சொந்த மண்ணிலிருந்து வேரோடு அகற்றி வேறு மண்ணில் நடப்பட்ட இளஞ்செடிகள் அக்கறையுடன் பராமரிக்கப்படும்போது குறையின்றி வளர்வதுண்டு. அவை நீண்ட நெடு மரங்களாக ஓங்கி, பிறருக்கு நிழல் தரும் வன்மையைப் பெறுவதுமுண்டு.
சிங்கப்பூரில் அந்தக் காலத்தில் சொந்தக் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண் பிள்ளைகள், தத்துக் குடும்பங்களால் அரவணைக்கப்பட்டதைக் காட்டும் சில கதைகள், ‘சிறு துளிகள்: கடந்தகால சிங்கப்பூரின் செல்லப் பிள்ளைகள்’ (Little Drops: Cherished Children Of Singapore’s Past) என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய பெண்கள் 14 பேரின் உருக்கமான கதைகள் வரலாற்று அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை பிரிவின் வலியையும் பரிவின் வலிமையையும் எடுத்துக்கூறுகின்றன.
முற்காலச் சமூகத்தில் வாழ்ந்த, நட்பு, சமூக உறவுகள், சிங்கப்பூர்க் குடியேறிகளின் மரபு எனப் பல்வேறு அம்சங்களை அறிய, ஆராய, முனைவர் தெரேசா தேவசகாயம் திரட்டியுள்ள இந்தத் தகவல் பெட்டகம் உதவலாம்.
இவர் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குடும்ப, பாலின மானுடவியலாளர் (family and gender anthropologist) ஆவார்.
பூசலுக்கிடையே பூத்த புன்னகை மலர்
திருமதி ஜேன் தேவசகாயம், 86, நான்கு வயதுச் சிறுமியாக இருந்தபோது சிங்கப்பூரிலும் அன்றைய மலாயாவிலும் ஜப்பானியப் படையெடுப்பு நிலவியது. மனைவியை இழந்த சீன விவசாயி ஒருவரிடமிருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று அவரைத் தத்தெடுத்துக்கொண்டது.
ஜேன் பிறந்தபோதே அவரது தாயாரின் உயிர் பிரிந்ததால் குழந்தை ஜேன் ராசியற்றவராகக் கருதப்பட்டார்.
சீனப் பஞ்சாங்கத்தின்படி புலி ஆண்டில் பிறந்தார் அவர். புலி ஆண்டில் பிறக்கும் பெண் குழந்தைகள், கோபம் மிக்கவர்களாக வளர்வர் என்றும் குடும்பத்திற்கு துரதிர்ஷ்டம் சேர்ப்பவர்கள் என்றும் சிலர் நம்புகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தில் இவரது செல்லப் பெயர் ‘பாக்கியம்’.
தனது தோலின் நிறம் குறித்துத் தாயாரிடம் கேட்டபோதெல்லாம், “நீ சிறு குழந்தையாக இருந்தபோது பால் குடம் ஒன்றுக்குள் விழுந்துவிட்டாய்,” என விளையாட்டாகச் சொல்வாராம் அந்தத் தாயார்.
பிரசவத் தாதியாக வேலை பார்த்த அந்தத் தாயார், பிறகு ஜேனிடம் அவர் தத்தெடுக்கப்பட்ட உண்மையைக் கூறினார்.
உண்மை தெரிய வந்தபோதும் வளர்ப்புத் தாயார் மீதான பாசம் இம்மியளவும் குறையவில்லை என்கிறார் திருமதி ஜேன்.
ஆங்கிலம், மலாய், தமிழ் பேசத் தெரிந்த திருமதி ஜேனுக்கு சீன மொழி பேசத் தெரியாது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் தான் பிறந்த ஊருக்குச் சென்று பெற்ற குடும்பத்தைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
பல ஆண்டுகள் கழித்து மகள் டாக்டர் தெரேசா தேவசகாயத்தின் கவனத்தைக் கவர்ந்தது திருமதி ஜேனின் கதை.
