இதமளிக்கும் புதிய குடும்பம்

முன்பு மனைவியுடனும் இரு மகன்களுடனும் ஒன்றுகூடி, புத்தாடை அணிந்து, தீபாவளியைப் புன்னகையோடு கொண்டாடிய தருணங்களை நினைவுகூர்ந்து கலங்கினார் வைத்தியலிங்கம் வீரப்பன், 84.

இன்று மூத்தோர் சமூக இல்லவாசியாக அதே பண்டிகையை அவர் வரவேற்கிறார்.

மூத்த மகன் திருநாவுக்கரசு மீது அளவுகடந்த அன்பைப் பொழிந்த வீரப்பன், அந்த மகன் மாரடைப்பால் இறந்த மறு ஆண்டே மனைவியையும் அதே நோய்க்குப் பறிகொடுத்தார். அதைத் தொடர்ந்து இளைய மகன் தம் குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர முடிவெடுத்தது வீரப்பனுக்கு மேலுமோர் அடி.

அந்த மனப்போராட்டத்திலிருந்து மீண்டுவர அவருக்குத் தோள் தந்தது ‘ஏவா மூத்தோர் சமூக இல்லம்’. மகனுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்து ஆஸ்திரேலியா செல்லாமல் மூத்தோர் சமூக இல்லத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் வீரப்பன்.

தமது கடைசி காலத்தை குடும்பத்துடன் கழிக்க முடியாவிட்டாலும் மூத்தோர் இல்லத்தில் அவருக்கு மற்றொரு குடும்பம் கிடைத்துள்ளது.

மங்கலத் திருநாளான இன்று, அவர் இல்லத்தில் குடியிருக்கும் மற்ற முதியவர்களுடன் பலவித நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சுவையான உணவருந்தி தன்னுடன் அறையில் தங்கியிருக்கும் மற்றோர் இந்திய முதியவருடன் மனம் விட்டு உரையாடி பொழுதைக் கழிக்கிறார்.

தமிழகத்தின் சிதம்பரம் நகரிலிருந்து தமது 16வது வயதில் சிங்கப்பூர் மண்ணில் கால் எடுத்து வைத்த வீரப்பன், இங்கு ஜூரோங் கடல் பட்டறையில் பணியாற்றினார். வீரப்பனுக்கு உடன்பிறப்புகள் அறுவர். தற்போது அவர் யாருடனும் தொடர்பில் இல்லை.

மாதம் இருமுறை இளைய மகன் சிவஞானம் தொலைபேசிவழி வீரப்பனைத் தொடர்புகொண்டு பேசுவது அவர் மனதைக் குளிரச் செய்கிறது.

கடந்த ஈராண்டுகளாக இல்லத்தில் தங்கியுள்ள வீரப்பனை அதிகம் கவனித்துக்கொள்வது அங்கு பணியாற்றும் மூத்த சமூக சேவையாளர் திருவாட்டி விஜயா பொன்னுசாமி, 68.

தீபாவளிக்கு முன் தனது வீட்டில் தயாரித்த முறுக்குகளையும் பலகாரங்களையும் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு வழங்குகிறார் விஜயா.

“முதலில் வீரப்பன் இங்கு வந்தபோது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. மனைவியையும் மூத்த மகனையும் இழந்த அவர், மகனுக்குச் சுமையாக இருக்கக்கூடாது என்று தன்னலம் கருதாதவர். அந்த முதியவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நான் மேற்கொள்ளத் தொடங்கினேன்,” என்று கடப்பாட்டு உணர்வுடன் கூறினார் விஜயா.

தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் வைத்திருக்கும் வீரப்பனுக்கு புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் வாசித்து நேரம் கழிப்பது இயல்பான ஒன்று. அத்துடன், இல்லத்தில் இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் அவர் மகிழ்ச்சியுடன் உடற்பயிற்சி மேற்கொள்வதைக் காணலாம்.

தீபாவளிக்குப் புத்தாடை அணிய முடியாமல் போனாலும் திரு வீரப்பன், “இந்த இல்லம் எனக்கு சொர்க்கம் போல. எவ்வித சிரமமும் எனக்கு இங்கில்லை. மனைவியையும் மகனையும் எண்ணி ஏங்கினாலும் இந்த இடம் இதமளிக்கிறது,” என்று ஒரு புன்முறுவலுடன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!