தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் தொண்டூழியம்

8 mins read
1783b2c4-cc36-477f-b8e1-e4116b49f74c
கோகுலராம் குடும்பத்தினர். - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 7

பரபரப்பான வாழ்க்கைச் சூழலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் வேலை, பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் அவரவர் வேலையைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

குடும்பத்தில் பிளவு ஏற்பட இது காரணமாகிவிடுகிறது. வைத்த கண் வாங்காமல் திறன்பேசித் திரைகளைப் பார்க்கும் போக்கும் குடும்பங்களில் உள்ளது.

இருப்பினும் சிலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாகப் பொழுதைக் கழிப்பதுடன் நின்றுவிடாமல் உன்னதத் தொண்டூழியப் பணியில் குடும்பமாக ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு தொண்டூழியத்தில் ஈடுபடுவதால் குடும்ப உறவு மேம்படுவதாகவும் மிகுந்த மனநிறைவு கிடைப்பதாகவும் கூறும் குடும்பங்களின் அனுபவங்களை அறிந்து வந்தது தமிழ் முரசு.

அன்னை காட்டிய வழியில் 5 பிள்ளைகள்

1996ஆம் ஆண்டில் திருவாட்டி செல்வராணி, 52, வித்திட்ட தொண்டூழிய மனப்பான்மை 27 ஆண்டுகள் கழித்தும் அவரது குடும்பத்தில் நிலைத்து நிற்கிறது. அவரது வழியில் பிள்ளைகள் ஐவரும் தொண்டூழியத்தைத் தங்களின் வாழ்வில் ஒரு முக்கிய நடவடிக்கையாக வைத்துக்கொண்டனர்.

இல்லாதவர்களுக்கு முடிந்தவரை கைகொடுத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என இலக்கு கொண்டுள்ள திருவாட்டி செல்வராணி, தொண்டூழியத்தில் இறங்கியபோது மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருந்தார்.

புக்கிட் பாஞ்சாங் இளையர் கட்டமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த இவர், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போன்றவற்றில் முதலில் ஈடுபட்டார்.

தொண்டூழியத்திற்கு நேரம் ஒதுக்கியபோதெல்லாம் மூன்று பிள்ளைகளையும் கூடவே அழைத்துச் சென்ற திருவாட்டி செல்வராணிக்கு அவரின் கணவர் பெருந்துணையாக இருந்து ஆதரவு வழங்கினார்.

2018ஆம் ஆண்டில் புக்கிட் பாஞ்சாங் சமூக நிலைய மேலாண்மைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற திருவாட்டி செல்வராணி, சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தோடு இணைந்து வாசிப்புத் திட்டங்களைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

தொண்டூழியத்தின்மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டதோடு, பொறுமை, பிறரிடம் எவ்வாறு உரையாடுவது போன்ற திறன்களைக் கற்றுக்கொண்டதாக திருவாட்டி செல்வராணி பகிர்ந்துகொண்டார்.

மார்பகப் புற்றுநோய்க்காக ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஏற்பாடு செய்த நிகழ்வுகளும் தம் மனதில் பசுமரத்தாணிபோலப் பதிந்த தருணங்கள் என்று அவர் நினைவுகூர்ந்தார்.

தொண்டூழியத்தில் முன்மாதிரியாக இருக்கும் தம் தாயாரைப் பிரதிபலிக்கும் விதத்தில் மூத்த மகள் 28 வயது ரோஸ்பிரியா சிதம்பரம் 15 வயதில் தொண்டூழிய உலகில் அடியெடுத்து வைத்தார்.

குடும்பத்தோடு இணைந்து பல தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர், தற்போது இளையர்கள் பலரும் தொண்டூழியம் புரிய முன்வருகின்றனர் என்றார்.

