ஃபுளோரிடா: அமெரிக்காவில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா காற்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா கூடுதல் நேரத்தில் ஒரு கோல் போட்டு கொலம்பியாவைத் தோற்கடித்து, கிண்ணத்தைப் பெற்றது.
சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆட்டம், அரங்கில் ஏற்பட்ட பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 82 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது.
இயல்பான ஆட்டத்தின் முடிவில் இரு குழுக்களும் கோல் எதுவும் போடாத காரணத்தால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. ஆட்டத்தின் 112வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லாவ்டாரோ மார்டினெஸ் ஒரு கோல் போட்டார். அதே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது.
இது அர்ஜென்டினா அணிக்குக் கிடைத்த மூன்றாவது பெரிய தொடர் வெற்றியாகும். 2021ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கிண்ண வெற்றி, 2022 உலகக் கிண்ண வெற்றியை அடுத்து இப்போது 2024 கோப்பா அமெரிக்கா கிண்ணத்தையும் அது கைப்பற்றியுள்ளது.
வெற்றிக் கொண்டாட்டத்துக்கு முன் இரு முக்கிய உணர்வுபூர்வமான நிகழ்வுகள் ஆட்டத்தில் இடம்பெற்றன. முதலாவது, ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் அர்ஜென்டினா காற்பந்து அணியின் தலைவரான லயனல் மெஸ்ஸி காயம்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேறினார். தனது கடைசி அனைத்துலக போட்டியாக அமையக்கூடிய அதன் இறுதியாட்டத்தின் முழுமையாக விளையாட முடியவில்லையே என்று திடலுக்கு வெளியே கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.
மற்றொன்று, அணியின் இன்னொரு மூத்த ஆட்டக்காரரான ஏங்கல் டி மரியா தேசிய அணிக்காக விளையாடும் கடைசி ஆட்டம். மெஸ்ஸி ஆட்டத்திலிருந்து வெளியேறியதும் டி மரியாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இரு குழுக்களும் பல முறை கோல் போட முயன்றும் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தில் கூடுதல் நேரத்திலாவது கோல் ஏதும் கிடைக்குமா என்று அனைவரும் எதிர்பார்ந்திருந்த வேளையில் அர்ஜென்டினாவின் ஜியோவானி லோ செல்சோ கொடுத்த பந்தை லாவ்டாரோ மார்டினெஸ் கோலாக்கினார். அர்ஜென்டினா ரசிகர்கள் ஆனந்தத்தில் துள்ளி குதித்தனர்.
இறுதியில் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை 16வது முறையாக வென்று சாதனை படைத்தது அர்ஜென்டினா.