தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பணவீக்கம் இந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து சீரடைந்து வந்தாலும் ஆடைகள், அரிசி போன்ற சில அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் தொடர்கிறது. வாங்கும் பொருளைப் பொறுத்து விலையேற்றத்தின் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் பல்வேறு நிலைகளில் உணர்கின்றனர். செலவை இயன்றவரை குறைக்க அவர்கள் பொருள் வாங்குவதை கவனத்துடன் அணுகத் தொடங்கியுள்ளனர்.

2023 தீபாவளி: விலை மீது விழிகள்

10 mins read
a674a32a-da18-4121-985e-cf2c76f8697b
லிட்டில் இந்தியாவில் வாடிக்கையாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் விலையேற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் பலனளித்து வந்தாலும் இப்பிரச்சினை இன்னும் முற்றுபெறவில்லை.

இப்போதுள்ள மூல பணவீக்கம், ஈராண்டு காலத்தில் நல்ல நிலையில் இருப்பதாக பதவியைவிட்டு வெளியேறவிருக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவர் ரவி மேனன் கடந்த வாரம் கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரிவில் நடப்புக்கு வரவுள்ள பொருள், சேவை வரியின் உயர்வு, பணவீக்கத்தின் மீது ‘உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்’ என திரு மேனன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் மூலப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 3 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இது, இவ்வாண்டு ஜனவரியின்போது பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் முன்னேற்றம் அடைந்துள்ள நிலை. அடுத்த ஆண்டுக்கான மூலப் பணவீக்க விகிதம் 2.5 விழுக்காட்டுக்கும் 3.5 விழுக்காட்டும் இடைப்பட்டிருக்கும் என்று நாணய ஆணையம் வெளியிட்ட முன்னுரைப்பு நம்பிக்கையளிக்கிறது. இருந்தபோதும், அனைத்துலக அளவில் ஏற்படும் பதற்றங்களால் உண்டாகும் தளவாடச் சிக்கல்கள், எரிபொருள் பிரச்சினைகள் போன்றவை விலைகளைப் பாதிக்கலாம்.

மெதுவடையும் உணவு பணவீக்கம்

சிங்கப்பூரின் உணவு விலை ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு செப்டம்பர் 4.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ‘டிரேடிங் இகானமிக்ஸ்’ தளம் குறிப்பிடுகிறது. இது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பதிவான மாதாந்திர விகிதங்களில் ஆகக் குறைவு.

இறைச்சி வகைகளுக்கான விலை 2.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆயினும், இது ஆகஸ்ட் விகிதத்தைக் காட்டிலும் மெதுவடைந்துள்ளது.

காய்கறி விலை செப்டம்பர் மாதம் 0.4 விழுக்காடு குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அது 1.1 விழுக்காடு வீழ்ந்தது. முட்டை, பால்கட்டி, பால் ஆகியவற்றுக்கான விலை கடந்த மாதம் 6.2 விழுக்காடு குறைந்தது. இதற்கும் ஆகஸ்ட் மாத எண்ணிக்கையான 6.1க்கும் சிறிதளவு மட்டுமே வேறுபாடு.

உணவகங்கள், உணவங்காடி நிலையங்கள் ஆகியவற்றுக்கான விலையேற்றம் கிட்டத்தட்ட 4.4 விழுக்காட்டில் இருப்பதாகவும் டிரேடிங் இகானமிக்ஸ் தளம் கூறியது.

இந்திய அரிசி மீது மாறா விருப்பம்

கடை ஊழியருடன் ‘தி சென்னை டிரேடிங் கடை’ நிறுவனத்தின் உரிமையாளர் வி ராமமூர்த்தி.
கடை ஊழியருடன் ‘தி சென்னை டிரேடிங் கடை’ நிறுவனத்தின் உரிமையாளர் வி ராமமூர்த்தி. - படம்: டினேஷ் குமார்

