வீ.பழனிச்சாமி, இணை ஆசிரியர்
சிங்கப்பூரில் கொண்டாடப்படும் பெரிய சமயத் திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரத் திருவிழா.
இந்த விழாவைப் பல்லாண்டுகளாக மிகச் சிறப்புடன் கொண்டாடிவரும் ஆலயங்களில் ஒன்று ஈசூன் தொழிற்பேட்டை ‘ஏ’யில் அமைந்துள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம்.
பால்குடம், பால்காவடி, அலகுக்காவடி, ரதக்காவடி எனப் பல்வேறு நேர்த்திக்கடன்களைப் பக்தர்கள் எவ்விதச் சிரமமுமின்றி செலுத்த இவ்வாலயம் ஆண்டுதோறும் மேம்பட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருக்கும் பங்குனி உத்திரத் திருவிழா பற்றிய ஏற்பாடுகளை அறிந்து வர அந்த ஆலயம் நோக்கித் தமிழ் முரசு சென்றது.
அங்கிருந்த மூவர் விழாவின் சிறப்புகளையும் ஏற்பாடுகளையும் விளக்கினர்.
அவர்களில் ஒருவர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே. பாலசுப்பிரமணியம்.
அடுத்தவர், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் காவடி எடுத்துத் தமது நேர்த்திக்கடனைச் செலுத்தி வரும் திரு கே. பரமசிவன் டோன்.
தொடர்புடைய செய்திகள்
மூன்றாமவர், பங்குனி உத்திரத் திருவிழாவில் பல்லாண்டுகளாகத் தவறாது கலந்துகொள்ளும் பக்தர் கே. மணி.
வழக்கமான ஏற்பாடுகளைத் தவிர, இந்த ஆண்டு சிறப்பான ஏற்பாடுகள் சில செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு பாலா, “பொதுவாகக் காவடிகள் ஆலயத்தின் தலைவாசலுக்கு வரும்போது, கூட்ட நெரிசலால் காவடிகளை எளிதில் கோயிலுக்குள் கொண்டு செல்லமுடியவில்லை என்பது காவடி ஏந்தும் பக்தர்களின் குறைகூறலாக இருந்து வருகிறது.
தனித்தனித் தடங்கள்
“இம்முறை அந்தக் குறையைப் போக்கும் நோக்கில், மூன்று தடங்கள் (லேன்) அமைக்கப்படும். காவடிகளுக்கு எனத் தனித் தடம், பால்குடம் ஏந்திவரும் பக்தர்களுக்காக மற்றொரு தடம், பொதுவான பக்தர்களுக்காக இன்னொரு தடம் அமைக்கப்படும்.
“இதைத் தவிர, நடக்க இயலாதவர்களும் சக்கர நாற்காலியில் வருபவர்களும் ஆலயத் தலைவாசலில் இருக்கும் தொண்டூழியர்களை அணுகினால் நிச்சயம் உதவி கிடைக்கும்.
வெள்ளி ரத ஊர்வலம்
“மேலும் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் வெள்ளி ரத ஊர்வலம், திருவிழாவுக்கு முந்தைய நாள் நடைபெறும்.
ஆனால், இந்த ஆண்டு இரு நாள்கள் முன்னதாக, சனிக்கிழமை, மார்ச் 28ஆம் தேதி, ரத ஊர்வலம் நடைபெறும். ஈசூன் வட்டாரத்தில் வழக்கமான எட்டு இடங்களில் நின்று ரதம் பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்.
“எங்கள் தொண்டூழியர்கள் திருவிழா தொடர்பான இதர ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப் போதிய நேரம் தேவைப்படுகிறது என்பதால் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
“மேலும் வார நாள்களில் ரத ஊர்வலத்தை வைத்தால் வேலை முடிந்து, வீட்டுக்கு வந்து ரதக் காணிக்கைகளைச் செலுத்த சிரமமாக உள்ளது என்று பக்தர்கள் கடந்த ஆண்டுகளில் கருத்து தெரிவித்ததாலும் இந்த மாற்றத்தைச் செய்துள்ளோம்,” என்று திரு பாலா விவரித்தார்.
