நகோயா: ஆசிய விளையாட்டுகளின் வரலாற்றில் பூப்பந்து ஒற்றையர் பிரிவு ஒன்றில் பதக்கம் வெல்லவிருக்கும் முதல் சிங்கப்பூரராகத் திகழ்கிறார் லோ கியன் இயூ.
ஆண்கள் ஒற்றையர் பிரிவுக் காலிறுதிச் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) இந்தோனீசியாவின் ஜோனத்தன் கிறிஸ்டியை 21-14, 21-19 எனும் ஆட்டக்கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் லோ.
ஆண்கள் பூப்பந்து உலகத் தரவரிசையில் 13வது இடத்தில் இருக்கும் லோ, 11 மோதல்களில் முதன்முறையாக கிறிஸ்டீயை வென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து லோவுக்குக் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
திங்கட்கிழமை (செப்டம்பர் 28) நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றில் 29 வயது லோ, ஜப்பானின் கோடாய் நராக்கோவா அல்லது தென்கொரியாவின் யூ தே-பின்னைச் சந்திப்பார். அந்த ஆட்டம் ‘இச்சினோமியா சிட்டி முனிசிப்பல் ஜிம்னேசியம்’ கூடத்தில் நடைபெறும்.
முன்னதாக இப்போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், மலேசியாவின் ஜஸ்டின் ஹோ ஆகியோரை லோ வென்றிருந்தார்.
முக்கியப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவந்துள்ள அவர் இப்போது ஆசிய விளையாட்டுகளிலும் முன்னேற்றம் காண்பித்துள்ளார். இந்த பூப்பந்துப் பருவத்தில் லோவின் தேர்ச்சி மேலும் கீழுமாக இருந்த நிலையில் ஆசிய விளையாட்டுகள் அவருக்குப் புத்துயிர் அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.