இருந்தபோதும் அரிசியின் அண்மைய விலை ஏற்றம், தீபாவளிப் பொருள் வாங்குபவர்களின் மீது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய அரிசியின் விலை ஏறியுள்ளபோதும் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையுள்ள வேறு அரிசிக்கு மாறாமல் பொன்னி, பாஸ்மதி அரிசியை வாங்குவதாகக் கடைக்காரர்கள் தமிழ் முரசிடம் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரிலுள்ள ஏழு கிளைகளைக் கொண்ட ‘தி சென்னை டிரேடிங் கடை’ நிறுவனத்தின் உரிமையாளர் வி ராமமூர்த்தி, 55, விலையேற்றத்தைப் பற்றி வாடிக்கையாளர்கள் கூறும்போது, அதற்கான காரணங்களை விளக்குவதாகக் கூறினார்.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதித் தடையைப் பொறுத்தவரை சிங்கப்பூர் விதிவிலக்கு என்றாலும் 20 விழுக்காடு ஏற்றுமதி வரி உள்ளது. அத்துடன் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசி அளவைக் கண்காணிக்கும் குழு ஒன்று இருப்பதால் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் திரு ராமமூர்த்தி கூறினார். அத்துடன், பாஸ்மதி அரிசியின் உற்பத்தி தற்போது குறைவாக இருப்பது விலையேற்றத்தின் காரணம் எனக் கூறினார். இதனால் பல்வேறு கடைகளில் அந்த அரிசி விலை நான்கு, ஐந்து வெள்ளி அதிகரித்துள்ளது.

சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் விலைகள் குறைந்திருந்தாலும் உளுந்து, முறுக்குமாவுக்கான மூலப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டினார். தீமிதித் திருவிழாவுக்குப் பிறகு முறுக்கு சுடும் வழக்கம் மக்களுக்கு இருப்பதால் அதன் பின்னர் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று திரு ராமமூர்த்தி எதிர்பார்க்கிறார்.

அரிசி, பருப்பு போன்ற தானிய வெளியேற்றம் குறித்து வாடிக்கையாளர்கள் வினவினாலும் நிலவரத்தைப் புரிந்து நடந்துகொள்வதாக பஃப்ளோ ரோட்டிலுள்ள ‘குட்லக்’ மளிகைக் கடை உரிமையாளர் இரா. அன்பழகன், 53, கூறினார். இந்திய அரிசியைக் காட்டிலும் தாய்லாந்து அரிசி குறைந்த விலையில் இருந்தபோதும் அதற்காக வாடிக்கையாளர்கள் அரிசி வகையை மாற்றி வாங்கவில்லை என்றும் கூறினார்.

காய்கறி வாங்கும் முறையில் மாற்றம்

லிட்டில் இந்தியா வட்டாரத்தின் பஃப்ளோ ரோட்டிலுள்ள ‘குடாச்சாரி’ காய்கறி, மளிகைக் கடை
லிட்டில் இந்தியா வட்டாரத்தின் பஃப்ளோ ரோட்டிலுள்ள ‘குடாச்சாரி’ காய்கறி, மளிகைக் கடை - படம்: டினேஷ் குமார்

காய்கறி என வரும்போது அவற்றின் விலைகளின் மீது அந்தந்தக் காய்கறிகள் விளையும் நாட்டின் வானிலை தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.

மழைக்காலத்தால் வெங்காய விலை ஏறியுள்ளதைச் சுட்டினார் ராகவேந்திரா என்டர்பிரைஸ் காய்கறி மொத்த விநியோக நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். மணிமாறன், 37. வெங்காயத்தை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்தும் மற்ற காய்கறிகளை மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்தும் அவரது நிறுவனம் இறக்குமதி செய்கிறது.

“கீரை வகைகளில் ஆக மலிவான தண்டுக்கீரை முன்னதாக $1.40, $1.50 விலையில் இருந்தது. இப்போது அதன் விலை $2.10,” என்றார்.

இலைமிகு கீரைகள் கடந்த வாரம் $1.50 விலையில் விற்கப்பட்டன. இப்போது அவற்றின் விலை $1.90. வாடிக்கையாளர்கள் நிச்சயமாக இந்த மாற்றங்களைக் கவனித்துக் கேள்வி கேட்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

காய்கறிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் வாங்காமல் அந்தந்த நாளுக்குத் தேவைப்படுவதை வாங்கும் போக்கு கடந்த மூன்று மாதங்களாக இருப்பதாக திரு மாறன் கூறுகிறார்.

