தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயற்கை எழில் கொஞ்சும் ஒடிசா

5 mins read
c0d9d684-f7f0-42a3-a333-230b93e466e7
ரகுராஜ்பூர் மரபுடைமை சிற்றூருக்குப் பயணம் மேற்கொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் அண்மைய இந்தியப் பயணம், இந்தியாவின் எழில்கொஞ்சும் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவின் மீது சிங்கப்பூரர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவுக்கு அதிபரும் பேராளர்களும் இருநாள் பயணம் மேற்கொண்டனர். இரண்டு மணி நேரம் புதுடெல்லியிலிருந்து விமானம் மூலம் பயணம் செய்து ஒடிசாவை வந்தடைந்தோம். இதுவரை சென்றிராத இடம் ஒருவித ஆர்வத்தை ஊட்டியது என்றாலும் எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமலே சென்றேன்.

திருச்சியின் பழைய விமானம் நிலைய அளவே புவனேஸ்வர் விமான நிலையம் உள்ளது. எளிய ஊரில் மக்கள் தமிழ்நாட்டினர் போலவே இருந்தனர். ஜனவரி மாதம் என்பதால் வெப்பமாக இருக்கும் என்று பலர் கூறியதற்கு மாறாக சற்று மிதமான வெப்பநிலையே இருந்தது.

ஒடிசாவின் இயற்கை அழகும் பழம்பெருமையும் அந்த மாநில மக்களின் திறன்களும் அதிபருடன் ஒடிசா பயணம் மேற்கொண்ட அதிகாரிகள், வணிகப் பேராளர்கள், செய்தியாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

இந்தியாவின் இருதயம் என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் ஒடிசா, கலிங்க நாடு என்ற பேரரசாக புராதன காலத்தில் பெயர் பெற்றிருந்தது. பின்னர் சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக ஒரிசா என்ற பெயரில் விளங்கிய இந்த மாநிலம் தற்போது ஒடிசாவாகி உள்ளது.

கலிங்கத்தின் வரலாற்றுச் சிறப்பு, தொன்மையான ஓடியா மொழியின் தனித்துவம், ஒடிசி நடனத்தின் ஒய்யாரம், ‘புரி’ பழங்கோயில், ‘மகாநதி’ ஆற்றின் அழகு, ‘பராதீபு’ பழந்தீவு, ‘கோனாரகம்’ பகலவன் கோயில், பாரம்பரியச் சிறப்புமிக்க ‘புவனேசுவரம்’, இயற்கையெழில் ததும்பும் ‘கலாம்’ தீவு, பிரமாண்டமான ‘சிலிகா’ ஏரி , ‘உரூர்கேலா’ எக்கு ஆலை, ‘இராகுட்டு’ அணை, ‘கந்தகிரி குகைகள்’ என்று ஒடிசாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர். கட்டக், கொனார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜெகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. அதே போல கொனார்க்கில் உள்ள சூரியனார் கோவிலும் யுனெஸ்கோ உலக மரபுடைமை வளாகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கார் பயணம் மேற்கொண்டு தலைநகர் புவனேஸ்வரிலிருந்து கொனார்க்கை சென்றடையலாம். சீரான சாலைகள் அந்தப் பயணத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் வைத்துள்ளன.

வங்கக் கரையோரம் அமைந்துள்ள இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலமான ஒடிசா ஏறக்குறைய 400 கிலோமீட்டர் நீளத்துக்கு அழகிய கரையோரத்தைக் கொண்டுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களைக் கொண்ட இந்நகரம், வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்த நிலமாகவும் உள்ளது. புத்த சமயத்தில் ஆர்வம் கொண்டோரை அம்மாநிலத்துக்கு ஈர்க்கவும் முனைகின்றனர். புத்த மரபுடைமைத் தலங்களைக் கொண்டுள்ள ஒடிசா, வலுவான இந்து சமய பாரம்பரியத்தோடு ஆரம்பக் கால புத்த சமய மரபையும் கொண்டுள்ளது ஆச்சரியமும் ஆர்வமும் ஈட்டும் அணுகூலம். குறிப்பாக கிழக்கு ஆசிய சுற்றுப்பயணிகளுக்கு உகந்த இந்திய நகரமாக உருவெடுக்கும் ஆற்றலை ஒடிசா பெற்றுள்ளது.

கண்கவரும் கைவினைக்கும் பண்பாட்டுக் கூறுகளுக்கும் பாரம்பரிய கலைகளுக்கும் பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் சுற்றிப் பார்க்கவும், தொழில் தொடங்கவும் வாய்ப்புகளும் வளங்களும் கொட்டிக் கிடக்கின்றன.

இந்தியாவின் வளர்ச்சி இயந்திரங்களாகக் கிழக்கு மாநிலங்களை வருணிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் முதலீடுகளை ஈர்த்து அந்த மாநிலங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்ல கடப்பாடு கொண்டுள்ளார். குறிப்பாக, தனித்துவமிக்கச் சிறப்புகளைக் கொண்ட ஒடிசாவின்மீது தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தைக் கைப்பற்றியிருக்கும் ஆளும் பாஜக ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான, பெருமுயற்சியில் இறங்கியுள்ளது.