விட்டுக்கொடுக்க மறுத்த வளர்ப்புத் தாயார்
1949ல் சிங்கப்பூரில் பிறந்த சரஸ்வதி நாகலிங்கம், ரேஸ் கோர்ஸ் ரோட்டில் வளர்ந்தார். தான் தத்துக் குழந்தை என்ற உண்மையை ஆறாம் வகுப்பில் படிக்கும்போது தெரிந்துகொண்டார்.
தன் பெற்றோர் நாகலிங்கம்-நாகம்மாள் தம்பதியர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து குடியுரிமை பெற்றதாகக் கூறிய சரஸ்வதி, அவர்களுக்குச் சொந்த மகள் இருந்ததாகவும் அவரைச் சிறு வயதில் திருமணம் செய்துகொடுத்ததாகவும் கூறினார்.
அந்த மகளுக்குக் குழந்தை பிறந்த பிறகு என் பெற்றோர் என்னை வளர்த்தார்கள். “எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இரண்டு, மூன்று வயதாக இருந்தபோது என் வளரப்புப் பெற்றோருடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
“அக்கம்பக்கத்தினர் என்னைச் ‘சீன சரஸ்’ என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். நான் சீனப் பெண் என்று பள்ளியில் சிலர் கேலி செய்யும்போது அழுவேன்.
“அது பற்றித் தாயாரிடம் கேட்டால், அவர் வயதை அடையும்போது என் நிறமும் அவரைப்போல கறுப்பாக மாறும் என்று விளையாட்டாகச் சொல்வார்.
1963ல் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே கலவரம் மூண்டபோது நெற்றியில் பொட்டு வைத்த பிறகே பள்ளிக்கு அனுப்புவதில் தாயார் கண்டிப்பு காட்டியதை சரஸ்வதி நினைவுகூர்ந்தார். ஆறாவது வகுப்பில் இருந்தபோது ஒரு நாள் பிறப்புச் சான்றிதழைக் கண்ட பிறகே தான் சீன இனத்தவர் என அறிந்துகொண்டதாகக் கூறினார்.
“அதுபற்றி என் தாயாரிடம் கேட்டபோது, சான்றிதழ் பிழையாகத் தயாரிக்கப்பட்டது எனச் சொல்லிப் பார்த்தார். எனக்கு உண்மை தெரிந்திருந்தபோதும் அதனைப் பெரிதாகக் கருதாமல் என் தாயாருடன் நெருக்கமாக இருந்தேன்.
ஈன்றெடுத்த சீனத்தாய் மூன்று, நான்கு முறை தன்னைப் பார்க்க வந்திருந்தபோது வளர்ப்புத்தாய் அதைத் தடுத்ததாகக் கூறினார் சரஸ்வதி.
“என் வளர்ப்புத்தாய், என் மீதான அளவுகடந்த பாசத்தினால் இவ்வாறு செய்தார் என்பதைப் புரிந்துகொண்டேன். இதனால் அவர் மீதான என் பாசம் அதிகரித்தது. பெற்ற குடும்பத்தினருடன் ஒன்றுசேரவேண்டும் என்ற ஆர்வமே எனக்கு ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரிலுள்ள இராமகிருஷ்ணா இயக்கத்திலும் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழை ஆர்வத்துடன் கற்ற திருவாட்டி சரஸ்வதி, பின் இந்தியாவில் அறிவியலில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
“குறிப்பாக, ஆசிரியர் எஸ். கே. ராமனின் கற்பித்தலால் என் தமிழ் ஆற்றல் பெருகியது. இதனால் நான் இன்று வரையிலும் தமிழ் முரசை வாசிக்க முடிகிறது,” என்று அவர் கூறினார்.
சீனப் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு பெற்றவர்களைக் கண்டுபிடிக்கும் யோசனையைத் தன் கணவர் முன்வைத்தபோதும் தான் அதில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார் இரண்டு மகன்களுக்குத் தாயாரான திருவாட்டி சரஸ்வதி.
அடையாள அட்டை பெறுவதில் சிக்கல்
சிங்கப்பூரில் 1952ல் பிறந்த திருவாட்டி தங்கம், பிள்ளைப்பேறு இல்லாத தமிழ்ப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார்.