வருமானத்தைப் பொறுத்து பாதிப்பு

உணவு விலையேற்றம் தங்களை அவ்வளவாக பாதிப்பதில்லை என்று பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கூறியபோதும் குறைந்த வருமானம் ஈட்டுவோர் உணவுக்கான செலவுகளைக் குறைக்க முயல்வதைக் காண முடிகிறது.

மளிகைப் பொருள்களின் ஏற்றத்தை ஓரளவு சமாளிக்க இயன்றபோதும் முறுக்கு எண்ணெய் போன்றவை மற்ற பொருள்களைவிட விலை அதிகமாக இருந்ததாகக் கூறினார் தம் மகனுடன் தங்கியுள்ள இல்லத்தரசி மலர்விழி நாகராஜு, 57. தீபாவளிக்காக திருவாட்டி மலர்விழி, தம் தாயார் வீட்டில் உடன்பிறந்தவர்களுடன் கூடுவதால் அவர்கள் சமைத்துள்ள பதார்த்தங்களை அங்கு பகிர்ந்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறார்.

முறுக்குமாவு, அரிசி ஆகியவற்றில் அதிக விலையேற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்வதாகக் கூறும் வாகன ஓட்டுநர் சி.சிவா, 53, இதனை எந்த விதத்திலும் தவிர்க்க முடியாது என்றார்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) வழங்கிய 100 வெள்ளிப் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு வாங்க முடிந்ததாக மகளுடனும் 81 வயது தாயாருடனும் தங்கியுள்ள திருவாட்டி மலர்விழியின் அக்கா நா. ஜெயலலிதா, 58, கூறினார்.

இறைச்சி, கோழி வழக்கம்போல்

ஹாஜி எம் என் எஸ் டிரேடிங் இறைச்சி விநியோக நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்தஃபா ஷாகுல் ஹமீது.
ஹாஜி எம் என் எஸ் டிரேடிங் இறைச்சி விநியோக நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்தஃபா ஷாகுல் ஹமீது. - படம்: டினேஷ் குமார்

இவ்வாண்டு தீபாவளிக் காலகட்டத்திற்கான இறைச்சி விலை, ஏறக்குறைய கடந்த ஆண்டின் விலை போல இருப்பதாக ஹாஜி எம் என் எஸ் டிரேடிங் இறைச்சி விநியோக நிறுவனத்தின் உரிமையாளர் திரு முஸ்தஃபா ஷாகுல் ஹமீது கூறினார்.

சிங்கப்பூரர்கள் சாப்பிடும் ஆட்டிறைச்சியின் பெரும்பகுதி செம்மறிக் குட்டி ஆடுகளைச் சேர்ந்ததாகும். ஆஸ்திரேலியாவிலிருந்தும் நியூசிலாந்திலிருந்தும் அவை இறக்குமதி செய்யப்படுவதாக இங்குள்ள 50 இறைச்சிக்கடைகளுக்கு விநியோகம் செய்யும் திரு முஸ்தஃபா கூறினார்.

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு குறையும்போது அங்கிருந்து இறைச்சியை அதிகமாக இறக்குமதி செய்யலாம் என்று ‘ஜி. வி மீட்’ இறைச்சிக் கடையின் உரிமையாளர் திரு விஜய் கூறினார்.

சரக்குக் கப்பலுக்கான போக்குவரத்துச் செலவு, வாகனத்திற்கான எரிபொருள் செலவு உள்ளிட்டவை ஏறுமுகமாக இருப்பதால் விநியோகிப்பாளர்களுடன் பேரம் பேசுவதும் கடினம். இடையில் ஏற்படும் தளவாடச் செலவுகளால் வெளிநாடுகளிலிருந்து இறைச்சி வாங்கப்படும் விலை, சிங்கப்பூரை அடைந்த பிறகு இரட்டிப்பதாக திரு விஜய் கூறினார்.

