அறிவொளி ஏற்றும் ஆசிரியர் பணி

மாணவர்களின் மொழித்திறன், விழுமியங்கள், 21ஆம் நூற்றாண்டுத் திறன்கள் என அவர்களை முழுமையாக வளர்க்கும் அரும்பணியில் ஈடுபடும் தமிழ் ஆசிரியர்கள் முன்னேறுவதற்கு சிங்கப்பூரில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. வருங்காலத் தலைமுறையை உருவாக்குவதற்கான ஆர்வமும் உழைப்பும் உள்ளோருக்கு ஆதரவு வழங்கக் கல்வி அமைச்சின் தமிழ்த்துறையினரும் உள்ளனர். இந்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நமது தமிழ் ஆசிரியர்களை நாம் கொண்டாடுவோம்.

மாணவர்களைச் செதுக்குவதில் மகிழ்பவர்

அங் மோ கியோ தொடக்கப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் நித்தியா தர்சினி. படம்: கி.ஜனார்த்தனன்

பிஞ்சுப் பருவத்திலேயே தமிழில் பழகி மகிழ்ந்த நினைவுகள் மனதில் தொடர்ந்து பசுமையாக இருப்பதாகக் கூறினார் மூன்றரை ஆண்டு காலமாக அங் மோ கியோ தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் குமாரி நித்தியா தர்சினி, 28. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பாடத்தைக் கற்பிப்பவராக மட்டுமில்லாமல் நல்லப் பண்புகளை எடுத்துரைத்து மாணவர்களைச் செதுக்கும் அறப்பணியில் இருப்பவர் என்ற முறையில் இந்த இளம் ஆசிரியர் பெருமை கொள்கிறார்.

மாணவர்களுக்கும் தமக்கும் உள்ள வயது இடைவெளி குறைவாக இருப்பது அவர்களுடனான நெருக்கத்தை அதிகரிப்பதாக குமாரி நித்தியா கூறினார். ஆசிரியர்கள் முன்னுதாரணங்களாகக் கருதப்படுவதால் மாணவர்கள் தம்மைக் கூர்ந்து கவனித்திருந்தாலும் அதனால் நெருக்கடி எதுவும் உணரவில்லை என்கிறார்.” மாறாக, நான் நானாகத்தான் இருப்பதை உணர்கிறேன்,” என்று குமாரி நித்தியா கூறுகிறார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பயின்ற குமாரி நித்தியா, பட்டப்படிப்பின் இறுதி தவணையின்போது கல்வியமைச்சின் பட்டத்திற்குப் பிந்திய பட்டப்படிப்புக்கான விளம்பரத்தைப் பார்த்தபின் ஆசிரியர் பணி மீது ஆர்வம் அடைந்தார். ஊடகத் திறன்கள், தமிழ் ஆர்வம், ஆசிரியர் பணி மீதான விருப்பம் ஆகிய மூன்றுக்குமே ஆசிரியர் பணி ஏற்றது எனக் கருதினார்.

ஆசிரியராகப் பணிபுரிய விரும்புவோர், பிள்ளைகளின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்காக உழைக்கும் உந்துதலுடன் வரவேண்டும் என்றார் குமாரி நித்தியா. “பிள்ளைகளின் இன்ப துன்பங்களில் பங்கேற்று அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த விரும்புவோர், சமூத்திற்கு நல்ல முறையில் பங்காற்ற விழையும் நெகிழ்வுத்தன்மை உடையவர்களுக்கு மிக உகந்தது இந்தப் பணி,” எனக் கூறினார்.

பிறருக்கு வழிகாட்டும் கல்வி அதிகாரி

கல்வியமைச்சின் தாய்மொழிகள் துறை பாடக்கலைத்திட்ட வரைவின் மேம்பாட்டுப் பிரிவின் மூத்த உதவி இயக்குநர் மும்தாஸ் முகமது காசிம். படம்: மும்தாஸ் முகமது காசிம்

கல்வி சார்ந்த பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்து புதிய உச்சங்களைத் துரிதமாகத் தொட்டு வரும் திருவாட்டி மும்தாஸ் முகமது காசிமுக்கு , 39, அடித்தளம் தந்தது, தொடக்கத்தில் செய்திருந்த தமிழ் ஆசிரியர் பணி.

