ஹேரி கேன், அலெக்சியா புட்டேலாசுக்குப் பலோன் டி ஓர் விருது

ஹேரி கேன், அலெக்சியா புட்டேலாசுக்குப் பலோன் டி ஓர் விருது

படம்: ராய்ட்டர்ஸ்

27 Oct 2026 - 7:32 pm

2 mins read

லண்டன்: காற்பந்து உலகின் மிக உயரிய தனிநபர் விருதான ‘பலோன் டி ஓர்’ விருதை வெல்ல வேண்டும் என்ற இங்கிலாந்து, பயர்ன் மியூனிக் அணியின் ஆட்டக்காரரான ஹேரி கேன்னின் நீண்ட நாள் கனவு திங்கட்கிழமையன்று (அக்டோபர் 26) நனவானது.

கோல்கள் போடுவதில் உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று தமக்கு இருக்கும் பெருமையை அவர் மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் இந்த மதிப்புமிக்க விருதை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் எனும் பெருமை கேனைச் சேரும்.

இதற்கு முன்பு கடந்த 2001ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மைக்கல் ஓவன் இந்த விருதை வென்றிருந்தார்.

மகளிர் பிரிவில், ஸ்பெயின் அணியின் ஆட்டக்காரரான அலெக்சியா புட்டேலாஸ் மூன்றாவது முறையாக ‘பலோன் டி ஓர் ஃபெமினின்’ விருதை வென்று சாதனை படைத்தார். அவரது உச்சக்கட்ட விளையாட்டுத் திறனின்போது ஏற்பட்ட காயம் காரணமாகப் பின்னடைவைச் சந்தித்த அவர், பின்னர் அபாரமாக மீண்டெழுந்து மீண்டும் மகளிர் காற்பந்தின் உச்சிக்குச் சென்று இந்த மகுடத்தைச் சூடியுள்ளார்.

சிறந்த ஆடவர் அணிக்கான பயிற்றுவிப்பாளர் விருதை ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபியூண்டே வென்றார். மகளிர் பிரிவுக்கான சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதைப் பார்சிலோனாவின் பெரே ரோமியூ தட்டிச் சென்றார்.

ஸ்பெயின், அட்லெட்டிக் பில்பாவ் அணியின் உனாய் சைமன் சிறந்த ஆடவர் கோல்காப்பாளருக்கான விருதைப் பெற்றார். மகளிர் கோல்காப்பாளருக்கான விருது ஸ்பெயின், பார்சிலோனா அணியின் கட்டா கோலுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஆடவர் கிளப் விருதைப் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியும் சிறந்த மகளிர் கிளப் விருதை பார்சிலோனாவும் வென்றன. சிறந்த தாக்குதல் ஆட்டக்காரருக்கான விருதை (ஆடவர் பிரிவு) ஹேரி கேன் வெல்ல, சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராக (மகளிர் பிரிவு) சார்லின் கோரல் தேர்வு செய்யப்பட்டார்.மனிதாபிமானப் பணிகளுக்கான ‘சாக்ரட்டீஸ் விருது’ ஆர்சனல், இங்கிலாந்து அணியின் தாக்குதல் ஆட்டக்காரரான புகாயோ சாகாவுக்கு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்