தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகச் சதுரங்கக் களத்தில் வாகைசூடக் காத்திருக்கும் இந்திய வீரர்

2 mins read
c0a4ca3e-6784-40e9-8833-acc03fe39171
இளம் இந்திய வீரர் கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ். - படம்: மரியா எமெலியாநோவா
multi-img1 of 2

இந்திய கிராண்ட்மாஸ்டரான குகேஷ் தொம்மராஜு, 18, உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் சீனாவின் டிங் லிரன் உடனான ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற காணொளி நேர்காணலில் பங்கேற்ற டி.குகேஷ், இந்த ஆண்டு இதுவரை சிறப்பாக அமைந்துள்ளது எனவும், எதிர்வரும் உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியைத் துவங்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.

செந்தோசாவில் நடைபெறவுள்ள இப்போட்டியில், உலக சாம்பியன் பட்டத்துக்காக இளம் இந்திய வீரர் கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், சீனாவின் டிங் லிரன் இருவரும் மோதவுள்ளனர்.

அது குறித்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற டி.குகேஷ், “பொதுவாக யார் வெல்வார் என்ற கணிப்புகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் யாரால் தம்மைச் சிறப்பாக வெளிப்படுத்த முடிகிறதோ, அவரே போட்டியில் வெல்லக்கூடும் என்பது என் எண்ணம்,” என்று தெரிவித்தார்.

செயல்பாட்டில் கவனம் செலுத்தி, தன்னால் இயன்ற அளவு சிறப்பாக விளையாட  முயல்வதாகக் கூறிய டி.குகேஷ், அதற்காகக் கடுமையாக உழைத்து வருவதாகவும் சொன்னார்.

உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதிப்பது அதில் இருக்கும் சவால்கள், நெருக்கடிகள், குறித்த தமிழ் முரசின் கேள்விக்குப் பதிலளித்த டி.குகேஷ், “உச்சநிலை போட்டிகளில் இந்தியாவைப்  பிரதிநிதிப்பது எப்போதுமே பெருமைக்குரியது. 

“பலவகையான அதிகபட்ச சவால்களை முந்தைய விளையாட்டுப் போட்டிகளில் கையாண்டுள்ளதால், இத்தகைய சவால்கள் பழக்கப்பட்டதுதான். எனினும், இந்த உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டி வேறுபட்ட அனுபவமாக இருக்கும் என்பது நிச்சயம்.

“அந்தப் புதிய அனுபவத்தைக் காண ஆர்வத்துடன் இருக்கிறேன். போட்டிகளில் ஏற்படும் சவால்கள், நெருக்கடிகளைப் பெரும்பாலும் அனுபவங்கள் வாயிலாகத்தான் சமாளிக்கிறேன்,” என்று விவரித்தார்.

இளம் சதுரங்க விளையாட்டு வீரராக இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டி.குகேஷ், அதில் சாதகம் மற்றும் பின்னடைவு இரண்டும் உள்ளன என்று தாம் கருதுவதாகச் சொன்னார்.

“இளையராக என்னிடம் அதிக ஆற்றல் உள்ளது, எனவே போட்டிகளில் நீண்ட நேரம் கவனத்துடன் இருப்பது எளிதாக இருக்கும். மேலும், இந்த விளையாட்டுக் களம் எல்லாமே எனக்குப் புதியது என்பதால் என்னால் இந்தத் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

“அதேவேளை மூத்த விளையாட்டு வீரர்களைப் போன்று அதிகளவிலான போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பதால், குறைந்த அனுபவம் பின்னடைவாக இருக்கலாம். ஆனாலும் இதுவரையிலும் அனைத்தும் சாதகமாக இருந்துள்ளது,” என்று குறிப்பிட்டார் டி.குகேஷ்.

சதுரங்க விளையாட்டில் ஈடுபட விரும்பும் உலகெங்கும் உள்ள சிறார்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் டி.குகேஷ், “சதுரங்க விளையாட்டு என்பது பொழுதுபோக்காக நீங்கள் கைக்கொள்ள ஏதுவான மிகவும் அருமையான போட்டி. இதனை ரசித்து மகிழுங்கள்,” என்றார்.

உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டி வரும் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15 வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்