பண்டைய காலத்து இந்திய விளையாட்டான ‘கோ கோ’வை சிங்கப்பூரில் பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வகையில், ஜூலை 19ஆம் தேதி சிங்கப்பூர் - மலேசியா ஆண்கள் அணிகளுக்கு இடையே நட்புமுறை ஆட்டம் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதுவே அனைத்துலக மேடையில் சிங்கப்பூர் அணியின் முதல் ஆட்டம். ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில், அதாவது 12-11 என மலேசிய அணி வென்றது.
மலேசியாவிலிருந்து பெண் விளையாட்டாளர்களும் வந்திருந்தனர். சிங்கப்பூர் கோ கோ சங்கம் அடுத்து பெண்கள் அணியையும் அமைக்கவுள்ளது.
“நம் இலக்கு, கோ கோ 2030ல் ஆசிய விளையாட்டுகளிலும் 2032ல் ஒலிம்பிக்கிலும் இணைக்கப்படுவதே ஆகும். கோ கோவைப் பொறுத்தவரை ஆசியாவுக்கான நடுவமாக சிங்கப்பூர் வளரும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் ஆசிய கோ கோ கூட்டமைப்பின் இணைச் செயலாளர் ஷிட்டிஜ் அகர்வால்.
சிங்கப்பூரில் கோ கோ பயணம்
சிங்கப்பூர் கோ கோ சங்கம் 2022ல் தொடங்கப்பட்டது. முன்னாள் மலேசிய தேசிய கபடி விளையாட்டாளரான விஜய் காளிதாஸ், விளையாட்டு அதிகாரி நினைவூட்டல் பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது சிங்கப்பூரில் ‘கோ கோ’வைத் தொடங்க ஆசிய கோ கோ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சதாசிவம் ஊக்குவித்தார்.
மலேசியா, இந்தியாவின் ஆதரவுடன் பத்து செயற்குழு உறுப்பினர்களுடன் சங்கத்தைத் தொடங்கினார் விஜய்.
“நாங்கள் தொடங்கியபோது எங்களுக்கு விளையாட்டாளர்களே இல்லை. இந்தியாவில் ஆசியப் போட்டிகள் நடைபெறுகின்றன என எங்களை அழைத்தபோதும் புதிய அணி என்பதால் கலந்துகொள்ளவில்லை,” என்றார் விஜய்.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய கோ கோ சங்கம் இணையம்வழி வழங்கிய பயிற்றுவிப்பின் உதவியோடு சிங்கப்பூரில் கோ கோ பயிற்றுவிப்பாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தினர். கடந்த நான்கு மாதங்களில் சிங்கப்பூர் அணி விளையாட்டாளர்களைத் தேடி, பயிற்சி வழங்கியது.
மலேசியாவில் கோ கோ
மலேசியாவில் கோ கோ சங்கத்தை நிறுவ, பணிகள் 2019ல் தொடங்கிவிட்டன. ஆனால் கொவிட்-19 தொற்றால் சங்கம் 2022ல்தான் பதிவானது.
“வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்த விளையாட்டாளர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கி, தேசிய அணிக்குத் தேர்ந்தெடுத்தோம்,” என்றனர் மலேசிய ஆண்கள், பெண்கள் அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் சிவநாதன் அன்புசெல்வம், பிரபாகரன் சுப்பிரமணியம்.
“2023ல் அசாமில் ஆசிய நிலை போட்டிகளுக்குப் பெண்கள் அணியை அழைத்துச் சென்றோம். மலாக்காவில், இந்தியாவிலிருந்து வந்த கோ கோ அணிகளுடன் இருபாலர் அணிகளும் விளையாடின. ஜனவரியில் நடந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்றோம். அடித்தள அளவில், நிறைய பள்ளிகளில் கோ கோவைக் கொண்டுசேர்த்துள்ளோம்,” என்றார் மலேசிய கோ கோ சங்கத்தை நிறுவிய சதாசிவம்.
உயர்நிலை மாணவர்களுக்கான பயிலரங்கு
ஆட்டம் தொடங்குமுன் சிங்கப்பூரிலுள்ள மூன்று உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 மாணவர்களுக்காக மலேசிய கோ கோ சங்கம் பயிலரங்குகளை நடத்தியது.
ஏற்கெனவே விளையாட்டில் நாட்டம் கொண்ட ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவி ஹரிபிரியா, தன் தமிழாசிரியர் திரு மூர்த்தியிடமிருந்து கோ கோ பற்றித் தெரிந்துகொண்டார்.
முதன்முதலில் தமிழ்மொழி வாரத்தில் கோ கோ விளையாடினார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி மாணவி ஷிபானி. “அப்போதே எனக்குக் கோ கோ மிகவும் பிடித்துப்போனது. வகுப்பில் கோ கோ பற்றி ஆசிரியரும் கற்பித்தார்,” என்றார் ஷிபானி.
“இதுபோன்ற அனுபவங்கள்மூலம், நம்மைப் போன்ற மாணவர்கள் பலரும் நம் இந்திய பாரம்பரிய விளையாட்டைப் பிறருக்குக் கொண்டுசேர்ப்பார்கள்,” என்றார் புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளி மாணவர் ரித்திகா.
எதிர்காலத்தில் பள்ளிகளுக்கிடையே போட்டிகளை ஏற்பாடுசெய்ய சிங்கப்பூர் கோ கோ சங்கம் விரும்புகிறது.
விளையாட்டு விதிகள்
“கோ கோ என்பது கபடி போன்றது. ஓர் அணி துரத்தும் அணி, மற்றோர் அணி தப்பும் அணி. துரத்தும் அணியினர் ஒரு வரிசையாக அமர்ந்திருப்பார்கள். தப்பும் அணியினர் திடலில் களமிறங்கி, துரத்துபவர் தம்மைத் தொடாதபடி தப்பிக்க முயல்வார்கள்.
“ஓட்டத்திலேயே விதவிதமான முறைகள், விதிமுறைகள் உள்ளன. அதில்தான் சுவாரசியம் உள்ளது,” என்றனர் சிங்கப்பூர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கதிரேசன், உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர் திவாகர்.
துரத்துபவர் தம் அணியில் மற்றொருவரிடம் துரத்தும் பொறுப்பை ஒப்படைக்க, அவரைத் தொட்டபடி “கோ!” என்று சொல்லவேண்டும்.

