தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்ப வளர்ச்சியோடு பீடுநடை போடும் தமிழ் முரசு

4 mins read
1ca27c10-c5d8-43bc-82e1-98051a2c57a7
செய்திகளை முழுமையாகக் கணினியில் தட்டச்சு செய்யத் தொடங்கிய காலகட்டம். - படம்: தமிழ் முரசு

அச்சேற்றத்திற்குக் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கிய அதே காலகட்டத்தில் இணையத்திலும் உலா வந்த முன்னோடி நாளிதழ்களில் தமிழ் முரசும் ஒன்று எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.

உலோக அச்சுகளால் ஆன எழுத்துருக்களை செய்திகளாகக் கோத்து, பக்கங்களை வடிவமைக்கும் முறையைக் கொண்டிருந்த தமிழ் முரசில், 1990ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கணினி அறிமுகமானது. அன்றைய ஆசிரியர் திரு வை.திருநாவுக்கரசு கணினிமயப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்தார். அப்போதுதான் எனது பணியும் தமிழ் முரசில் தொடங்கியது.

அடுத்து ஆசிரியர் பொறுப்பு வகித்த டாக்டர் சித்ரா ராஜாராமும் கணினிமயப்படுத்தும் பணியை முன்னெடுத்துச் சென்றார். அவரது விடாப்பிடியான முயற்சியால் 1999ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் தேதியிலிருந்து முரசின் அனைத்துப் பக்கங்களும் கணினியில் அச்சேற்றப்பட்டு வடிவமைக்கப்பட்டன.

கடந்த 35 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பங்களின் பெருமாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் முரசில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களும் பல்வேறு மேம்பாடுகளைக் கண்டுவந்துள்ளன.

ஒருங்குறி எழுத்துமுறை

‘யுடிஎஃப்-8 யூனிக்கோடு’ என்னும் ஒருமுகக் குறியீட்டு முகவரியைத் தமிழ் மொழி பெற்று ஆண்டுகள் பல ஆனாலும் அது செய்தித்துறைக்கான பக்க வடிவமைக்கப் பயன்படும் மென்பொருள்களுக்கு ஏற்பின்றி இருந்தது. இன்னும் அதே நிலையில்தான் உள்ளது என்றே கூறவேண்டும். தமிழ் யூனிக்கோடு ஒருங்குறியில் குறைபாடு உள்ளதாகவும் அதற்கு மாற்றுக் குறியீடு வேண்டும் என தமிழ் மொழியில் பற்றுமிகு கணினியாளர்களும் தமிழ் அறிஞர்களும் குரல் கொடுத்தனர். யுடிஎஃப்-8 யூனிக்கோடு குறியீட்டைக் காட்டிலும் பன்முறை சிறப்பாகச் செயலாற்றும் வகையில் ஒவ்வொரு எழுத்துருவுக்கும் ஓர் அடையாளம் என்ற அடிப்படையில் ‘டேஸ்16’ (TACE16) என்னும் குறியீட்டு முறை உருவாக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக ‘டேஸ்16’ என்னும் குறியீட்டு முறை இன்னமும் அங்கீகரிக்கப்படாத நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘யூனிக்கோடு’ ஒருங்குறி முறையின் பயன்பாடு செய்தித்துறையிலும் பரவலாக்கம் பெறத் தொடங்கியுள்ளது. எனவே, உலகத்தோடு ஒத்துப்போக வேண்டிய கட்டாயத்தில் தமிழ் முரசும் தன்னை மாற்றிக்கொண்டது.

‘டேஸ்16’ என்னும் குறியீட்டாலான எழுத்துருக்களை நீண்ட காலமாகப் பயன்படுத்திவந்த தமிழ் முரசு, பத்தாண்டுகளுக்கு முன்னர், பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘யுடிஎப்-8 யூனிக்கோடு’ என்னும் ஒருங்குறி எழுத்து முறையை ஏற்றுக்கொண்டது.

பிழைதிருத்தி மென்பொருள்

தகவல் தொழில்நுட்பம் உச்சத்தைத் தொட்டுள்ளபோதிலும் ஆங்கில மொழியைப் போலத் தமிழ் மொழிக்குப் பிழைதிருத்தும் மென்பொருள் எதுவும் தமிழ்ச் செய்தித் துறைப் பயன்பாட்டில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

உலகெங்கிலும் தமிழ் மொழி சார்ந்த மென்பொருள் நிறுவனங்களும் தனிப்பட்ட கணினி, தமிழ் ஆர்வலர்களும் பிழைதிருத்தும் துணைக்கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில பிழைதிருத்திகள் சந்தையில் இருக்கவே செய்கின்றன. இருப்பினும், அவை செய்தித்துறைக்கு ஏற்ப பயன்படுமா என்பது ஐயமே.

