சிறப்புத் தேவையுடையோருக்கு ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில் செப்டம்பர் 2ஆம் தேதியன்று ஒன்பதாவது வருடாந்திர ‘ரன் ஃபார் இன்க்லூஷன்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்நிகழ்வில் 2000க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்தில் ஒன்றுகூடினர்.
‘ரன்னிங் ஹவர்’ கூட்டுறவின் ஏற்பாட்டில், சிறப்புத் தேவை உடையோருடனும் அவர்களது பராமரிப்பாளர்களுடனும் இணைந்து பொதுமக்கள் 3 கி.மீ., 5 கி.மீ. ஓடினர், நடந்தனர் அல்லது 18 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார். மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டெனிஸ் புவாவும் நிகழ்ச்சிக்கு வருகையளித்திருந்தார்.
பங்கேற்றவர்களில் சிறப்புத் தேவையுடையோருக்குக் கண்பார்வை, செவித்திறன் குறைபாடுகளும் ‘ஆட்டிசம்’ போன்ற வளர்ச்சி, நரம்பியல் சார்ந்த கோளாறுகளும் இருந்தன.
நடை, ஓட்டங்களில் சிறப்புத் தேவை உடையோரும் தொண்டூழியர்களும் ஒரு கைப்பட்டையின் இரு நுனிகளையும் பிடித்துக்கொண்டு ஓடினர். அதேபோல், சிறப்புத் தேவைகள் உடையோர் பின்னும் தொண்டூழியர்கள் முன்னும் அமர்ந்தவாறு மிதிவண்டி ஓட்டினர்.
பாராசைக்கிளிங் சிங்கப்பூர் கூட்டமைப்பு உறுப்பினர்களும் கை சைக்கிள்களை 18 கி.மீ தூரத்திற்கு ஓட்டினர்.
சிறப்பு அம்சமாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணைக் கட்டியவாறு அமைந்த நடை அங்கமும் நடந்தேறியது. பங்கேற்பாளர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு, கண் தெரிந்தவரின் உதவியுடன் ஓட்டத்தின் முதல் 500 மீட்டர் நடந்தனர். இதன்வழி பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் நிலையை மக்களால் உணர முடிந்தது.
வழக்கம்போல் ரன்னிங் ஹவர், சிறப்புத் தேவை உடைய அதன் உறுப்பினர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் ‘சோல்மேட்’ என்ற மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றத் திட்டத்தின்கீழ் இலவச அனுமதி வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வின் பங்காளியாக இருந்த சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம், அதன் 180வது ஆண்டு நிறைவைக் கொண்டாட $32,400 ($180 x 180 கி.மீ) தொகையை ரன்னிங் ஹவருக்கு நன்கொடையாக வழங்கியது.
இந்த நன்கொடைத் தொகை, ரன்னிங் ஹவர் வாரத்தில் நான்கு முறை சிறப்புத் தேவை உடையோருக்கும் பராமரிப்பாளர்களுக்கும் நடத்தும் ஓட்டங்களுக்கும் யோகா பயிற்சிகளுக்கும் சிறப்புப் பள்ளிகளிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு வழங்கும் விளையாட்டு ஊக்குவிப்புத் திட்டங்களுக்கும் பயன்படும்.
இவ்வாண்டின் ஆகப் பெரிய ஓட்டக்குழுவும் சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம்தான். சுமார் 330 ஊழியர்களும் அவர்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் இணைந்து மொத்தம் 180 கி.மீ கடந்தனர்.
5 கி.மீ ஓட்டத்தில் பங்கேற்ற தன் அக்கா மகளின் விடாமுயற்சியைப் பற்றி பகிர்ந்துகொண்டார் திரு ஆறுமுகம், 50.
“அவர் அன்றாடம் தனியாகவும் வாரத்திற்கு இருமுறை ஓட்டக் குழுவினருடனும் ஓடுவார். தவறாமல் பந்தயங்களில் கலந்துகொள்வார். பாட்டுப் பயிற்சியும் செய்துவருகிறார்,” என்றார் அவர்.
‘டீம் நிலா’ தொண்டூழியரான அந்தோணி, 30, “வெளிநாட்டு ஊழியரான எனக்கு உதவும் சிங்கப்பூருக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற நோக்கில் இக்குழுவில் சேர்ந்து தொண்டாற்றி வருகிறேன். பிறரையும் சமூக சேவையாற்ற ஊக்குவிக்கிறேன்,” என்றார்.
வாரந்தோறும் நடத்தப்படும் நடவடிக்கைகளில் சிறப்புத் தேவை உடையோர், பராமரிப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்க விரும்பினால் https://www.runninghour.com/ வழி பதிவுசெய்யலாம் என்றும் கூறியது ரன்னிங் ஹவர்.