உலகின் மூன்றாம் பெரிய பொருளியலைக் கொண்ட நாடாக முன்னேறி வரும் இந்தியாவில் மேலும் முதலீடுகளைச் செய்ய தக்க இடமாக ஒடிசா அமையும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் எண்ணுவதற்கு இவற்றையெல்லாம்விட முக்கியக் காரணம், அதிபர் தர்மன் சண்முகரத்னம் குறிப்பிட்டது போல அந்த மாநில மக்கள் வளர்ச்சியடையவேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருப்பவர்கள்.

சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக்கழகக் கல்விச் சேவைகள் நிறுவனம் ஒடிசாவில் அமைத்து செயல்படுத்தி வரும் உலக திறன் மையம் அம்மாநில மக்களின் நவீன தொழில் திறன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. மின்தூக்கிப் பொறியியல், சேவைத்துறை, விமானப் பொறியியல் என பலதரப்பட்ட துறைகளில் திறன் பயிற்சி அங்கு அளிக்கப்படுகிறது.

அதிபர் தர்மன் அந்த மையத்தின் வளாகத்திற்கு வருகையளித்து மாணவர்களின் பகிர்வுகளைக் கேட்டறிந்தபோது அந்த மாணவர்கள் தங்கள் வளர்ச்சி மீது கொண்டிருந்த வேட்கையும் ஆர்வமும் நிரம்பி வழிவதை உணரமுடிந்தது.

பிளம்பிங் தொழில் செய்யும் தந்தையாரின் தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லவேண்டும், முடிதிருத்தத் தொழிலை அழகுப் பராமரிப்பு, அதுவும் மணப்பெண்களுக்கான பிரத்யேக சேவை வழங்க முனையவேண்டும், விவசாயத் தொழிலில் தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தவேண்டும், பயிற்றுவிப்பாளர் பணியில் மேலும் சிறக்க வழிதேடவேண்டும் என்ற தங்களின் தனித்தனி வாழ்க்கை லட்சியங்களை நோக்கிய மாணவர்கள் ஓரறையில் அன்று கூடியிருந்தனர்.

மையத்தின் தலைமை ஆசிரியராகக் கலந்துரையாடலை வழிநடத்திய திரு டி. தம்பிராஜா, அவரவர்களின் பின்புலத்தை எடுத்துச்சொல்லி அதிபருக்கு அறிமுகப்படுத்தியது கூடியிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியூட்டியது.

ஒடிசாவின் ரகுராஜ்பூர் எனும் கிராமத்திற்குச் சென்றபோது ஓர் ஊரே வாழும் அரும்பொருளகம் போல வண்ணமயமாகப் பொலிவுடன் காட்சியளித்தது.

ஒவ்வொரு வீட்டின் வாசலும் கைவினைப்பொருள்களால் காட்சியளித்தது. ஒவ்வொருவரும் அங்கு கலைஞர்களாம். பட்டாச் சித்ரா ஓவியம், பனை ஓலை ஓவியம் என வெவ்வேறு கைவினைப் பொருள்கள் அங்கு இருந்தது. ஒடிசி நடனம், கொட்டிபுரா நடனம் என பாரம்பரிய நடனத்துக்கும் பெயர் பெற்றது ஒடிசா.

இருமாடிக் கட்டடங்களுக்கு மேல் இல்லை. செம்புரைக்கல் எனும் செங்கல் நிறத்தில் களிமண் போன்ற மூலப்பொருளால் அந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

அன்றிரவு அதிபருக்கு ‘கலா பூமி’ அரும்பொருளகத்தில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

13 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அந்த அரும்பொருளகத்தில் பத்து காட்சிக்கூடங்கள் இருந்தன. மரத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள், கைகளால் செய்யப்பட்ட பிரம்புப் பொருள்கள், இயற்கை பொருள்கள், பட்டுப்பூச்சிகள், பட்டாடைகள், ஜெகந்நாதர் கலாசார கைவினைப் பொருள்கள், கைத்தறி ஆடைகள் போன்றவை அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பாரம்பரிய நடனங்களுக்குப் பெயர் பெற்ற ஒடிசா, இந்த காட்சியகத்தில் ஒன்றை நடனத்துக்காகவும் ஒதுக்கியிருந்தது.

நேரடி இசை வாசிக்கப்பட்டு, வண்ண விளக்குகள் மரங்களுக்கிடையில் அலங்கரிக்கப்பட்டு மரத்தடியில் இயற்கையுடன் ஒன்றிணைந்து ஒடிசாவின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது.

விருந்தோம்பல் சிறக்க, வர்த்தக வாய்ப்புகளைப் பற்றி அறிந்து வந்த பேராளர் குழு இம்மாதம் 28, 29ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உத்கர்ஷ் ஒடிசா: மேக் இன் ஒடிசா கான்கிளேவ் 2025 எனும் வர்த்தக, முதலீட்டாளர் சந்திப்பில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்பதற்கு வழித்தடம் அமைத்துள்ளது.

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபை இந்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு பேராளர் குழுவை வழிநடத்திச் செல்ல இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்