“என் தந்தை, வேர்க்கடலை விற்பவர். பள்ளிப்பருவத்தில் அவருக்கு உதவி செய்வேன். உயர்நிலை நான்கு வரையில் படித்தேன்,” என்று அவர் கூறினார்.
அல்ஜூனிட் கம்பச் சூழலில் வளர்ந்த திருவாட்டி தங்கம், தன் தந்தை வீட்டில் தங்கியிருந்த மலாய்க்காரர்களோ பள்ளித் தோழர்களோ தன்னைச் சீனப் பெண்ணாகப் பார்க்கவில்லை என்றார்.
14 வயதில் அடையாள அட்டை வழங்கும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்தபோது தன் பிறப்புச் சான்றிதழைத் தங்கம் அவர்களிடம் சமர்ப்பித்தார்.
“அப்போது அந்த அதிகாரி என்னிடம் நீ சீனப் பெண்ணா எனக் கேட்டார். இல்லை என்றேன். என் பிறப்புச் சான்றிதழில் சீனப் பெயர் உள்ளதை அவர் காட்டினார். அதுவரையில் அந்தச் சான்றிதழை நான் படித்ததுகூட இல்லை,” என்று தங்கம் கூறினார்.
“எனக்கு நீல நிற அட்டை தரப்பட்டது. அதில் பிறந்த நாடும் குடியுரிமையும் அறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டது. இளஞ்சிவப்பு அடையாள அட்டையைப் பெற வேண்டும் என்றால் உண்மையான பெற்றோர்களைக் கண்டுபிடிக்கவேண்டும்,” என்று அந்த அதிகாரி என்னிடம் கூறினார்.
இது குறித்துத் தன் வளர்ப்புப் பெற்றோர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் அக்கம் பக்கத்தினர் மூலமாக தங்கத்தின் பெற்றோரை மெக்பர்சன் வட்டாரத்தில் கண்டுபிடித்தனர்.
“பெற்ற குடும்பத்தினர் என்னைக் கண்டு அழுதனர். ஆனால் எனக்கோ அழுகை வரவில்லை. நான் பிறந்த குடும்பத்தைச் சேர்ந்த என் சகோதரி ஒருவர், மலாய்க் குடும்பத்திற்குத் தத்து கொடுக்கப்பட்டார். அவரையும் நான் பின்னர் சந்தித்தேன்,” என்றார் தங்கம்.
வளர்ந்த குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் இன்றி இருந்தது தனிமைப்படுத்தப்பட்டது போன்ற ஓர் உறுத்தலைத் தந்ததாகத் திருவாட்டி தங்கம் கூறினார்.
“ஆயினும் என் பெற்றோர் என்னைப் பராமரித்து, படிக்க வைத்தனர். நான் மகிழ்ச்சியாக வளர்ந்தேன்,” என்றார் அவர்.
செந்தமிழை இன்புறப் பருகியவர்
லிட்டில் இந்தியாவிலும் தமிழ் மொழி நிகழ்ச்சிகளிலும் மனோரஞ்சிதம் பரம், பலராலும் அறியப்பட்டவர். வழக்கமாக சேலை அல்லது சுடிதார் அணியும் திருவாட்டி மனோரஞ்சிதத்தின் முகத்தில் எப்போதும் திருநீற்றையும் புன்சிரிப்பையும் காணலாம்.
1948ல் பிறந்த மனோரஞ்சிதம், மூன்று மகன்களைக் கொண்ட கோவிந்தசாமி தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டார்.
புக்கிட் தீமா ரோடு வழியாக உள்ள நாலாம் கல் வட்டாரத்திலுள்ள நதி ஒன்றுக்குள் தமது வளர்ப்புப் பெற்றோரின் மகன் மூழ்கி மாண்டதால் அவர்கள் மிகவும் மனமுடைந்து போனதாகத் திருவாட்டி மனோரஞ்சிதம் குறிப்பிட்டார்.
“என்னையும் என்னைவிட ஒரு வயது இளையவளான என் சகோதரியையும் அவர்கள் தத்தெடுத்தபோது என் தாயார் சோகத்திலிருந்து மீண்டு இயல்புநிலைக்குத் திரும்பினார்,” என்று திருவாட்டி மனோரஞ்சிதம் கூறினார்.
