மாறும் காலத்துக்கேற்ப மலரும் நாளிதழ்

இன்றைய மின்னிலக்கத் தலைமுறையினர் விரல்நுனியில் உலகநடப்புகளை அறிந்துகொள்கிறார்கள். செய்தித்தாளின் அச்சுப் பிரதியைப் புரட்டிப் படிக்கும் பழக்கம் அவர்களுக்கு அதிகம் இல்லை என்பதே உண்மை நிலை. இருப்பினும் செய்தித்தாளின் அச்சுப் பிரதிகளை விநியோகம் செய்து விற்பனையை ஒருகாலத்தில் தூக்கி நிறுத்திய விற்பனையாளர்களின் பங்கு இன்றியமையாதது. இவ்வாறு செய்தித்தாள் தளத்தின் வளர்ச்சி உள்பட பல்வேறு அம்சங்களை ஆராய்கிறது தமிழ் முரசு. 

செய்தித்தாள் வாசத்தில் வளர்ந்தவர்

உயர்நிலை ஒன்றில் பயின்ற காலத்திலிருந்து தந்தையின் செய்தித்தாள் விநியோகத் தொழிலுக்கு உதவி வந்தவர் கண்ணு கபிலன், 37.

பள்ளி விடுமுறையிலும் மதிய பள்ளி தொடங்கும் நாள்களிலும் காலை 7 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு கஃப் ரோடு, சிராங்கூன் ரோடு ஆகிய சாலைகளில் செய்தித்தாள்களை விற்பனை செய்து வந்தார் திரு கண்ணு. 

அப்போது சிறுவனாக இருந்ததால் அன்றாடம் காலையில் செய்தித்தாள் கட்டுகள் விற்பனையாளர்களிடம் விநியோகிக்கப்படும் இடத்திலேயே நின்று செய்தித்தாள் இணைப்புகளைச் செருகுதல், பொதுமக்களிடம் விற்பனை செய்தல் போன்ற வேலைகளில் தந்தைக்கு உதவியதாக நினைவுகூர்ந்தார் திரு கண்ணு. 

“2000களில் பொதுமக்களுக்கு ஒவ்வொரு நாளும் விற்பனையான பிரதிகள், வார நாள்களில் 100 வெள்ளி வரையிலும் வார இறுதியில் அதிகபட்சம் 200 வெள்ளி வரையிலும் வருமானம் ஈட்டித் தந்தன,” என்று கூறினார் திரு கண்ணு. 

இரண்டு இளைய சகோதரர்களுக்கும் ஓர் இளைய சகோதரிக்கும் மூத்த அண்ணனான கண்ணு, உயர்நிலைக் கல்வி முடித்து தொடக்கக் கல்லூரியில் சேர்ந்தபோது மிதிவண்டியில் வாடிக்கையாளர் வீடுகளுக்குச் செய்தித்தாள்களை விநியோகிக்க ஆரம்பித்தார். 

“ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரை சிராங்கூன் பகுதியில் உள்ள சில வீவக குடியிருப்புப் பகுதிகளில் செய்தித்தாள்களைப் போட்டுவிட்டு வீட்டிற்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு கல்லூரிக்குச் செல்வேன். என் நண்பர்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்கும் பூங்காவில் மெதுவோட்டத்திற்கும் சென்றபோது நான் இதன் மூலம் உடற்பயிற்சி செய்து வந்தேன்,” என்று புன்னகை பூத்தார் கண்ணு. 

தொடக்கக் கல்லூரி முடித்தபின் ஓட்டுநர் உரிமம் பெற்ற கண்ணு, பல ஆண்டுகளாக மோட்டார் வாகனத்தில் செய்தித்தாள்களை விநியோகித்து வருகிறார். 

“வீவக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் செய்தித்தாளைப் போடும்போது நேரத்தை மிச்சப்படுத்த மின்தூக்கியைப் பயன்படுத்த மாட்டேன். மின்தூக்கிக்காக காத்திருக்கும் நேரத்தில் ஒரே ஓட்டத்தில் படிகளின் வழியாகச் சென்று பல வீடுகளுக்குக் கொடுத்துவிடலாம்,” என்று கூறினார் கண்ணு. 

அவ்வகையில் கொவிட்-19 காலத்தில் வீவக வீடுகளின் அஞ்சல்பெட்டியில் செய்தித்தாள்களைப் போட அரசாங்கம் அனுமதித்தது மிகுந்த உதவியாக இருந்ததாகவும் நினைவுகூர்ந்தார் திரு கண்ணு. 