முனைவர் பட்டம் பயின்று வரும் திருவாட்டி செல்வராணியின் இரண்டாவது மகனான 27 வயது அருண்ராஜ் சிதம்பரம், தமது 15 வயதில் தொண்டூழியத்தில் இறங்கினார். அக்காவையும் அம்மாவையும்போல தாமும் சமுதாயத்திற்குத் திருப்பி தர வேண்டுமென்ற முனைப்பில் கடந்த 12 ஆண்டுகளாக இவர் தொண்டூழியராக இருந்து வருகிறார்.

நேரத்தை நன்கு வகுத்து வாரத்தில் ஒருநாளாவது தொண்டுக்கு அர்ப்பணித்து வருகிறார் திரு அருண்ராஜ். படிப்பு ஒருபுறம் தனது நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டாலும் சமூகத் தொண்டாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே அவர் நொடிப்பொழுதும் துவண்டுபோகாமல் முழுவீச்சாக அதில் இறங்கி வருகிறார்.

வீட்டில் மூன்றாவது பிள்ளையான திரு உதயநிதி சிதம்பரம், 21, அண்ணன் அருண்ராஜுடன் கைகோத்து சமூக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறார். பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயின்று வரும் உதயநிதி, பள்ளி விடுமுறையின் போது ரத்த நன்கொடை, பொது இடங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றுதல், வசதி குறைந்தோருக்கான உணவு இயக்கம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அவர் தற்போது தம் அண்ணனோடு இணைந்து ‘ஃபுட் ரெஸ்கியூ (Food Rescue)‘ எனும் திட்டத்தை வழிநடத்தி வருகிறார்.

வீட்டின் கடைக்குட்டியான குமாரி திரெஷபிரியா சிதம்பரம், 18, மூன்று ஆண்டுகளுக்குமுன் தொண்டூழியத்தில் ஈடுபடத் தொடங்கியபோதும் அதில் மிகுந்த நாட்டம் கொண்டுள்ளார்.

தம் வயது நண்பர்கள் பலர் பள்ளிகளில் செயல்படும் சமூக ஈடுபாட்டுத் திட்டத்திற்காக மட்டுமே தொண்டில் ஈடுபடுகிறார்கள் என்று கூறிய அவர், குடும்பப் பிணைப்பை வலுப்படுத்த தொண்டு ஒரு வேராக நிற்கிறது என்றார்.

வாழ்க்கைமுறையாக மாறிய தொண்டூழியம்

கோகுலராம் நாயுடு தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். தம்பதியர் இருவரும் தொண்டூழியத்தின் முக்கியத்துவத்தைப் பிள்ளைகளிடம் விதைத்து, கடந்த 18 ஆண்டுகளாக தொண்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமணமாகி ஹவ்காங் வட்டாரத்திற்குக் குடியேறிய இவர்கள், வீட்டின் அருகில் இறைச்சி வாட்டுதலுக்கு இடத்தைப் பதிவுசெய்தபோது, இக்ஸோரன் (Ixoran) குடியிருப்பாளர் தொடர்புக் கட்டமைப்பிலிருக்கும் ஒருவர் திரு கோகுலராமின் மனைவியான 49 வயது திருவாட்டி ராஜேஸ்வரி சிங்காரத்தைக் குடியிருப்பாளர் தொடர்புக் கட்டமைப்பில் சேரும்படி வேண்டினார்.

செயலாளராகச் சேர்ந்த திருவாட்டி ராஜேஸ்வரி மாதம் ஒருமுறை அங்கு நடக்கும் கூட்டங்களுக்கு அறிக்கைகள் மட்டும் எடுத்து வந்தார். தொண்டூழியத்தைத் தன்னுடைய குடும்பத்திற்கு அறிமுகப்படுத்திய திருவாட்டி ராஜேஸ்வரி, தன் கணவரையும் அதில் சேர்க்க முனைந்தார்.

தம் மனைவியைப் போலவே திரு கோகுலராம் நாயுடுவும் ஓர் அரசாங்க ஊழியர். இதன் மூலம் பிற குடியிருப்பாளர்களுடன் பழக வாய்ப்பு அதிகம் கிடைத்தது என்ற 52 வயதான திரு கோகுலராம் நாளடைவில் தொண்டூழியத்தில் இன்பம் கண்டார்.

