கொவிட்-19 தொடர்பு தடமறியும் அதிகாரிகளிடம் நண்பருடனான சந்திப்புகளை மறைத்த இல்லத்தரசிக்கு 5 மாத சிறை

கொவிட்-19 தொடர்பு தடமறியும் அதிகாரிகளிடம் நண்பருடனான சந்திப்புகளை மறைத்த இல்லத்தரசிக்கு 5 மாத சிறை

2 mins read
4335fe0b-a08b-4ecc-ac58-25983d3cd2df
கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஒ  பீ ஹியோக் எனும் அந்த மாதுக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது. அந்த மாதத்தில் தனது நண்பரான ஆடவர் ஒருவரை பலமுறை சந்தித்ததை அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 பரவத் தொடங்கிய காலகட்டத்தில் உருவான சாஃப்ரா ஜூரோங் குழுமத்தின் அங்கமான இல்லத்தரசி ஒருவருக்கு ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு தடங்களைக் கண்டுபிடிப்பதன் தொடர்பில் வேண்டுமென்றே தகவல்களை வழங்காததால் அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஓ பீ ஹியோக் எனும் அந்த மாதுக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது. அந்த மாதத்தில் தனது நண்பரான ஆடவர் ஒருவரை பலமுறை சந்தித்ததை அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை.

65 வயதான அந்த மாது இந்தத் தகவலை வெளியிட்டால், 71 வயதான திரு லிம் கியாங் ஹோங் எனும் அந்த ஆடவருடன் தமக்குத் 'தொடர்பு' இருப்பதாக பலரும் நினைக்கக்கூடும் என அஞ்சி அந்தத் தகவலை மறைத்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி திரு லிம்முக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆனால், உரிய ஆதாரங்களுடன் திரு லிம்மிடம் விசாரணை செய்தபோது அவர்களது சந்திப்பு குறித்த தகவல் வெளியில் வந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சாஃப்ரா ஜூரோங்கில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்துகொண்டவர்களில் 47 பேருக்கு அப்போது கிருமித்தொற்று ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

கிருமித்தொற்று அறிகுறிகள் தோன்றியதையடுத்து திருவாட்டி ஓ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.

தொடர்புகளின் தடமறிவதன் தொடர்பில் அதிகாரிகள் பலமுறை விசாரித்தபோதும் திருவாட்டி ஓ, மற்ற விவரங்களை அளித்தபோது திரு லிம்மை சந்தித்தது பற்றி குறிப்பிடவே இல்லை.

உண்மை வெளிவந்த பிறகு மார்ச் 8ஆம் தேதி சுகாதார அமைச்சின் விசாரணை அதிகாரிகளிடம் லிம்மைச் சந்தித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இருவரும் பொதுவாக செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தித்துக்கொண்டதை இருவரது குடும்பத்தாரும் அறிய வேண்டாம் என நினைத்ததால் அந்தத் தகவலை மறைத்ததாக திருவாட்டி ஓ குறிப்பிட்டார்.

தற்போது $15,000 பிணையில் இருக்கும் திருவாட்டி ஓ, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது. இத்தகைய குற்றத்துக்கு ஆறாண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்