அதிகபட்சமாக காலை 7 மணிக்குள் செய்தித்தாளை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்காவிட்டால் சிலர் புகார் அளித்து விடுவார்கள். சிலர் செய்தித்தாள் விநியோகச் சேவையை நிறுத்திவிடுவர். அதனால் இத்தொழிலில் உள்ள அனைவரும் முடிந்தளவு விரைவாக விநியோகிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக திரு கண்ணு தெரிவித்தார். 

1993ஆம் ஆண்டு தம்முடைய தந்தை தொடங்கிய  இத்தொழிலை, தற்போது கண்ணுவும் இணைந்து கவனித்து வருகிறார். காணொளி ஒளிப்பதிவுத் துறையில் தன்னுரிமை தொழிலராகப் பணிபுரியும் கண்ணு, கணக்கு வழக்கு தவிர மற்ற அனைத்து வேலைகளையும் தந்தையுடன் இணைந்து செய்து வருகிறார். 

“இளம் வயதிலிருந்தே தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ் என செய்தித்தாள்களின் வாசத்தோடு வளர்ந்த நான், பொதுமக்கள் செய்தித்தாள்களை வாங்கி வாசிக்கும் வரை குடும்பத் தொழிலைத் தொடர விரும்புகிறேன்,” என்று கூறினார். 

வீழ்ந்த விற்பனை

கடந்த 30 ஆண்டுகளாக இத்தொழிலை நடத்திவரும் கண்ணுவின் தந்தை திரு கபிலன் அய்யாக்கண்ணு, 57, “கடந்த 20 ஆண்டுகளில் விற்பனை 70% சரிந்துவிட்டது. வீடுகள், கடைகள், விடுதிகள் என அனைத்து இடங்களிலுமே விற்பனை எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது,” என்று கூறினார். 

2000களில் ஹோட்டல்களுக்குச் சராசரியாக ஒரு நாளில் 200 செய்தித்தாள்கள் விற்பனையாகிக்கொண்டிருந்தன. தற்போது 40 பிரதிகளே விற்பனை ஆகின்றன. பல ஹோட்டல்களில் செய்தி செயலிகளைக் கொண்ட ‘ஐபேட்’ சாதனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இன்றைய மின்னிலக்க உலகில் வாடிக்கையாளர்களும் அதையே விரும்புகின்றனர் என்று திரு கபிலன் தெரிவித்தார். 

இதுகுறித்து ஷங்ரிலா ஹோட்டலின் தலைமை வரவேற்புச் சேவை அதிகாரி ராஜகோபால் ராஜகுமார் கூறுகையில், “வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் செய்தித்தாளை வாங்கி வாசித்துச் செய்திகளைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. பெரும்பாலானோர் இணையம் வழி செய்திகளை வாசிக்கின்றனர். வாடிக்கையாளர்களில் செய்தித்தாளைப் புரட்டி வாசிக்கும் ஒரு சிலருக்கு மட்டும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அவரவர் ஹோட்டல் அறைக்கு நாளிதழ்கள் வழங்குகிறோம்,” என்று தெரிவித்தார்.

திக்குமுக்காடும் விற்பனையாளர்கள் 

சிங்கப்பூர் செய்தித்தாள் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவரான திரு ஜெயக்குமார் சின்னையா பிள்ளை, 61, “2016ஆம் ஆண்டு முதல் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள நிலையில் விற்பனையாளர்களுக்கான தரகுத் தொகை மட்டும் உயராமல் இருப்பது தொடர்ந்து சிக்கலாக உள்ளது,” என்று கூறினார். 

வருமானம் குறைந்துகொண்டே வரும் தற்போதைய சூழலால் பெரும்பாலான விற்பனையாளர்கள் இதைத் துணை வருமானத்திற்காகவே செய்து வருகின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் இன்னும் 10லிருந்து 15 ஆண்டுகளுக்குள் இந்தத் தொழிலே இல்லாமல் போய்விடும் என்றும் வருத்தம் தெரிவித்தார் திரு ஜெயக்குமார். 

சுடச்சுட செய்தி வேண்டும் 

மூன்றாம் தலைமுறையாக இத்தொழிலைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திய திரு நெடுமாறன் தியாகராஜன், 49, “இணையம் வழி ஒரு சொடுக்கில் செய்திகள் கிடைக்கும்போது செய்தித்தாள்களில் ஒரு நாள் கழித்துக் கிடைக்கும் செய்திகளை வாசகர்கள் விரும்புவதில்லை. அவ்வகையில்  தற்போது செய்தித்தாள்களை முதியவர்கள் மட்டுமே விரும்பி வாசிக்கின்றனர். தொழில்நுட்பத்தைப் பற்றி அதிகம் அறிந்திராத, அச்சுப் பிரதி வாசிப்பில் பழகிப்போன இந்த மூத்த தலைமுறையினருக்குப் பின்னர் அச்சு வடிவிலான செய்தித்தாள்களை நாடும் வாசகர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள்,” என்று கூறினார். 