முழுமூச்சாக இதில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கிய திரு கோகுலராம், தம் மனைவியோடு அனைத்து சமூக நிகழ்வுகளுக்கும் குடியிருப்பாளர் தொடர்புக் கட்டமைப்பு நிகழ்வுகளுக்கும் பிள்ளைகளை அழைத்துச்சென்றார்.

பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியதும் பெற்றோர் இருவரும் தொண்டூழியத்தை அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வைத்துக்கொண்டனர்.

திரு கோகுலராம், சி யுவான் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவில் சேர்ந்தார். தற்போது இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவராக இருக்கும் அவர், பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி என அனைத்து இந்தியப் பண்டிகை சார்ந்த நிகழ்ச்சிகளையும் மனைவியுடன் சேர்ந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்.

தற்போது 20 வயதாகும் அவர்களின் மகள் லுவேதா டிரிஷ் நாயுடு, தன்னுடைய 15 வயதில் தொண்டூழியத்தில் பெற்றோருடன் கைகோத்தார். தம் அண்ணனுடன் சிறு வயதிலிருந்தே பெற்றோரின் தொண்டூழியப் பணியைப் பார்த்து வளர்ந்த இவர், தனது முதல் தொண்டூழிய அனுபவம் சவால்மிக்கதாக இருந்ததை நினைவுகூர்ந்தார்.

அண்ணன் லண்டனில் படித்து வந்தாலும் ஒவ்வொரு விடுமுறையிலும் தவறாது சிங்கப்பூருக்கு வரும்போதெல்லாம் குடும்பத்தோடு தொண்டூழியத்தில் மூழ்கிவிடுகிறார்.

தொண்டு தங்களின் வாழ்க்கைமுறையாக மாறிவிட்டது என்ற திரு கோகுலராம், “வாரயிறுதி நாள்களிலும் எங்களுக்கு ஓய்வெடுக்க நேரம் இருக்காது. ஆனால் எங்களுக்குள் நல்ல குடும்பப் பிணைப்பை ஏற்படுத்தவும், எங்களின் பந்தத்தை வலுப்படுத்தவும் தொண்டூழியம் வழிவகுக்கிறது.” என்று கூறினார்.

தொண்டூழியப் பண்பை விதைக்க வேண்டும்

2014 நடுப்பகுதியில் வேலைவாய்ப்புகளுக்காக இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த குல்கர்னி குடும்பத்தினரின் வாழ்வில் தொண்டூழியம் முக்கியப் பங்காற்றுகிறது.

மூன்று பேர் கொண்ட இந்தக் குடும்பத்தில் குடும்பமாக நேரத்தைச் செலவு செய்வது வழக்கமான ஒன்று. ஒன்றிணைந்து தொண்டூழியத்தில் இறங்குவது இவர்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

2015ல் உள்துறைக் குழு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட இவர்கள் மஞ்சள் நாடா திட்டத்தின் சாவடியைக் கண்டார்கள்.

கைதிகளின் குடும்பங்கள் துன்பப்படும் படத்தைக் கண்ட 45 வயது மக்கரந்த் குல்கர்னியும் அவரின் மனைவி மாள்விகா மக்கரந்த் குல்கர்னியும், 45, அதில் சேர விரும்பினர்.

குடும்பமாக இவர்களின் தொண்டூழியப் பயணம் எட்டு ஆண்டுகளுக்குமுன் தொடங்கியது. கைதிகளின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் சாலைக் காட்சிகள், நிதித் திரட்டு, சமூகத்தைச் சென்றடையும் திட்டங்கள், உடற்குறையுள்ள சிறுவர்களின் இல்லங்களுக்குச் செல்வது, வீடு புதுப்பிப்புத் திட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்று வருகின்றனர்.

