நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பூப்பந்து விளையாட்டின் இறுதி ஆட்டத்துக்கு சிங்கப்பூரின் லோ கியன் இயூ தகுதிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியாவின் யூ டேபின்னைக் 21-19, 19-21, 21-12 எனும் புள்ளிக் கணக்கில் லோ வீழ்த்தினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் சிங்கப்பூரர் எனும் பெருமை 29 வயது லோவைச் சேரும்.
இறுதி ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் இரண்டாவது நிலையில் உள்ள தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்னை எதிர்த்து லோ விளையாடுவார். குன்லவுட் விடிட்சார்ன், மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனீசியாவின் ஆல்வி ஃபர்ஹானை 21-13, 21-15 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார்.
இப்போட்டித் தொடரின் தொடக்கச் சுற்றுகளில் இந்தியாவின் லக்ஷியா சென், மலேசியாவின் ஜஸ்டின் ஹோ, இந்தோனீசியாவின் ஜோனத்தன் கிறிஸ்டி ஆகியோரை லோ வீழ்த்தினார்.
இதில் இந்தோனீசியாவின் ஜோனத்தன் கிறிஸ்டி உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
