அனைத்துலக நட்புமுறை காற்பந்து ஆட்டங்களுக்காகப் பிரேசிலிய அணியின் 25 வீரர்களில் சிலர் சிங்கப்பூரை வந்தடைந்துள்ளனர்.
தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்காகப் பிரேசிலிய வீரர்கள் கட்டங்கட்டமாக வருகைத் தருகின்றனர்.
பிரேசிலிய லீக் போட்டிகளில் விளையாடும் ஐந்து வீரர்கள் அடங்கிய முதல் தொகுதியினர் துபாயிலிருந்து சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1ல் வந்திறங்கினர். கேப்ரியல் பொன்டெம்போ, ஆர்தர் டயஸ், ஆன்ட்ரே லூயிஸ், ஜோனத்தன் ஜேசுஸ், பெட்ரோ மோரிஸ்கோ ஆகியோர் அவர்கள்.
விமான நிலையத்தின் வருகைப் பகுதியிலிருந்து வெளியேறிய அவர்கள், தங்களுக்காக அங்குக் காத்திருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஆர்சனல் குழுவின் பிரேசிலிய வீரர்களான கேப்ரியல் மகல்ஹேஸ், புரூனோ குய்மரேஸ் ஆகிய இருவரும் பின்னர் அணியுடன் இணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலாங் காற்பந்துத் தொடருக்கான பிரேசிலிய அணியில் ரியால் மட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர், பார்சிலோனாவின் ரஃபின்யா இருவருடன் எஸ்டெவாவ், என்ட்ரிக் போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு 2028 கோப்பா அமெரிக்கா, 2030 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை இலக்காகக் கொண்டு பிரேசிலிய அணியின் பயிற்றுவிப்பாளர் கார்லோ அன்செலோட்டி, 23 வயதிற்குட்பட்ட 15 வீரர்களைத் தேர்வுசெய்துள்ளார்.
செப்டம்பர், அக்டோபரில் ஆஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு எதிராக நடந்த நட்புமுறை ஆட்டங்களிலும் பிரேசிலிய அணியில் இருந்தவர்களில் 11 பேர் 23 வயதிற்குட்பட்டவர்கள்.
இம்மாதம் 14ஆம் தேதி ஜப்பானுடன் பொருதும் பிரேசில், மூன்று நாள்கள் கழித்து சிங்கப்பூர் அணியைச் சந்திக்கிறது.
