சுவீடனில் நடந்த ரில்டன் கிண்ண (Rilton Cup) சதுரங்கப் போட்டியில் வாகை சூடினார். சிங்கப்பூரர் டேங் யீ ஹெங்.
154 பேரில் 104 இடத்தில் மட்டுமே இருக்கும் 18 வயது டேங், தன்னைவிட உயர்வான தரநிலையில் இருப்போருக்கு எதிரான ஆறு ஆட்டங்களில் வென்று மூன்றில் சமநிலை கண்டார்; ரில்டன் கிண்ணத்தை வென்றார். போட்டியின் யு2, 200 பிரிவில் அவர் வாகை சூடினார்.
போட்டிக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் டேங் பயிற்சியில் ஈடுபட்டார். “போட்டியில் பங்கேற்கச் சென்றபோது அதில் பங்கேற்ற பலருக்கு 400 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தேன். அதனால் என்னிடம் எதிர்பார்ப்பு அதிகம் இல்லை. விறுவிறுப்பான அனுபவமாக இருக்கும் என்று மட்டும்தான் நினைத்தேன்,” என்றார் டேங்.
முன்னாள் தேசிய சதுரங்க வீரரான டேங், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பக்கலோரேட் (baccalaureate) தேர்வுகளை எழுதி முடித்தார். ஜேடன் வோங் என்ற தனது நண்பரின் ஊக்குவிப்பில் போட்டியில் பங்கேற்றதாக டேங் தெரிவித்தார்.
ஜேடன் வோங்குடன் சேர்ந்து ரில்டன் போட்டியில்தான் கலந்துகொண்டதாக அவர் சொன்னார்.
சதுரங்கத்தில் தனக்கான புள்ளிகளை அதிகரித்து சுவீடனைச் சுற்றிப் பார்க்கும் எண்ணம் கொண்டிருந்த டேங்குக்கு ரில்டன் கிண்ணப் போட்டி அமோகப் பலனைத் தந்தது.