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்கெனவே இத்தொழில் நலிவடைந்து வந்த சூழலில் கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு லாப விகிதத்தைத் பெருமளவு குறைத்தது. அந்த நெருக்கடி காலகட்டத்திலே இத்தொழிலிலிருந்து தாம் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும் பகிர்ந்துகொண்டார். 

உடலுழைப்பைத் தவிர்க்கும் இளையர் 

பொதுவாக விற்பனையாளர்கள் ஒவ்வொரு நாளும் சரியாக அதிகாலை 2 மணிக்கு எழுந்து 2.30 மணிக்குள் தயாராகி 3 மணிக்கெல்லாம் செய்தித்தாள் கட்டுகள் விநியோகிக்கப்படும் இடத்திற்குச் செல்கிறார்கள். அதிகாலை 4 மணி தொடங்கி 8 மணி வரை தங்களுடைய விநியோக வட்டாரத்திலுள்ள இடங்களுக்குச் செய்தித்தாள்களைக் கொண்டு சேர்க்கிறார்கள். 

சில விற்பனையாளர்கள் செய்தித்தாள்களை விநியோகிக்கும் வண்டிகளின் ஓட்டுநர்களாகவும் இருக்கிறார்கள். கடந்த 35 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் திரு பத்மநாபன் விஸ்வநாதன், வயது 52, தற்போது விற்பனையாளராகவும் சிராங்கூன் சாலை வட்டார ஓட்டுநராகவும் உள்ளார். 

“தற்போது மொத்தம் 64 வழித்தடங்களில் செய்தித்தாள்கள் விநியோகிக்கப்படுகின்றன. இரவு 7 மணிக்கு எஸ்பிஎச் மீடியா அச்சு நிலையத்திலிருந்து செய்தித்தாள் இணைப்புகளை வாங்கிச் செய்தித்தாள் விநியோகிக்கும் நிறுத்தங்களில் 10 மணிக்கு வைத்துவிட்டு மீண்டும் அச்சு நிலையத்திற்குச் சென்று பிரதான பிரதிகளை (main copies) வாங்கி அதிகாலை 2 மணிக்கு மேல் நிறுத்தங்களுக்கு விநியோகிப்போம்,” என்று கூறினார் திரு பத்மநாபன். 

“கடுமையான உடல் உழைப்பு, காலை 7 மணிக்குள் செய்தித்தாள்களை விநியோகிக்கும் நெருக்கடி, மழை பெய்தால் செய்தித்தாள்கள் நனையும் சிக்கல் போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இத்தொழிலை முன்னெடுத்துச் செய்ய இக்கால இளையர்கள் தயங்குகிறார்கள்,” என்றும் இவர் கூறினார். 

ஊழியர் பற்றாக்குறை, குறையும் விற்பனை

இத்துறையில் ஊழியர் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக இருக்கிறது. சிங்கப்பூரர்கள் பெரும்பாலும் இவ்வேலைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்த வேண்டியுள்ளது என்று கூறினார் விற்பனையாளரான தீபக்குமார் தம்பியய்யன், 42.  

“ஒரு நாளில் சில மணி நேரமே வேலை இருப்பதால் பகுதிநேரமாக வேறு ஒரு தொழிலையும் செய்து வரும் விற்பனையாளர்கள், ஊழியர்களை அமர்த்திக்கொள்கிறார்கள். ஒவ்வோர் ஊழியருக்கும் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு 2000 வெள்ளி வருமானம் கொடுக்க வேண்டிய சூழலில், பொருளாதார நெருக்கடி காரணமாக பல விற்பனையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையே உதவிக்கு வைத்துக்கொள்கிறார்கள்,” என்றும் தெரிவித்தார். 

செய்தித்தாள் விற்பனையாளராக 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் திரு சம்பந்தம் முரளி, 46, “வீவக வீடுகளைக் காட்டிலும் பொதுவாகத் தரைவீடுகளிலும் கூட்டுரிமை வீடுகளிலும் விநியோகக் கட்டணத்தைச் சேர்த்துக் கூடுதல் லாபத்தை வசூலிக்கலாம். ஆனால் அங்கு சென்று விநியோகிக்கக் கூடுதல் ஊழியர்களும் தேவைப்படுகிறார்கள்,” என்று கூறினார். 