இறைச்சி வகைகளுக்கான குளிரூட்டும் வசதிகளைக் கொண்ட அறைகளுக்கான வாடகை அதிகரித்துவிட்டது. அத்தகைய அறைகளும் சிங்கப்பூரில் அதிகம் இல்லாததால் இட அளவைப் பொறுத்து $3000 முதல் $10,000 வரை இறைச்சி கடைக்காரர்கள் கட்டவேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு நடப்புக்கு வந்த மலேசியாவின் ஏற்றுமதித் தடை தற்போது இல்லை என்றாலும் கோழி விலை ஏறியுள்ளதை திரு முஸ்தஃபா கூறினார். முன்பு $5, $6 விலையில் விற்கப்பட்ட கோழி, தற்போது $8, $10 என விற்கப்படுகிறது.

தற்போது கோழிக்கான தட்டுப்பாடு இல்லை. பெரும்பகுதி கோழிகள் மலேசியாவிலிருந்து உயிருடன் இங்கு கொண்டுவரப்பட்டு அறுக்கப்படுகின்றன. உறைய வைக்கப்பட்ட கோழிகள், பிரேசிலிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

மலேசியாவில் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் உணவின் விலை அதிகரித்திருப்பதால் அங்கிருந்து சிங்கப்பூர் இறக்குமதி செய்யும் கோழிகளின் விலை அதிகமாவதாக மலேசிய கோழிப்பண்ணைக்காரர்கள் கூறுவதாக திரு விஜய் சொல்கிறார்.

இறைச்சி, கோழியின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருந்தாலும் உணவு வாங்குவதில் அதிகம் செலவு ஏற்பட்டால் முதலில் அவற்றைக் குறைத்து வாங்கப்போவதாக நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்குத் தலைவியாக இருக்கும் மின்னிலக்க நிபுணர் ஸ்ருதி கோபாலகிருஷ்ணன், 54, தெரிவித்தார்.

“காய்கறி விலை ஏறினாலும் இறைச்சி உணவுகளைக் காட்டிலும் உடலுக்கு நல்ல சத்துக்கள் அதிகம் உள்ளன,” என்றார் திருவாட்டி ஸ்ருதி.

செலவு செய்வதில் கூடுதல் கவனம்

‘இமானுவேல் டெய்லரிங்’ தையற்கடையின் உரிமையாளர் புனிதா அருள்தாஸ், 51.
‘இமானுவேல் டெய்லரிங்’ தையற்கடையின் உரிமையாளர் புனிதா அருள்தாஸ், 51. - படம்: டினேஷ் குமார்

தீபாவளிக்காகப் புத்தாடை வாங்குவது வழக்கம் என்றபோதும் அதில்தான் செலவு ஆக அதிகம் இருப்பதாக தமிழ் முரசிடம் பேசிய பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டனர்.

பல்வேறு காரணங்களால் கூடும் புத்தாடை விலைகளை இயன்றவரை குறைக்க முயல்வதாக ‘ஹே பப்லு’ கடை உரிமையாளர் எஸ். சந்தனா, 34, போன்ற ஆடைக்கடைக்காரர்கள் கூறுகின்றனர். கடை தொடங்கி மூன்று ஆண்டுகளில் ஆடை விலைகளைச் சராசரியாக 5 வெள்ளி ஏற்றியதாகக் கூறுகிறார் குமாரி சந்தனா.

“கொவிட்-19 காலகட்டத்திற்குப் பின் தையற்கூலிச் செலவு இந்தியாவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் பொருள், சேவை வரி துணிகளை இறக்குமதி செய்வதற்கான செலவைக் கூட்டியுள்ளது. இறக்குமதிக்கான சரக்குக் கப்பல் செலவும் 5 விழுக்காடு அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

ஆடைக்கடைக்காரர்களுக்கான வர்த்தகச் செலவுகள் கூடுதல் என்றாலும் கடைக்காரர்களும் தங்கள் பங்கிற்குக் கவர்ச்சியான, விதவிதமான ஆடைகளை விற்பதாலும் விலை உயர்வதாக ‘இமானுவேல் டெய்லரிங்’ தையற்கடையின் உரிமையாளர் புனிதா அருள்தாஸ், 51, கூறினார்.