ஏப்ரல் 1ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குப் பால்குட நேர்த்திக் கடன்களைச் செலுத்தத் தொடங்கலாம். அதன் பின்னர் அடுத்தடுத்த நேர்த்திக் கடன்களைப் பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் செலுத்துமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு கடைசிக் காவடி பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு அடுத்தநாள் அதிகாலை 2.30 மணிக்குத்தான் கோயிலைச் சென்றடைந்தது. இது, அனுமதிக்கப்பட்ட காலவரம்பை மீறிவிட்டது. அதனால், ஆலயம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் விளக்கமளிக்க வேண்டியிருந்தது.
எனவேதான், பக்தர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் காவடியை ஆலயத்தில் செலுத்துமாறு ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
‘கான்ஃபெட்டி’ கொண்டாட்ட வெடி
கடந்த சில ஆண்டுகளாகக் காவடி சுமப்பவருடன் வரும் ஆதரவாளர்கள், அவ்வப்போது ‘கான்ஃபெட்டி’ (Confetti) எனும் கொண்டாட்ட வெடியைப் பயன்படுத்துகிறார்கள்.
அதிலிருந்து வெளியாகும் காகிதத் துகள்கள் சாலையெங்கும் சிதறிக் கிடக்கும். தரையில் ஒட்டிக்கொள்வதால், அதை அவ்வளவு எளிதில் சுத்தப்படுத்த முடியாது.
அடுத்த நாள் அதைச் சுத்தப்படுத்தி, மூடப்பட்ட சாலையை மீண்டும் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். இது தங்களுக்கு மற்றொரு சவாலாக அமைந்துவிட்டதாக ஆலய நிர்வாகத்தினர் கூறினர்.
ஆகவே, காவடி ஆதரவாளர்கள் கான்ஃபெட்டிகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் கனிவுடன் கேட்டுக்கொள்கின்றனர்.
கடந்த 42 ஆண்டுகளாகக் காவடி எடுத்துவரும் திரு டோன், “காவடி ஏந்துவோருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளனர். நாம் அவற்றை முறையாகப் பின்பற்றினால், யாருக்கும் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது,” என்று கருத்துரைத்தார்.
பங்குனி உத்திரத் திருவிழா பக்தரான திரு மணி கூறுகையில், “நேர்த்திக்கடன் செலுத்துவோர், பக்தர்கள் என அனைவருக்கும் தேவையான பல ஏற்பாடுகளை விழா ஏற்பாட்டாளர்கள் செய்துகொடுக்கிறார்கள். விழாவில் பங்குபெறும் நாமும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், எவ்விதச் சிரமமும் இருக்காது,” என்று குறிப்பிட்டார்.
“ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது. இரு கைகளையும் சேர்த்துத் தட்டினால், அதாவது ஒத்துழைப்பு கொடுத்தால், விழா சிறப்பாக அமையும். எந்தக் காரணத்தைக் கொண்டும் விழாவின் புனிதத்தன்மை கெடாமல் இருக்க அனைவரும் பங்களிக்க வேண்டும்.
“மேலும், பெரியவர்களாகிய நாம் செய்வதை நமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் முறையற்றதைச் செய்தால் அந்தத் தவறு அடுத்த தலைமுறைக்கும் தொடரும் என்பது என் கருத்து,” என்றார் திரு மணி.
பொதுவாக, கடைசிக் காவடி ஆலயத்துக்கு இரவு 10.30 மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும் என்று விழா உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயன்றவரை அதனை நடைமுறைப்படுத்த ஆலய அதிகாரிகள் முயல்கிறார்கள்.
எல்லாத் தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு தேவை
பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவோர் ஒத்துழைப்பின்றி அந்த இலக்கை எட்ட இயலாது. மேலும், அக்கம்பக்கத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் உள்ளன. வாரநாளில் விழா நடைபெறுவதால், அடுத்த நாள் வேலைக்கும் பள்ளிக்கும் செல்பவர்களுக்கு இரவுநேரத்தில் சிரமம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆலயத்தினர் கண்ணும் கருத்துமாக உள்ளனர். நம்மைச் சுற்றியுள்ள பிற இனத்தவரின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கின்றனர்.
மேலும் விழா முடிந்து, சுவாமி விக்கிரகங்கள் அதனதன் இடத்தில் வைக்கப்பட வேண்டும். ஆலயத் தொண்டூழியர்கள் கோயிலைக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். இப்படியாக, விழா முடிந்த பின்னரும் பல வேலைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தமிழ் முரசிடம் விளக்கினர்.
எங்கும், எதுவும் குறைவின்றிப் பங்குனி உத்திரப் பெருவிழா நிறைவாக நிகழ்ந்திட அனைவரும் ஒத்துழைப்போம்!