ஒன்றாக ஈடுபட்டால் குடும்பம் நெருக்கமாகும் என நம்பும் இவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் இருக்கும் காரணத்தால் தனியாக தவிக்கும் வயதான ஓர் ஆடவருக்கு உதவிக்கரம் நீட்டும் விதத்தில் அவருடன் நேரத்தைச் செலவிட்டு நிதி ஆதரவு அளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியதை மறக்க முடியாத நிகழ்வாகப் பகிர்ந்தனர்.

பெற்றோருடன் கைகோத்த இவர்களின் மகள் மிருணால் மக்கரந்த் குல்கர்னி, 18, தொண்டூழியம் புரிவது தனக்கு மனநிறைவு அளிப்பதாக கூறினார். தன் வயதில் இருக்கும் இளையர்கள் தொண்டூழியத்தில் நாட்டம் காட்டுவதில்லை என்று பகிர்ந்த குமாரி மிருணால், பெற்றோர் பிள்ளைகளுக்கு அப்பண்பை விதைத்தால்தான் பிள்ளைகளுக்கும் அதில் ஈடுபாடு வளரும் என்றார்.

குடும்பத்தில் ஒருவராகக் கருதும் தொண்டூழியம்

22 ஆண்டுகளுக்குமுன் திருமணமான 46 வயது குன்னத்தூர் கிருஷ்ணா ஸ்ரீராமும் 45 வயது முடும்பை வசந்தரங்கன் ஸ்ருதியும் இணைந்து தொண்டூழியத்தில் இன்பம் காண்கிறார்கள். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தொண்டூழியத்தில் ஈடுபட்டுவரும் இவர்கள், சமுதாயத்திற்குத் திருப்பித் தர வேண்டும் என்பதற்காக தொண்டூழியர்களாக இருக்கிறார்கள்.

பிறருக்கு உதவும்போது தம் சொந்த பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதுபோல உணர்வதாகக் கூறும் திருவாட்டி ஸ்ருதியும் திரு ஸ்ரீராமும் தொண்டூழியத்தின் மூலம் ஒருவர் தம் துணையை மேலும் நன்று புரிந்துகொள்ளலாம் என்றனர்.

கொவிட்-19 நோய்ப்பரவலின்போது இருவருக்கும் வசதி குறைந்தோருக்கு உதவ வேண்டுமென்ற மனப்பான்மை தலைதூக்கியது. தொண்டூழியத்தில் இறங்குவதற்குப் பல வழிகளைத் தேடிய இவர்கள், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டூழிய நோக்குநிலைக்குச் சென்றிருந்தார்கள்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின்கீழ் இயங்கும் உடற்குறையுள்ளோர் இல்லத்தில் தங்களைத் தொண்டூழியர்களாகப் பதிவு செய்தனர். உடற்குறையுள்ளோருக்கு உணவூட்டுவது, அவர்களுடன் விளையாடுவது போன்ற நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிலிருந்து இந்த இணையர் ஒவ்வொரு வாரமும் இந்த உன்னத நோக்கத்திற்கு நேரம் ஒதுக்கி வருகிறார்கள். நோய்த்தொற்றின்போது தங்களைப் போன்ற பிற குடும்பங்களுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை இலவசமாக வழங்கினார்கள்.

பிற குடும்பத்தினரையும் தொண்டூழியத்தில் ஈடுபடுத்த முனையும் இவர்கள், “நாம் படிப்படியாக தொண்டூழியத்தில் இறங்கலாம். நிதியுதவி அளிப்பதோடு நின்றுவிடாமல் நம் நேரத்தைப் பயனாளிகளோடு செலவு செய்தால் மனத்திற்கு நிறைவாக இருக்கும்,” என்றனர்.