“என்னைப் பெற்ற அம்மா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பிறகு என் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுப் பத்து நாள்களில் இறந்தார். பிறகு என் அப்பா எங்களை வளர்த்தார்.
எனக்கு அப்போது நான்கு வயது இருக்கும். என் தங்கைக்கு மூன்று வயது இருக்கும். சொந்தத் தந்தை சீனாவுக்குப் போகப்போவதாக என் வளர்ப்பு அம்மாவிடம் தெரிவித்தபோது என்னை வளர்க்க அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்,” என்று அவர் கூறினார்.
“என்னை மீண்டும் தத்தெடுத்துக்கொள்ள சிலர் வளர்ப்புத் தாயாரை அணுகியபோது அவர் அதை உறுதியாக மறுத்தார். என்னைக் கடத்திச் செல்வார்களோ என்ற பயம் அவருக்கு இருந்தது,” என்றார் மனோரஞ்சிதம்.
மிகுந்த பாசத்தைப் பொழிந்த வளர்ப்புப் பெற்றோர் வீட்டுவேலை செய்வதற்குப் பதிலாக படிக்க ஊக்கமளித்தனர்.
“வளர்ப்புத் தாயார் எங்குப் போனாலும் என்னை அழைத்துச் செல்வார். சாலைப் பெயர்களை நான் அவருக்குப் படித்துக்காட்டுவேன்,” என்றார் திருவாட்டி மனோரஞ்சிதம்.
தந்தை எப்போதும் படிக்க ஊக்குவித்ததாகக் கூறும் இவர், பதினாறு வயதை எட்டும்போது ஆடு ஒன்றைப் பரிசாக வளர்ப்புத் தந்தையிடம் கேட்ட பசுமையான நினைவைப் பகிர்ந்தார்
அப்போதைய டச்சஸ் தொடக்கப்பள்ளியில் (Duchess Primary School) படித்த இவர், அங்குக் கற்பித்த திரு செல்லையா என்ற ஆசிரியரை நினைவுகூர்ந்தார்.
“தமிழ்ப் பாடத்தை விரும்பிப் படிப்பேன். தமிழ் வகுப்பில் ஆகச் சிறந்த தேர்ச்சியையும் பெறுவேன். ஒரு பெண்பிள்ளை எவ்வளவு நன்றாகப் படிக்கிறார் என அந்த ஆசிரியர் என்னைச் சான்றாகக் காட்டி, நன்கு படிக்காத சிலரைக் கண்டிப்பார். எரிச்சல் அடைந்த அந்தச் சிறுவர்கள். என்னைச் சீனத்தி, சீனத்தி எனத் திட்டுவார்கள். அதனால் என்னை வகுப்பில் புகழவேண்டாம் என்று ஆசிரியரிடம் கூறுவேன்,“ எனச் சிரித்தவாறு நினைவுகூர்ந்தார்.
மலாயாவில் தமிழ் பட்டப்படிப்பைப் பயிலும்படி ஆசிரியர் ஊக்குவித்தபோதும் சாதாரண நிலைத் தேர்வுக்குப் பிறகு வேலைக்குச் செல்ல விரும்பினார் இவர்.
இருந்தபோதும் திருவாட்டி மனோரஞ்சிதத்தின் தமிழ்க் காதல், தொடர்ந்து நீண்டது. மு.வரதராசன், அகிலன், திரிபுரசுந்தரி, ரமணிச்சந்திரன் ஆகியோரின் நாவல்களைப் படிப்பது இவருக்குப் பிடிக்கும். ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட சஞ்சிகைகளையும் வாய்ப்பு கிடைக்கும்போது படிப்பார். இன்றும் தன் தோற்றத்தைக் கண்டு பலரும் வியந்து கேட்பதாகக் கூறிய திருவாட்டி மனோரஞ்சிதம், சிறிய வயதில் சிலரது அனாவசியக் கேள்விகளால் எரிச்சல்பட்டதாகக் கூறினார்.
