நகோயா: சிங்கப்பூரின் தடகள ராணியான சாந்தி பெரேரா, 2026 ஆசிய விளையாட்டின் 100 மீட்டர் இறுதி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பந்தயத் தூரத்தை 11.21 நொடிகளில் அவர் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
சீனாவின் சென் யூஜியே 11.06 நொடிகளில் பந்தயத் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். பஹ்ரேனின் எடிடியோங் ஓடியோங் (11.33 நொடிகள்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாந்தி வெல்லும் மூன்றாவது பதக்கம் இதுவாகும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், அவர் 100 மீட்டரில் வெள்ளியும் 200 மீட்டரில் தங்கமும் வென்றிருந்தார்.
முன்னாள் ஓட்டப்பந்தய வீரர்களான சி. குணாளன், குளோரி பர்னபாஸ், மைமூன் பக்கர் அஸ்லான் ஆகியோருக்குப் பிறகு, பல ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் பதக்கம் வெல்லும் நான்காவது சிங்கப்பூரர் இவராவார்.
இந்தச் சாதனையை முதன்முதலில் நிகழ்த்தியவர் குணாளன்.
1966ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்ற அவர், 1970ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் வெண்கலம் வென்றார்.
அதன்பிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றார்.
குளோரி பர்னபாஸ், மைமூன் பக்கர் அஸ்லான் ஆகியோர் 1970 பேங்காக் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி வென்ற மகளிருக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் இடம்பெற்றிருந்தனர்.
பின்னர் 1974ல் 4x100 மீட்டரில் வெண்கலமும், 4x400 மீட்டரில் வெள்ளியும் அவர்கள் வென்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி நிலவரப்படி சிங்கப்பூர், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம், ஐந்து வெள்ளி, மூன்று வெண்கலம் என ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது.