தன்னடக்கத்தைக் கற்பித்த தொண்டூழியம்

வழிப்பாடு காரணமாக 46 வயது மேகநாதன் இல்லாதவர்களுக்கு உணவளிக்கத் தொடங்கினார். அதிலிருந்து துவங்கிய இவரது தொண்டூழியப் பயணத்தில் அவரின் 40 வயது மனைவி ஷர்மிணியும் இணைந்துகொண்டார்.

இருவரும் கடந்த மே மாதத்திலிருந்து தொண்டுபுரிகின்றனர். மூன்று ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோராக உள்ள இவர்கள், வேலைக்குச் சென்று பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதோடு தங்களால் முடிந்தவரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொண்டூழியம் புரிந்து வருகின்றனர்.

தொண்டூழியர் ஆக வேண்டும் என்ற விருப்பம் தமக்குள் பல நாள்களாக இருந்துவந்தபோதும் அதற்கான தக்க நேரம் அமையாத திரு மேகநாதனுக்கு, சன்லவ் இல்லத்தில் உணவு விநியோகம் செய்தபோது முழுமூச்சாக அதில் இறங்குவதற்கு வாய்ப்பு கிட்டியது.

உணவு விநியோகம், உணவு ஆதரவுத் திட்டம், பொருள் நன்கொடை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் இந்த இணையர், ஒவ்வொரு முறையும் பயனாளி நன்றி நல்கும்போது தங்களின் மனம் நெகிழ்வதாகப் பகிர்ந்துகொண்டனர்.

தொண்டூழியம் தங்களுக்குத் தன்னடக்கத்தைக் கற்றுத் தந்ததாகக் கூறிய இவ்விணையர், வாழ்வில் தாங்கள் எந்த அளவிற்கு நற்பேறு பெற்றுள்ளோம் என்பதையும் நினைத்துக்கொண்டனர். தொண்டூழியத்தில் பலவகை இருந்தாலும் இல்லாதவர்களை நேரில் கண்டு அவர்களுக்கு உதவுவது ஒரு தனி மகிழ்ச்சி என்றனர்.

பிள்ளைகளின் பழைய துணிமணிகள், விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றைக் கொடையளிக்கும் திரு மேகநாதன் இணையர், தங்களின் மூன்று மகன்களிடமும் தொண்டு மனப்பான்மையை விதைத்துள்ளனர்.

தொண்டுபுரியும் நேரங்களில் 14 வயதாகும் மூத்த மகன் லோஹித்தைக் கூடவே அழைத்து செல்வது மட்டுமன்றி ஒன்பது, எட்டு வயதிலிருக்கும் மற்ற இரண்டு மகன்களும் பெற்றோருக்கு உணவு விநியோகத்திற்கும் நன்கொடைக்கும் உதவி வருகின்றனர்.

உதவிபெறும் வசதி குறைந்த குழந்தைகளைத் தங்கள் பிள்ளைகளும் பார்த்தால் அவர்களின் வயதில் இருக்கும் சிறுவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதை உணர முடியும் என்று நம்பும் திரு மேகநாதனும் திருவாட்டி ஷர்மிணியும் வாழ்நாள் முழுவதும் தொண்டுபுரியும் முனைப்புடன் உள்ளனர்.

கொள்ளைநோய்க்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டில் 20% அதிகமாகக் கிட்டத்தட்ட 5,000 இளம் சிங்கப்பூரர்கள் தொண்டூழியத்தில் ஈடுபட்டதாக தேசிய இளையர் மன்றத் தொண்டூழியப் பிரிவான சிங்கப்பூர் இளையர் படை தெரிவித்திருந்தது.

இவ்வாண்டுக்குள் சிங்கப்பூரில் தொண்டூழிய விகிதத்தை 70 விழுக்காட்டுக்கு அரசாங்கம் உயர்த்தும் இலக்கில் உள்ள நிலையில் இந்த உன்னதக் குறிக்கோளை அடைவதற்குக் குடும்பத் தொண்டூழியம் வழிவகுக்கும் என்று நம்பலாம்.

குறிப்புச் சொற்கள்