கோலாலம்பூர்: தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான இவ்வாண்டின் ஆசியான் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் ‘லயன்ஸ்’ அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இப்போட்டியில் ஆற்றல் குறைவாக உள்ள அணிகளில் ஒன்றாகத்தான் சிங்கப்பூர் கருதப்பட்டது. எனினும், பரம வைரியான மலேசியாவுக்கு எதிரான ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் அபாரமான முறையில் கோலின்றி சமநிலை கண்டு அரையிறுதிக்கு முன்னேறியது சிங்கப்பூர்.
மலேசியாவின் தேசிய விளையாட்டரங்கான தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 20) ஆட்டம் நடைபெற்றது. சொந்த மண்ணில் கோல் போடுவதற்கு விடாது முயற்சி செய்தது மலேசியா.
ஆனால், சிங்கப்பூரின் கோல் காப்பாளர் இஸ்வான் மாஹ்புட், தற்காப்பு வீரர்கள் அனைவரும் அதற்கு ஈடுகொடுத்து விளையாடினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) தாய்லாந்துக்கு எதிரான ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் சிங்கப்பூர் 4-2 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ‘லயன்ஸ்’ பயிற்றுவிப்பாளர் த்சுத்தோமு ஒகுரா அணியில் நான்கு வீரர்களை மாற்றினார். மாற்றங்கள் கைகொடுத்தன.
2012ஆம் ஆண்டு ஆசியான் கிண்ணத்தை வென்றது சிங்கப்பூர். அதற்குப் பிறகு ‘லயன்ஸ்’ அணி இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது இது இரண்டாவது முறையாகும்.
‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சிங்கப்பூர் அரையிறுதிக்கு முன்னேறியது. கம்போடியாவை 3-2 எனும் கோல் கணக்கில் வென்ற தாய்லாந்து முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்து, ‘பி’ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியுடன் மோதும், அப்பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணியைச் சந்திக்கும் சிங்கப்பூர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் விளையாடும் அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டம் வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 26) நடைபெறும். அந்த ஆட்டத்துக்கான நுழைவுச்சீட்டுகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) முதல் விற்பனைக்கு விடப்படும்.