பொதுவாகவே இத்தொழிலில் பெரும்பாலான ஊழியர்கள் சில மாதங்களிலேயே வேலையை விட்டு நின்றுவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் புதிதாக ஆள்களை தேடுவது மிகுந்த சிரமம் அளிப்பதாகவும் இவர் தெரிவித்தார். 

பஃபல்லோ சாலையில் உள்ள ‘எம்ஏபி மினி மார்ட்’ உரிமையாளர் திரு ரஃபியுதீன் காதர் சாஹிப், 45, “ஒரு நாளில் வெகுசில நாளிதழ் பிரதிகளை வாங்குகிறோம். அவையும் பெரும்பாலான நாள்கள் விற்பதில்லை,” என்று கூறினார். 

கடந்த 11 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்திவரும் இவர், “கொவிட்-19 காலகட்டத்திற்கு முன்வரை விற்கப்படாத பிரதிகளை விற்பனையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். தற்போது அந்தச் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் செய்தித்தாள்கள் வாங்குவதை நிறுத்தும் திட்டத்தில் இருக்கிறேன்,” என்றும் சொன்னார். 

செய்தித்தாள் விநியோக முன்னோடிகள்

கடந்த 30 ஆண்டுகளாக துவாஸ் பகுதியின் பிரதான செய்தித்தாள் விற்பனையாளராக இருந்துவரும் சிதம்பரம் தம்பியய்யா, 58, “தமிழகத்தின் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 32 கிராமங்களைச் சார்ந்தோரே சிங்கப்பூரில் இத்தொழிலில் கோலோச்சினர். 1950களில் என்னுடைய தந்தை முதன்முதலில் சிங்கப்பூர் வந்த காலந்தொட்டு இத்தொழில் வெற்றியின் உச்சத்தில் இருந்து வந்தது,” என்று கூறினார். 

இத்தொழிலை நம்பிப் பல குடும்பங்கள் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தன. ஒரு மாதத்தில் பல ஆயிரம் வெள்ளி வரை வருமானம் ஈட்டித் தந்த இத்தொழிலின் பயணம் சில தலைமுறைகளுடன் நின்றுவிடும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் திரு சிதம்பரம். 

இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். வெவ்வேறு துறைகளில் பணிகளைத் தேர்ந்தெடுத்துள்ள இவர்களிடம், இத்தொழிலைத் தொடர்ந்து நடத்த திரு சிதம்பரம் அறிவுறுத்தவில்லை. 

“தொழில்நுட்பம் வளர்ந்துவரும் சூழலில் காலத்திற்கேற்ப மக்களின் தேவைகளும் மாறுகின்றன. போட்டி நிறைந்த நவீன உலகுடன் இணைந்து பயணிப்பதே அவர்களின் எதிர்காலத்திற்குச் சிறந்ததாக அமையும்,” என்றும் திரு சிதம்பரம் தெரிவித்தார். 

வாசிக்கும் தளத்தில் மாற்றம் 

செய்தித்தாள் மீது வாசகர்களுக்கு இருக்கும் ஆர்வமோ தேடலோ குறையவில்லை என்றும் செய்தி வாசிப்புக்கான தளம் மட்டுமே மாறியுள்ளது என்றும் கூறினார் எஸ்பிஎச் மீடியாவின் தமிழ்முரசு நாளிதழின் வாடிக்கையாளர் பிரிவு மேலாளர் திரு கே ஏ டபுள்யூ ஹாஜா. 

முன்னர் நேரடியாகப் பிரதிகளை வாங்கிப் படித்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், தற்போது இணையம் வழி செய்தித்தாள்களை வாசிக்கின்றனர். செய்தித்தாள் பிரதிகளின் விற்பனை எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மைதான் என்ற போதிலும் மின்னிலக்க உலகின் மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நம்முடனே பயணிக்கின்றனர் என்றார் திரு ஹாஜா. 

முதியவர்களும் பள்ளி மாணவர்களும் செய்தித்தாள் பிரதிகளை நாட, இளையர்கள் இணைய செய்தித்தாள் பக்கங்களை அதிகம் விரும்புகின்றனர். வாசகர்களின் தேவைக்கேற்பத் தொடர்ந்து செய்தித்தாள் நிறுவனங்களும் தங்களை மேம்படுத்திக்கொள்வது ஆக்ககரமான மாற்றமே என்றும் திரு ஹாஜா தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!