ்ச்சியை நிரப்புகிறது.
“ஏன் தத்து கொடுக்கப்பட்டேன், எதற்காக அப்படி நடந்தது என்ற கேள்விகளைப் புறந்தள்ளினேன். ஏதேனும் ஒரு காரணத்திற்காக நடந்திருக்கும்,” என்றார் திருவாட்டி தையாள்.
பிறந்த குடும்பத்தில் ஆறு ஆண்பிள்ளைகள், தையாள் உள்பட நான்கு பெண் பிள்ளைகள். உடன்பிறந்தோரில் இருவர் இறந்துவிட்டனர்.
“பக்கிரிசாமி என்ற என் வளர்ப்புத் தந்தை தஞ்சாவூரிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தார். என் தாயார் ரெங்கம்மா தெலுங்கர். அவரும் இளம் வயதில் சிங்கப்பூருக்கு வந்தார்,” என்று அவர் கூறினார்.
தமிழ்ப்பற்று உடைய தம் தந்தை, தமக்குத் திருக்குறளைக் கற்பித்து மனப்பாடம் செய்யும்படி சொல்வார். பள்ளிக்கூட தமிழ்ப்பாடத்தில் இல்லாத பழமொழிகளையும் தம் தந்தை சொல்வதைக் கேட்டு வியந்ததாக தையாள் கூறினார்.
“தமிழ்ப்பற்று என் தாயாருக்கு ஏற்படவேண்டும் என்பதற்காக என் தந்தை எனக்குக் கூடுதலான செய்யுள்களைக் கற்பித்தார். அப்படிப்பட்ட தந்தையையும் தாயாரையும் பெற்றதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்,” என்றார் தையாள்.
“என்னைப் போல தத்துக்கொடுக்கப்பட்டவர்களில் பலர், தாங்கள் பிறந்த குடும்பத்தைத் அறிந்திருக்கவில்லை. என்னைப் பெற்றவர்களும் உடன்பிறந்தோரும் என்னை மறவாமல் அணுக்கம் பாராட்டுகின்றனர் என்ற முறையில் நான் கொடுத்து வைத்தவள்,” என்றும் அவர் கூறினார்.
பண்பாட்டுக்கான நுழைவாயில் தாய்மார்கள்
பிள்ளைகளைத் தத்தெடுக்கும் இந்திய குடும்பங்கள் பலவற்றில் தாய்மார்கள், பண்பாட்டு விழுமியங்களுக்கு அரண்களாகத் திகழ்வதாய்ப் பகுதிநேர சமூக அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றும் டாக்டர் தெரேசா தேவசகாயம் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
தமிழ்ப்பண்பாட்டைப் பொறுத்தவரை தாய்மார்களும் பாட்டிகளும் நுழைவாயில்களாக இருப்பதாக டாக்டர் தெரேசா கூறினார். அவர் எழுதிய ‘சிறு துளிகள்: கடந்தகால சிங்கப்பூரின் செல்லப் பிள்ளைகள்’ (Little Drops: Cherished Children Of Singapore’s Past) என்ற நூலில் தொகுக்கப்பட்ட அனுபவக்கதைகள் இதனை எடுத்துக்காட்டுகின்றன.
“பாவாடை சேலைகளை உடுத்துவது, தமிழர் உணவைச் சமைப்பது, பள்ளிகளில் தமிழ் கற்பது, தமிழர்களின் தெய்வங்களை வழிபடுவது போன்றவற்றின் வழி, தத்தெடுக்கப்பட்ட இந்தப் பெண்களிடம் உள்ள தமிழர் அடையாளம் தங்கள் வளர்ப்புத் தாய்மார்களிடமிருந்து வந்தது,” என்றார் டாக்டர் தெரேசா.
இறுதியில், தத்தெடுக்கப்பட்ட இந்தப் பெண் பிள்ளைகள், தமிழ்ப் பண்பாட்டை உளமார தத்தெடுத்துள்ளதாகக் கூறினார் ஆய்வாளர் தெரேசா.