கல்வியமைச்சின் தாய்மொழிகள் துறை பாடக்கலைத்திட்ட வரைவின் மேம்பாட்டுப் பிரிவின் மூத்த உதவி இயக்குநராகச் செயல்பட்டு வரும் திருவாட்டி மும்தாஸின் பொறுப்புகள், பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள், துறை தலைவர்கள் ஆகியோருடன் ஒப்பிடுகையில் மாறுபட்டதாக உள்ளது.

திருவாட்டி மும்தாஜ் சிறப்பாய்வாளர்களுடனும் அதிகாரிகளுடனும் நெருங்கி வேலை செய்து அவர்களை வழிநடத்துகிறார். தாய்மொழிக் கொள்கை விவகாரங்களில் பெரிதும் பங்கேற்று பாடக்கலைத்திட்டம் மற்றும் பயிற்று வளங்களைத் திட்டமிடுதல், உருவாக்குதல், மறுஆய்வு செய்தல், செயல்படுத்துதல் ஆகியவற்றில் வழிகாட்டுகிறார்.

மாணவர்கள் தமிழை மகிழ்வுறக் கற்று தன்னம்பிக்கையுடன் தமிழைப் பயன்படுத்த வகைசெய்யும் அதிகாரிகளைக் கொண்டுள்ளது இவர் வழிநடத்தும் பிரிவு.

18 ஆண்டுகள் கல்வி அமைச்சில் பணிபுரியும் திருவாட்டி மும்தாஸ், 14 ஆண்டுகளாக இரண்டு பள்ளிகளில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

தாய்மொழித்துறை, குடியியல் அறநெறிக்கல்வித்துறை, பள்ளிப் பணி மேம்பாட்டுத் துறை ஆகிய மூன்று துறைகளில் பாடத்துறைத் தலைவராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து திறன்மேம்பாடு செய்ய விரும்பிய திருவாட்டி மும்தாஸ், தேசியக் கல்விக்கழகத்தில் கல்வித்துறையில் முழுநேரமாக முதுகலைப் பட்டம் பயின்றார். பணியில் திறம்படச் செயலாற்றித் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்திய இவர், வெற்றிகரமாகப் பெற்றுள்ள பட்டக்கல்விக்குப் பிந்தைய உபகாரச் சம்பளத்தை இதற்குப் பயன்படுத்தினார் .

2020ல் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவின் தமிழ் மொழிப் பிரிவில் மூத்த அதிகாரியாகச் சேர்ந்த திருவாட்டி மும்தாஸ், தற்போது பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு தாய்மொழிகள் துறையில் மூத்த உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.

தமிழின் மீது இயல்பாக இவருக்கு உள்ள நாட்டத்தாலும், தொடக்கநிலையிலும் உயர்நிலையிலும் இவருக்குக் கற்பித்த ஆசிரியர்களைப் போல் தாமும் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தால் இத்துறைக்கு ஈர்க்கப்பட்டார் திருவாட்டி மும்தாஸ்.

தமிழ் ஆசிரியராக விரும்பும் மாணவர்கள், தங்களுக்குத் தெரிய வேண்டியவற்றை தேசியக் கல்வி நிலையம் மற்றும் கல்வி அமைச்சின் இணையத்தளங்கள் மூலமாகவும் நேரடி ஆலோசனை மூலமாகவும் இப்பணி குறித்த கேள்விகளுக்கு விடைகாணலாம் என்றார்.

மாணவர்களின் முழுநேர வளர்ச்சியின் நோக்கத்திற்காகச் செய்யப்படும் பல்வேறு பணிகளால் ஆசிரியர்களின் வேலைப்பளு அதிகரித்து வருவதால் இளையர்கள் சிலர் இப்பணியில் சேர தயங்கலாம் என்றார்.

ஆயினும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அர்த்தமுள்ள நோக்கம் அவற்றில் இருப்பதைத் திருவாட்டி மும்தாஸ் சுட்டினார். கடின உழைப்பு, விடாமுயற்சி, திறன்களை ஆழப்படுத்திக்கொள்ளும் முனைப்பு உள்ளவர்களுக்கு முன்னேற்றமும் ஆதரவும் நிச்சயம் உண்டு என்றார். “எனவே தயக்கமின்றி முன்வாருங்கள். உங்களுக்காக பல தரப்பிலிருந்து ஆதரவு வழங்கப்படும்,” என்றார்.

