நான்கு சுவர்களுக்குள் அமைதியான ஒரு தீபாவளி

ஒரு காலத்தில் ரவி (உண்மை பெயரல்ல) தீபாவளிப் பண்டிகையைத் தம் குடும்பத்துடன் தடபுடலாகக் கொண்டாடினார். ஆனால், 62 வயதாகும் இவருக்கு, இப்போது தன் சிறையின் நான்கு சுவர்கள்தான் துணை.

தீபாவளியை மனைவி, இரு மகன்களுடன் வரவேற்றவர், கடந்த ஐந்தாண்டுகளாக சிறையில் மற்ற கைதிகளுடன் உணவருந்தி தொலைக்காட்சி பார்த்துக் கழித்து வருகிறார்.

ஒவ்வொரு முறையும் தீபாவளியன்று குடும்பத்தினருடன் கோவில்களுக்குச் சென்று உணவு விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ரவி, தீபாவளிக்குத் தன் மகன் அனுப்பிய வாழ்த்தட்டையைப் பார்த்துக் கண்கலங்குகிறார்.

சுய தொழில் நடத்தி வந்தபோது, பொய்த் தகவல்கள் கொண்ட ஆவணங்களைத் தயார் செய்ததற்காக அவரது வாழ்க்கை தடம்புரண்டது. ரவி இன்னும் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புகளுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் வந்த இவர், கல்வியில் சிறப்புத் தேர்ச்சி கண்டு பணி நிமித்தமாகப் பல தென்கிழக்காசிய நாடுகளில் வசித்த அனுபவமுடையவர்.

தந்தையின் அன்பும் அரவணைப்பும் அவரின் மகன்கள் இருவருக்கும் கிடைக்காமல் இருந்தாலும், இருவரும் தந்தையைப் பெருமைப்படுத்தும் வகையில் கல்வியில் சாதித்து முழுநேரப் பணியிலும் தற்போது உள்ளனர்.

சிறை வாசலைப் பார்ப்பதற்கு முன்பு தீபாவளிக்காக இந்தியா சென்ற அனுபவங்களைக் கலக்கத்தோடு நினைவுகூர்ந்த ரவி, “ஒரே விழாக்கோலமாக இருக்கும். எனது சகோதரிகள், உறவினர்கள் ஆகியோருடன் கொண்டாடிய தருணங்களை மறக்க முடியாது,” என்று சோகம் ததும்பிய குரலில் கூறினார்.

சிறைக்குச் சென்ற முதல் இரண்டு ஆண்டுகள், தன் குடும்பத்தை நினைத்து ரவி கண்ணீர் வடிக்காத நாளே இல்லை. புதிய சூழலுக்கேற்ப மாறிக்கொள்வது, ஒரே அறையில் மேலும் மூன்று கைதிகளுடன் வாழ வேண்டிய நிலையை ஏற்றுக்கொள்வது என அவர் சிரமப்பட்டார்.

மாதத்தில் ஒரு முறை மட்டுமே ரவி தன் குடும்பத்தாரை நேரடியாக 20 நிமிடங்களுக்குச் சந்திக்க முடியும். இல்லாவிடில் அவர் மெய்நிகர் அல்லது மின்கடிதங்கள் வழியாகத்தான் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும்.

தன் விடுதலைக்குப் பிறகு குடும்பத்தினரைக் கட்டித்தழுவும் தருணம் வர, எஞ்சியுள்ள நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் இவர். சிறை வாழ்க்கையைத் தனக்கு சாதகமாக அமைத்துக்கொள்ளும் வகையில் அங்கு முழுநேரப் பணியில் ஈடுபடுகிறார்.

ஒரு நாளில் ஒரு மணி நேரம் மட்டும்தான் கைதிகள் அவர்களின் சிறை அறையிலிருந்து வெளியே வர முடியும்.

சிறைவாசிகள் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் திறனையும் வளர்த்துக்கொள்கிறார்கள். படம்: சிங்கப்பூர் சிறைச் சேவை

வேலையில் ஈடுபடுவதால் நேரம் விரைவாக நகர்வதாகக் கருதும் ரவி, ஓவியம் வரைதல், மண் பாண்டங்கள் செய்தல் ஆகியவை மூலம் நேரத்தைக் கழிக்கிறார்.

புத்தகம் வாசித்தல், செய்தித்தாள் வாசித்தல், மற்ற சிறைவாசிகளுடன் உரையாடுதல் போன்ற நடவடிக்கைகளிலும் ரவி ஈடுபடுவதுண்டு. கைதிகளின் மனநலன் காக்க ஒவ்வொரு வாரமும் சமயம் சார்ந்த மன ஆலோசனை அமர்வும் உள்ளது.

அதில் கலந்துகொள்ளும் ரவி, “அமர்வுகளில் கோவில்களைச் சேர்ந்த தொண்டூழியர்கள் சிலர் பிரசாதமும் விபூதியும் கொண்டு வருவார்கள். இம்முறை தீபாவளிக்கு நான் அதை எதிர்பார்த்திருப்பேன்,” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.

கற்றலில் ஈடுபடும் சிறைவாசிகள். படம்: சிங்கப்பூர் சிறைச் சேவை

சிறை வாழ்க்கை தனக்கு மனிதநேயத்தையும் தன்னடக்கத்தையும் கற்றுத்தந்துள்ளதாக சொன்னார் ரவி.

சிறைக் கைதிகள் விடுதலைக்குப் பிறகு தவறான கோணத்தில் பார்க்கப்படுவதை உடைத்தெறிய விரும்பும் ரவி, ஒரு முழுநேரப் பணியில் சேர்ந்த பின்னர் சமூக சேவையிலும் ஈடுபட விருப்பம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!