செய்தித்தாளில் முக்கியமாகக் கருதப்படுவது, பத்திகளில் வரியின் கடைசியில் சொல்லைச் சீராகப் பிரிப்பது.

சொற்பிரிப்புமுறை பொதுவாக, செய்தித்துறையினர் பயன்படுத்தும் மென்பொருள்களில், இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்ட வசதிகள் உள்ளன. அவற்றில் தமிழ் மொழிக்கென ஒரு கோப்பு உள்ளது. அதுதான் இப்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. அதில், சொற்கள் முறையாகப் பிரிக்கப்படுவதில்லை.

சில மென்பொருள் நிறுவனங்கள், செய்தித்துறை மென்பொருளுக்கென சொற்பிரிப்புத் துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளன. அவற்றிலும் சில குறைபாடுகள் உள்ளன. அந்தத் துணைக்கருவிகளைச் செயல்படுத்தும்போது, உரையில் உள்ள எல்லா மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து சொற்பிரிப்புக்கான ஒரு குறியீட்டை உட்செலுத்தும். இந்த முறையில் சொற்பிரிப்பு வசதி கிட்டினாலும், பல சொற்பிரிப்புகள் சீராக அமையும் என்று சொல்ல முடியாது.

இதுபோன்ற உரைகளை நகலெடுக்கும்போது அந்தக் குறியீடுகளும் அந்த உரையுடன் சேர்ந்துகொள்ளும். அந்தச் சொற்பிரிப்புக் குறியீடு இருந்தாலேயொழிய அந்த உரையில் சொற்பிரிப்பு சாத்தியமாகாது. அத்துடன், இவை ஆங்கில மொழி கொண்டுள்ள சொற்பிரிப்பு நடைமுறையில் இருந்து மாறுபட்டது. இது சரியான நடைமுறையும் அன்று. அந்த நடைமுறையைத்தான் தமிழ் முரசும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தது.

ஆனால், இப்போது தமிழ் முரசு, உலக மொழிகளுடன் ஒத்துப்போகும் வகையில், சீரான சொற்பிரிப்பு முறையை மேம்படுத்தி நடைமுறையில் கொண்டுவந்துள்ளது. மேலும், அதனைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அத்துடன், இப்போது ‘சிஎம்எஸ்’ என்னும் இணையம் சார்ந்த மென்பொருள் வழியாகச் செய்திகளைத் தட்டச்சு செய்து, அதை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு, அச்சுக்குத் தயார்நிலையில் வைக்கும் வசதியைப் பெற்றுள்ளது.

பக்க வடிவமைப்புகளைச் செய்யும் பணிக்கும் இணையம் சார்ந்த ‘சிஎம்எஸ்’ மென்பொருளையே தமிழ் முரசு பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் தகவல்கள், படங்கள், பக்கங்கள், காணொளிகளை எளிதாக ஒருவர் பகிர்ந்துகொள்ள முடியும். அத்துடன், உள்ளடக்கங்களை உள்ளிடுதல், பிழை திருத்துதல், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடுதல், அச்சுக்குத் தயார்ப்படுத்துதல் போன்ற பணிகள் ஒன்றுக்கு மேற்பட்டோரால் செய்ய இயலும்.

தமிழ் முரசின் தொடர்முயற்சி

இன்று 90வது ஆண்டைக் கொண்டாடும் பெருமைமிகு தமிழ் முரசு, அனைத்துலகத் தரத்திற்கொப்ப, காலத்திற்கேற்ப, வளர்ந்துவரும் தகவல்தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப செய்தித்தாளையும் மின்னிதழையும் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்துள்ள அதன் செயலியையும் மேம்படுத்தும் நோக்கில், பல புதிய நுட்பங்களைக் கையாளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும், பாடுபடும்.

இந்நாளை நாம் கொண்டாடும் வேளையில் தமிழ் முரசின் நிறுவனர் மறைந்த தமிழவேள் கோ.சாரங்கபாணியையும் கணினிமயப் பணியைத் தொடங்கியதோடு, செய்தித்துறையில் நல்ல தமிழைப் பயன்படுத்தவும் கலைச்சொல் உருவாக்கத்தை ஊக்குவித்தவருமான தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் வை.திருநாவுக்கரசையும் நினைவுகூர்வோமாக!

குறிப்புச் சொற்கள்