தமிழை ஆய்ந்து இன்பம் காண்பவர்

கல்வி அமைச்சில் தமிழ்மொழிப் பிரிவில் வழிகாட்டு சிறப்பாய்வாளராக திருமதி சீதாலட்சுமி தனபாலன் பணியாற்றுகிறார். படம்: சீதாலட்சுமி தனபாலன்

கல்வி அமைச்சில் தமிழ்மொழிப் பிரிவில் வழிகாட்டு சிறப்பாய்வாளராகப் பணியாற்றும் திருமதி சீதாலட்சுமி தனபாலன், 55, தமிழ்த்துறையிலும் மற்ற பல்வேறு துறையிலும் சிறந்து விளங்கிய பலரை உருவாக்கியுள்ள மனநிறைவுடன் கல்வியாளராக 34 ஆண்டுகள் செயற்பட்ட அனுபவத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறார்.

பணியில் தாம் சேர்ந்த காலக்கட்டத்தில் மற்ற ஆசிரியர்களுக்குரிய சம்பளம், பதவி உயர்வு போன்ற வாய்ப்புகள் தமிழ் ஆசிரியர்களுக்குக் குறைவு என சிலர் கூறிவந்தது தவறு என்கிறார் திருமதி சீதாலட்சுமி.

1989ல் ஃபூஹூவா தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், 1993-ல் உயர்நிலைப்பள்ளியில் கற்பிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஜின் தாய் உயர்நிலைப்பள்ளியில் மாணவர் கட்டொழுங்கு துறைத்தலைவராக 4 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சிங்னான் தொடக்கப்பள்ளியில் நற்பண்பு, குடியியல் துறைத்தலைவராக 13 ஆண்டுகளாகப் பணியாற்றினார். பின் கல்வி அமைச்சில் மூத்த வளமேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி மூத்த சிறப்பாய்வாளராகவும் தற்போது வழிகாட்டு சிறப்பாய்வாளராகவும் பணியாற்றுகிறார்.

இவர் ஆசிரியர் தடத்தில் தொடங்கித் தலைமைத்துவத் தடத்தில் துறைத்தலைவராக பணியாற்றித் தற்போது சிறப்பாய்வாளர் தடத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார்.

தமிழாசிரியர்களைத் தேடி பல வாய்ப்புகள் வருவதாகக் கூறிய திருமதி சீதாலட்சுமி, உதாரணத்திற்கு ஆசிரியர் தடத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் ஒருவர் மூத்த ஆசிரியராக மட்டுமின்றி, வழிகாட்டு ஆசிரியராகவும் முதன்மை மற்றும் தலைமை முதன்மை ஆசிரியராகவும் உயரலாம் என்றார்.

தலைமைத்துவத் தடத்தில் பாடத் தலைவர், துறைத்தலைவர், துணைத்தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியர் போன்ற தலைமைத்துவப் பொறுப்புகளையும் வகிக்கலாம்.

கல்வி அமைச்சில் பயிற்றுவளங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோர், ஆய்வுத்திறன்களை ஆழப்படுத்தினால் சிறப்பாய்வாளர்த் தடத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்கு அடையாளம் காணப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அந்தத் தடத்தில் மூத்த சிறப்பாய்வாளர், வழிகாட்டு சிறப்பாய்வாளர், முதன்மை சிறப்பாய்வாளர் எனப் படிப்படியாக முன்னேறவும் வாய்ப்பு உண்டு என்று அவர் கூறினார்.

