புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் என ஏற்கெனவே இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மூன்றாவதாக ஒருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உள்ளூர்ப் போட்டிகளில் மேற்கு வங்க மாநில அணிக்காக விளையாடிவரும் 29 வயதான அபிமன்யு ஈஸ்வரனே அவர்.
அபிமன்யுவின் தந்தை ஒரு தமிழர், தாயார் பஞ்சாபி.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் 18 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்கப் பந்தடிப்பாளர் அபிமன்யுவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல்தர டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 27 சதங்களையும் 29 அரைசதங்களையும் விளாசியுள்ள இவர், இந்திய ‘ஏ’ அணியின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
இம்மாதம் 11ஆம் தேதி உத்தரப் பிரதேச அணிக்கெதிரான ரஞ்சிக் கிண்ணப் போட்டியிலும் அபிமன்யு சதமடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா என மேலும் இரு புதுமுகங்கள் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாத வேகப் பந்துவீச்சாளார் முகம்மது ஷமியும் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவிருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணி விவரம்: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஜஸ்பிரீத் பும்ரா (துணைத் தலைவர்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரிஷப் பன்ட், சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகம்மது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
டி20 அணியில் மூன்று புதுமுகங்கள்
இதனிடையே, நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காகத் தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியில் ரமன்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், யாஷ் தயாள் என மூன்று புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.
நவம்பர் 8, 10, 13 மற்றும் 15ஆம் தேதிகளில் அப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்திய டி20 அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (அணித்தலைவர்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹார்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், யாஷ் தயாள், ஆவேஷ் கான்.