ஆடை விலை ஏறினாலும் தீபாவளி என்பதால் ஆடைகளை நிச்சயம் வாங்க வேண்டும் என்று பாலர் பள்ளி ஆசிரியர் ஈஷானி சீலன், 23, குறிப்பிட்டார்.

“பஞ்சாபி உடைகள், சேலைகள் போன்ற பாரம்பரிய உடைகளின் விலை 20 விழுக்காடு அதிகரித்திருப்பதைக் காண்கிறேன். ஆனால் தீபாவளி என்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். கூடுதலாகச் செலவு செய்வது பற்றி கவலைப்படமாட்டேன்,” என்று அவர் கூறினார்.

இதற்கு நேர்மாறாக, ஆடைகளின் அவசியம் உணவுக்கு அடுத்த நிலையில் இருப்பதாகக் கருதுகிறார் சுயதொழில் செய்யும் கர்ணன் பழனிவேலு, 45.

“செலவைக் குறைக்கவேண்டும் என நான் விரும்பினால் முதலில் ஆடைகளுக்கான செலவைக் குறைத்துக்கொள்வேன்,” என்று மனைவி, மகளுடன் வந்திருந்த திரு கர்ணன் கூறினார்.

ஆடைகளின் விலை அதிகரித்திருப்பதால் லிட்டில் இந்தியாவில் மற்ற கடைகளைத் தவிர்த்து முடிந்தவரை தேக்கா நிலையத்தில் தீபாவளித் துணிமணிகளை வாங்குவதாக ஆசிரியர் கீதா மெய்யப்பன், 40, தெரிவித்தார். இவ்வாண்டு கடைகளில் விற்கப்படும் ஆடை வகைகள் கூடியிருப்பதைத் தாம் கவனித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்தாப்புகளுக்கான விலையில் கடந்தாண்டுடன் ஒப்புநோக்க இவ்வாண்டின்போது எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று கேம்பல் லேன் சந்தைக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

கேம்பல் லேனின் முகப்பிலுள்ள ஒரு மத்தாப்புக் கடை.
கேம்பல் லேனின் முகப்பிலுள்ள ஒரு மத்தாப்புக் கடை. - படம்: டினேஷ் குமார்

தங்கத்தின் தேவை குறைந்தது

தீபாவளிக்காக சிறிய மூக்குத்தி வாங்கிய பாதுகாவல் அதிகாரி பி.புஷ்பவல்லி, 63, ஆபரண விலை இம்முறை அதிகரித்ததே என எண்ணி வருத்தப்படுவதாகக் கூறினார்.

இந்த வருத்தம் தமக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாண்டு தீபாவளிக்காக ஆபரணங்கள் எதுவும் வாங்கப்போவதில்லை என்றார் பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரியும் சங்கீதா, 41.

விலை அதிகரிப்பால் வாடிக்கையாளர்கள் தேவை, கடந்தாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் 20 விழுக்காடு குறைந்துள்ளதாக ‘டபிள்யுஜிசி’ எனப்படும் உலக தங்க மன்றம் குறிப்பிட்டது.

ஆபரணங்களுக்கான தேவையும் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிலிருந்து இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 16 விழுக்காடு குறைந்துள்ளது. அதே காலகட்டத்திற்குத் தங்கக் கம்பிகளுக்கும் நாணயங்களுக்குமான தேவை 1.4 டன்னிலிருந்து 1.1 டன்னுக்குக் குறைந்துள்ளது.

தங்க விலையின் ஏற்றத்தால் மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்துள்ளனர் என்று கூறினார் ‘அஸாத் ஜுவல்லரி’ கடையின் உரிமையாளர் முகம்மது நஜமுதீன், 57. முன்னதாக ஒரு கிராம் தங்கத்திற்கான 80, 81 வெள்ளி தற்போது 85 வெள்ளிக்கு உயர்ந்திருப்பதைச் சுட்டினார். தங்க விலை சில காலத்திற்குப் பிறகு குறையலாம் எனச் சில வாடிக்கையாளரகள் எதிர்பார்த்தபோது தற்போதைக்கு ஏறிக்கொண்டுதான் இருக்கிறது என்று திரு முகம்மது கூறினார்.