“திறன் மேம்பாடு என்பது நம் கையில்தான் உள்ளது. நமக்கென தேடல் தொடர்ந்து இருக்கவேண்டும். நம்மை நாமே தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு இருக்கவேண்டும். வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது அதை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஆசிரியர்களின் தகுதியைத் தொடர்ந்து மேம்படுத்துபவர்

தலைமை முதன்மை ஆசிரியர் சுப்பிரமணியம் நடேசன். படம்: கி.ஜனார்த்தனன்

தமிழ்மொழி என்னும் திறவுகோலின்வழித் தமிழ்ப் பண்பாட்டு உலகத்திற்குள் நுழைய முடியும் என்கிறார் கல்வியாளர் சுப்பிரமணியம் நடேசன், 56. வாசிப்புப் பழக்கம், சிந்தனையைத் தூண்டும் உரைகளைக் கேட்டல் போன்ற உத்திகள்வழித் தம் ஆசிரியர் தகுதியைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகத் தலைமை முதன்மை ஆசிரியர் சுப்பிரமணியம் நடேசன் கூறுகிறார்.

ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், சுகிசிவம் போன்ற படைப்பாளிகளின் தனித்துவமும் புத்தாக்கமும் வீரியமும்மிக்க உரைகளைக் கேட்பதாகக் கூறினார். “ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் எழுதிய சில நூல்களைப் படிப்பேன். குறிப்பாக, வாசிப்பின் பரப்பை ஆழப்படுத்த உதவும் தரமிக்க எழுத்துகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்பேன். அதோடு, மொழிபெயர்ப்பு நூல்களையும் வாசிப்பேன்,” என்று அவர் கூறினார்.

தேசிய சேவையைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிற துறைகளில் பணியாற்றிய திரு சுப்பிரமணியத்திற்குத் தமிழ் ஆசிரியராகவேண்டும் என்ற எண்ணம் 24-ஆவது வயதில் தோன்றியது.

2023-இல் தலைமை முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்ட திரு சுப்பிரமணியத்திற்கு, 2003-ஆம் ஆண்டில் சிறந்த வளமை ஆசிரியர் என்னும் விருது வழங்கப்பட்டது.

மாணவர்களை எதிர்காலத்திற்கு எப்படித் தயார்ப்படுத்துவது என்னும் கேள்வியைத் தம்மை நோக்கிக் கேட்டுக்கொண்டபோது, தம் போதாமை தமக்குப் புலப்பட்டதாகக் கூறினார். ஆசிரியர் என்பவர் வகுப்பறைக்கு வெளியில் எப்போதும் தம்மை ஒரு மாணவராகக் கருதவேண்டும் என்றார். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து சிக்கலான வினாக்களுக்கு விடை தேடும் கற்பித்தல் முறையைத் தாம் விரும்புவதாகக் கூறினார், திரு சுப்பிரமணியம். எனவே, மாணவர்களுக்கு அறிவுடன் புத்துணர்வையும் ஊட்டும்படி பாடங்கள் அமைவது அவசியம்.

மாணவர்களின் அறிவைச் செதுக்கத் தேவைப்படும் ஆழ்ந்த சிந்தனை, விரிந்த உலகப்பார்வை, மதிநுட்பம் போன்ற பண்புகள் ஆண்-பெண் பேதங்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறிய திரு சுப்பிரமணியம், சிறந்த முன்மாதிரி ஆசிரியர்களாக விளங்க விரும்பும் இருபாலரும் மாணவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

ஊக்கம்பெற்று பணியைத் தெரிவுசெய்தவர்

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய ஆசிரியர் சீதா சக்திவேல். படம்: சீதா சக்திவேல்

தமிழ்மொழியின்மீதுள்ள ஆர்வத்தினாலும் சிங்கப்பூரின் ஆசிரிய சமூகத்தின்வழி பெற்ற ஊக்கத்தினாலும் தமிழாசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தார் முப்பது வயது மதிக்கத்தக்க சீதா சக்திவேல்.

மாணவர்களின் உலகை அறிந்து அவற்றில் தமிழைக் கொண்டுசேர்க்க விழையும் குமாரி சீதா, மாணவர்களின் கற்றல் தேவைகளை நன்கு உணர்ந்து, அவர்கள் விரும்பும் வகையிலும் அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் வகையிலும் மாணவர்களது கற்றல் அனுபவங்களை வடிவமைக்கும் நோக்கில் பாடத்திட்டங்களை வடிவமைக்கிறார். அவற்றில் அர்த்தமுள்ள வகையில் மெய்நிகர் தொழில்நுட்பம் உள்ளிட்ட தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தும் வருகிறார்.

