23வது காமன்வெல்த் விளையாட்டுகள் தொடக்கம்

23வது காமன்வெல்த் விளையாட்டுகள் தொடக்கம்

2 mins read
இம்முறை குறைந்த செலவில் காமன்வெல்த் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன
19ff9289-76cb-4d7f-815d-2087fc1564f7
கிளாஸ்கோ நகரில் ‘ஹைட்ரோ அரீனா’வில் காமன்வெல்த் விளையாட்டுகளின் தொடக்க நிகழ்ச்சி. - படம்: இபிஏ
multi-img1 of 2

கிளாஸ்கோ: பிரிட்டனின் மூன்றாவது சார்ல்ஸ் மன்னர் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் இவ்வாண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளை வியாழக்கிழமை (ஜூலை 23) அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.

இது 23வது காமன்வெல்த் விளையாட்டுகளாகும். செலவைக் குறைக்க இவ்வாண்டின் விளையாட்டுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

10 விளையாட்டுகள், சிறப்புத் தேவையுடையோருக்கான ஆறு விளையாட்டுகள் ஆகியவற்றில் 74 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 3,000 விளையாட்டாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 215 தங்கப் பதக்கங்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.

12 ஆண்டுகளுக்கு முன்பும் கிளாஸ்கோ நகரம்தான் காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்றுநடத்தியது.

மனைவி கமிலியாவுடன் சேர்ந்து சார்ல்ஸ் மன்னர் விளையாட்டுகளைத் தொடங்கிவைத்தார்.

கிளாஸ்கோவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோ அரீனா எனும் உள்ளரங்கு வளாகத்தில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த அரங்கில் 14,000 பேர் அமர்வதற்கு வசதி உண்டு.

“நாம் ஒன்றுகூடும் வேளையில் ஒவ்வொரு வீரர், குழுவின் கடமை உணர்வையும் திறமையையும் கொண்டாடுகிறோம். உங்களின் விடாமுயற்சி எங்களை ஊக்குவிக்கிறது. வரும் நாள்களில் நீங்கள் சாதனைகள் நிகழ்த்தவிருப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்,” என்று மன்னர் சார்ல்ஸ் விளையாட்டு வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.

உள்ளரங்கில் தொடக்க நிகழ்ச்சி

காமன்வெல்த் விளையாட்டுகளின் தொடக்க நிகழ்ச்சி முதன்முறையாக உள்ளரங்கு வளாகத்தில் நடைபெற்றது.

காமன்வெல்த் விளையாட்டுகள் முதன்முதலில் 1930ஆம் ஆண்டு ‘பிரிட்டி‌ஷ் ஆட்சி விளையாட்டுகள்’ (British Empire Games) என்ற பெயரில் நடைபெற்றன. இன்றும் இவ்விளையாட்டுகளில் பங்கேற்கும் பெரும்பாலான நாடுகள் பிரிட்டனால் ஆளப்பட்டவையாகும்.

மூவாண்டுகளுக்கு முன்பு காமன்வெல்த் விளையாட்டுகள் இனி நடக்காமல் போகக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து விளையாட்டுகள் நடத்தப்படும் விதம் மறுசீரமைக்கப்பட்டது.

பின்வாங்கிய ஆஸ்திரேலிய மாநிலம்

இவ்வாண்டு காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்றுநடத்தவிருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் 2023ஆம் ஆண்டு அதிலிருந்து பின்வாங்கிக்கொண்டது. அளவுக்கதிகமான செலவை அது காரணம் காண்பித்தது.

அதனையடுத்து விளையாட்டுகளை ஏற்றுநடத்த கிளாஸ்கோ முன்வந்தது. எனினும், 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செலவில் கால்பங்கு மட்டுமே இம்முறை செலவிடப்பட்டுள்ளது.

அதோடு, நான்காண்டுகளுக்கு முன்பு பிரிட்டனின் பர்மிங்கம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுகளில் கிட்டத்தட்ட பாதிதான் இம்முறை இடம்பெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுஉலகம்பிரிட்டன்