ரோடியம், வெள்ளைத் தங்கம், இளஞ்சிவப்புத் தங்கம் என்ற முக்கலவைத் தங்கம் ஆபரணக் கடைகளில் பிரபலத் தெரிவாக இருப்பதாகவும் திரு முகம்மது கூறினார்.

பண்டிகைக் காலத்தில் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர் என்று குறிப்பிட்ட ஜோயாலுக்காஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஃபிரெட்டி, அவர்கள் முந்தைய விலையில் வாங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

வாடகை, வர்த்தகச் செலவுகள் ஏற்றம்

பர்ச் ரோட்டில் உள்ள சந்தையில் கடைக்காரர்களிடம் 4,000 வெள்ளிக்கும் 6,000 வெள்ளிக்கும் இடையிலான வாடகை வசூலிக்கப்படுவதாக நவம்பர் 1ஆம் தேதியன்று வெளிவந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கட்டுரை குறிப்பிடுகிறது.

கடைகளுக்கான வாடகை ஏற்றப்பட்டுள்ளதாக கேம்பல் லேன் சந்தைகளில் கடை அமைத்திருக்கும் கடைக்காரர்களும் தமிழ் முரசிடம் கூறினர்.

வாடகை விலையேற்றம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் கடைகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று கேம்பல் லேனில் ‘செலபிரேஷன் ஆஃப் தி ஆர்ட்ஸ்’ கடையின் உரிமையாளர் ‘லட்சுமி’ (புனைபெயர்) கூறினார்.

வாடகைச் செலவு மட்டுமின்றி ஊழியர் செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளால் பொருள்களின் விலையை மாற்றாமல் இருக்க இயலவில்லை என்று ஜோதி ஸ்டோர் புஷ்ப கடையின் உரிமையாளரும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) ஆலோசகருமான ராஜ்குமார் சந்திரா கூறினார்.

“கொவிட்-19 காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிச் சந்தைகள் இடம்பெறவில்லை. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வாடகை கிட்டத்தட்ட 30% அதிகரித்துள்ளது. கூடாரமிடுதல், மின்சாரம் வழங்குதல், துப்புரவு, பாதுகாப்புப் பணிகள் போன்ற காரணங்களால் இந்த ஏற்றம் என்றார் அவர். செலவுக்கு ஈடாக வாடகையை ஏற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார் திரு ராஜ்குமார்.

பொருளியல் நிபுணர்: விழாக்காலம் விதிவிலக்கல்ல

பணவீக்கம் குறைந்தாலும் அது விலையேற்றத்தில்தான் முடியும் என்று சிஐஎம்பி வங்கியைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் சோங் செங் வூன் தெரிவித்தார்.

தீபாவளி போன்ற விழாக்காலங்களில் மளிகைப் பொருள்களின் விலையேற்றம் ஓரிரு மாதங்களுக்கு நீடிப்பது வழக்கம் என அவர் குறிப்பட்டார்.

இந்தியாவின் பாஸ்மதி அரிசி இறக்குமதிக்கான தடை, வெங்காய ஏற்றுமதிகள் மீதான 40 விழுக்காடு தீர்வை போன்ற அறிவிப்புகள் தொடரும் வரை விலையேற்ற அபாயங்கள் இருக்கக்கூடும்.

ஆசிய நாடுகளில் ஏற்படும் வெள்ளம், வறட்சி ஆகியவற்றாலும் மிளகாய் விலைகள் அதிகரித்து வருவதைப் பேராசிரியர் சோங் சுட்டினார்.

வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என அஞ்சி விலையேற்றம் செய்யாதிருக்கும் கடைக்காரர்கள் சிரமத்திற்கு ஆளாகக்கூடும் எனக் கூறினார். அவர்களில் பலர் வேறு வழியின்றி இப்போது விலையேற்றம் செய்து வருவதாகவும் சொன்னார்.

தங்கள் தொழிலை நம்பி பிழைப்பு நடத்தும் கடைக்காரர்களின் நிலையை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ளும்படி பேராசிரியர் சோங் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்