தமிழ் பேசுவதற்கான நல்ல சூழலைக் குடும்பத்தினர் உருவாக்கி நல்ல நூல்களைப் படித்துக் கலந்துரையாட ஊக்குவித்ததாகத் தெரிவித்தார். உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரியில் விவாதப்போட்டிகளில் பங்கேற்க செய்த ஆசிரியர்கள், தம் மொழித்திறனையும் தன்னம்பிக்கையையும் ஊக்குவித்தனர். தமிழ்சார்ந்த நிகழ்வுகளையும் வழிநடத்தும் வாய்ப்பு குமாரி சீதா சக்திவேலுக்குக் கிட்டியது.

வீட்டில் தமிழ் பேசுதவற்குரிய சூழலை அமைத்துக்கொடுத்து நல்ல பல நூல்களைப் படித்து அதுகுறித்துக் கலந்துரையாடுவதற்குப் பெற்றோர் ஊக்குவித்ததாகத் தெரிவித்தார். உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரியில் விவாதப்போட்டிகளில் பங்கேற்பதற்கும் தமிழ்சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்கும் பல்வேறு தளங்களை உருவாக்கிக்கொடுத்த தமிழாசிரியர்கள், தம் மொழித்திறன் மேம்பாட்டிற்கும் தன்னம்பிக்கையோடு செயலாற்றுவதற்கும் பெரும் பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார்.

தொடக்கக் கல்லூரி வரை அறிவியல் பாடங்களை முதன்மையாகப் பயின்று வந்த இவர், பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கான பல்வேறு தெரிவுகள் இருந்தும் முடிவில் தமிழைத் தேர்வு செய்தார்.

உயர்நிலைப் பள்ளியில் ஆரம்ப நிலை ஆசிரியராக இருந்தபோது தமிழ்மொழிப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல், மாணவத் தலைவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தும் வாய்ப்பும், திட்ட வேலைகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்பும், இணைப்பாட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் வாய்ப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. பிறகு, கல்வி அமைச்சு அதிகாரியாகத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தை வடிவமைக்கும் வாய்ப்பும், பிற பாடப்பிரிவினரோடு இணைந்து தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு திட்டவேலைகளில் செயலாற்றும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது.

தற்சமயம் உமறுப்புலவர் தமிழ்மொழி தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் பிரிவின் பாடத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். மாணவர்கள் விரும்பும் வகையில் தமிழை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பது ஒருபக்கம் மனநிறைவாகவும் மறுபக்கம் சவாலாகவும் இருந்தாலும் மாணவர்கள் தமிழில் சுயமாகக் காட்டும் ஆர்வமே தம் உழைப்புக்குக் கிடைக்கும் பலனாக இருப்பதாகக் குமாரி சீதா கருதுகிறார். தம் முன்னாள் மாணவர்கள் ஐவர், பாலர் பள்ளித் தமிழ் ஆசிரியர்களாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகக் குமாரி சீதா கூறினார்.

பிள்ளைகளின் வெற்றியைக் கொண்டாடுபவர்

லியென்ஹுவா தொடக்கப்பள்ளி தமிழ் ஆசிரியர் அஷ்வினி பவுலோஸ் மனோகர், 25. படம்: அஷ்வினி பவுலோஸ் மனோகர்

தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் ‘அப்பா’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு சொல் அறியாமல் இருந்த மாணவருக்கு லியென்ஹுவா தொடக்கப்பள்ளி தமிழ் ஆசிரியர் அஷ்வினி பவுலோஸ் மனோகர், 25, படிப்படியாகத் தமிழ் கற்றுத்தந்தார். இப்படி மாணவர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் இன்பத்தை தம் தமிழாசிரியர் பணி நல்கி வருவதாக அவர் கூறினார்.

உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது மகாபாரத தொலைக்காட்சி நாடகம் ஒன்று தமிழின்மீதும் இலக்கியத்தின்மீதும் ஆர்வத்தைத் தூண்டியதாக குமாரி அஷ்வினி கூறினார். நாடகத்தின் ஆங்கிலத் துணை வாசகங்களின்மூலம் தமிழை மேலும் கற்ற அஷ்வினி, தாய்மொழிப்புழக்கம் குறைவாக உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்களை நன்கு அறிந்தவராவார்.