தமிழ் எங்கள் முகவரி என்ற வாசகத்தை விரும்புவதாகக் கூறும் மனோரஞ்சிதம், எவர் கேட்டாலும் தாம் இந்தியர் எனப் பதிலளிப்பதாகக் கூறினார்.
“என் வளர்ப்புப் பெற்றோருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். எனவே அவர்களது அடையாளம்தான் எனது அடையாளமும் ஆகும்,” என்றார்.
பழைய சிங்கப்பூர்ச் சமூகத்தின் பின்புலம்
சீனக் குடும்பங்களிலிருந்து தத்தெடுக்கப்பட்ட பெண்களின் கதைகள் குறித்துப் பகுதிநேர சமூக அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றும் டாக்டர் தெரேசா எழுதிய புத்தகம், 2023ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியீடு கண்டது.
சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு முன்னதாகப் பிற இனத்தவரால் தத்தெடுக்கப்பட்ட 15 பெண்களின் வாழ்க்கைக் கதைகளை அது சித்திரிக்கிறது.
“தற்போதைய தத்தெடுப்பு நடைமுறைகளைச் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நிர்வகிக்கிறது. சட்ட ரீதியாக, குழந்தையின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளரின் இணக்கத்துடன், அமைச்சினால் சோதிக்கப்பட்ட பிறகு ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடியும். ஆனால் அப்போதைய சிங்கப்பூர்ச் சமுதாயத்தில் தத்தெடுப்புகள், விதிமுறைகள் இன்றிச் சாதாரணமாக நடைபெற்றன,” என்றார் டாக்டர் தெரேசா.
“பிற இனக் குழந்தைகளைக் குடும்பங்கள் தத்தெடுப்பது முற்காலத்தில் சாதாரணமாக இருந்தது. முதிய சிங்கப்பூரர்கள் இதனை அறிந்துள்ளனர். ஆனால் இளம் தலைமுறையினரில் பலருக்கு இது பற்றித் தெரியாது. இவர்களுக்காக இதனை முறையாக, துல்லியமாக ஆவணப்படுத்த வேண்டும் என விரும்பினேன்,” என்று அவர் கூறினார்.
பல நேரங்களில் தத்தெடுப்பு பற்றி, வளர்க்கப்பட்ட பிள்ளைக்குச் சொல்லப்படாது. உண்மையைச் சொன்னால் பிள்ளைகள், வளர்த்தவர்களைக் கைவிட்டு பெற்றவர்களிடம் சென்றுவிடுவர் என வளர்ப்புப் பெற்றோர்கள் அஞ்சியதாக டாக்டர் தெரேசா கூறினார்.
இந்தப் புத்தகம், ஆய்வுத்துறையில் அல்லாத வாசகர்களுக்கான அவரது முதல் பதிப்பாகும்.
“2004ல் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளைப் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். வெவ்வேறு கலாசாரங்களுக்கு இடையிலான தத்தெடுப்புகளின் மீதான ஆய்வை 2011ல் தென்கிழக்காசிய ஆய்வு நிலையத்தில் ஆய்வுக் கட்டுரையாகப் படைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இக்கட்டுரையை 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜம்பிராஸ் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு பதிப்பித்தது.
“தத்தெடுக்கப்பட்ட பெண் பிள்ளைகள் பலருக்கும் வயது 50க்கும் 90க்கும் இடைப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் இயற்கை எய்திவிட்டார். எனவே என் ஆய்வுகளை முடிக்க விரைந்தேன். சிங்கப்பூரின் ஒட்டுமொத்த நினைவுத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க அங்கத்தை வகிக்கும் இவர்களது அனுபவங்களை ஆவணப்படுத்துவது முக்கியம் எனக் கருதினேன்,” என்றார் டாக்டர் தெரேசா.
வெவ்வேறு கலாசாரங்களுக்கு இடையிலான தத்தெடுப்பு, சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் அன்றைய பரிவு நிலையைக் காட்டுவதை இவர் சுட்டினார்.
பெங்குவின் ஹவுஸ் ரேண்டம் தென்கிழக்காசியா பதிப்பகம் வெளியிட்ட இந்நூல், சிங்கப்பூரின் குறிப்பிட்ட சில புத்தகக் கடைகளில் கிடைக்கிறது.