ஆசிரியருக்கான கல்விமான் திட்டத்தின்கீழ் நான்கு ஆண்டு பட்டப்படிப்பை தேசிய கல்வி நிலையத்தில் முடித்த குமாரி அஷ்வினி, புதுமையாக கற்றல் உத்திகளின் தேவையை நாடும் இத்தகையச் சவால்கள் ஆசிரியர் பணி மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

ஒவ்வொரு நாளும் மாறுபட்ட அனுபவங்களைப் பெறுவதாகக் கூறும் இவர், பெற்றோர்களின் மகிழ்ச்சியைக் கண்டு உத்வேகம் அடைவதாகக் கூறினார்.

மாணவர் மனதறிந்திட விரும்புபவர்

தற்போது தேசியக் கல்விக் கழகத்தில் பட்டக்கல்வி பயின்று வரும் முஹம்மது ஷஹீர். படம்: முஹம்மது ஷஹீர்

2019ல் கல்வியமைச்சில் சேர்ந்து ஃபேரர் பார்க் தொடக்கப்பள்ளியில் ஒப்பந்த முறை ஆசிரியராக முஹம்மது ஷஹீர் ஓராண்டாகக் கற்பித்தார். 2020 முதல் 2022 வரை தேசியக் கல்விக் கழகத்தில் பட்டயக்கல்வி பயின்று தற்போது அங்குப் பட்டக்கல்வி பயின்று வருகிறார். 

தொடக்கப்பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்கள், தம் கண்களுக்கு ஆளுமை நிறைந்த மனிதர்களாகத் தோன்றியதால் ஆசிரியர் ஆகவேண்டும் என இவர் நினைத்தார். உயர்நிலைப் பள்ளியில் தமது வகுப்பு ஆசிரியரான திரு நாகவேலு பொன்முடி ஆளுமையுடன் அன்பையும் பொழிந்து நட்புணர்வோடு மாணவர்களுடன் பழகியது ஷஹீரின் மனத்தில் பசுமையாக இன்றும் தங்கியுள்ளது. திரு நாகவேலுவைப் போல வருங்காலத்தில் ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு இனிமையான கற்றல் அனுபவங்களை வழங்க விரும்பியே இந்தத் தொழிலில் சேர்ந்தார்.

தமிழாசிரியராக வேலை செய்யும் தம் தந்தை திரு யூசோஃப்  தம்முடைய தமிழ்மொழி அறிவை அதிகரிக்க உதவியதாகக் கூறினார். சிங்கப்பூர்ச் சூழலிலேயே வளர்ந்து சிங்கப்பூரில் தமிழ் பேசுவதற்கு ஏற்படக்கூடிய சாவல்களை எப்படிக் களையலாம் என்ற தெளிவுள்ளவர் தமிழாசிரியராக வந்தால் சிறப்பு என்று தம் தாத்தாவும் உள்ளூர் எழுத்தாளருமான கடையநல்லூர் ஜமீலா கூறியதாக ஷஹீர் குறிப்பிட்டார்.  

தேசியக் கல்விக் கழகத்தில் கிடைத்த அனுபவங்களும் படிப்பினைகளும் தன்னை ஓர் ஆசிரியராக மேம்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். அங்குக் கற்றுக்கொண்ட கற்பித்தல் உத்திகளைச் செயல்படுத்தப் பள்ளி சார்ந்த பயிற்சிகள் ஒரு சிறந்த தளமாக அமைவதாக அவர் சொன்னார்.

மாணவர்கள் இல்லையேல் ஆசிரியர்கள் இல்லை. மாணவர்களின் நிலையைப் புரிந்து அவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை மதித்துப் பழகக்கூடிய தன்மை உள்ளவரே நல்ல ஆசிரியராக இருக்க முடியும் என இவர் கருதுகிறார்.

மாணவர்களின் தமிழ்த்திறன் சார்ந்த  குறைபாடுகள் அத்தனையும் சுட்டிக்காட்டி அவர்களை ஏளனப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு அவர்களை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்துத் தெரிவிப்பில் ஈடுபட வேண்டும் என ஷஹீர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!